நீரிழிவால் ஏற்படும் பார்வை இழப்பைத் தடுக்க முடியும்.. புதுச்சேரி விஞ்ஞானி அசத்தல்!
நீரிழிவு நோயால் ஏற்படும் ரெட்டினா பாதிப்பு மற்றும் வயதுடன் கூடிய மாகுலர் சிதைவை முன்கூட்டியே கண்டறிந்து அதனை தடுக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார் புதுச்சேரி விஞ்ஞானி சுப்புலட்சுமி.

மத்திய அரசால் ஆண்டுதோறும் ஏப்ரல் 1 முதல் 7 வரை பார்வை இழப்பைத் தடுக்கும் வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. கண் பார்வை நலனின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பார்வை குறைபாடுகளை தடுக்கும் முறைகளை ஊக்குவிக்கவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
புதுச்சேரி விஞ்ஞானி அசத்தல் கண்டுபிடிப்பு:
உலகளவில் கோடிக்கணக்கானவர்களின் கண்களைப் பாதிக்கும் முதன்மை காரணிகளில், நீரிழிவு நோயால் ஏற்படும் ரெட்டினா பாதிப்பு மற்றும் வயதுடன் கூடிய மாகுலர் சிதைவு, குறிப்பிடத்தக்கவையாகும். இந்த நோய்களுக்கு சிகிச்சை முறைகள் மிக குறைவாக உள்ளன.
புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் உயிர்வேதியல் மற்றும் மூலக்கூறு உயிரியல் துறையை சேர்ந்த முனைவரும் விஞ்ஞானியுமான சுப்புலட்சுமி சிதம்பரம் தலைமையிலான குழு, இந்த நோய்களை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிய உதவும் புதிய வழிமுறைகளை ஆராய்ச்சி செய்து வருகிறது. இந்த ஆய்வின் முக்கிய கண்டுபிடிப்பு, ரெட்டினாவில் பாதிப்புகள் ஏற்படுவதற்கு முன்பே கண்ணீரில் நிகழும் மூலக்கூறு மாற்றங்களை அடையாளம் காணுவதாகும்.
செயற்கை நுண்ணறிவு இந்தியாவில் நீரிழிவு நோயால் ஏற்படும் ரெட்டினா பாதிப்புக்கான பரிசோதனையை வளர்ச்சியடையச் செய்துள்ளது. ஆனால், அது ரெட்டினாவில் உட்புற மாற்றங்கள் ஏற்பட்ட பிறகே நோயை கண்டறிய முடியும் என்று முனைவர் சுப்புலட்சுமி விளக்குகிறார். எங்கள் ஆய்வுக்குழு, ஆரம்பத்திலேயே கண்ணில் ஏற்படும் நுண் மூலக்கூறு மாற்றங்களை அடையாளம் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது என்று தெரிவித்தார்.
"பார்வை இழப்பைத் தடுக்க முடியும்"
அண்மையில் இவர்களின் ஆராய்ச்சி, நீரிழிவு நோயால் ஏற்படும் ரெட்டினா பாதிப்பு நோய்க்கான புதிய உயிரணுக் குறியீடுகளை கண்டறிந்துள்ளது. இது கண்ணீரில் உள்ள மிகச் சிறிய மூலக்கூறு மாற்றங்களை ஆராய்ந்து, நோயின் ஆரம்பக் கட்டத்ததை விரைவாகக் கண்டறிய உதவும்.
மிக நம்பகமான உயிரணுக் குறியீடுகள் கண்டறியப்பட்ட பிறகு, அடுத்த நிலையாக, எளிதில் பயன்படுத்தக்கூடிய, சிறிய பரிசோதனை உபகரணங்களை உருவாக்குவதே முக்கிய நோக்கமாகும். ஒரு சிறிய சாதனத்தில், ஒரு துளி கண்ணீரை வைத்து சில நிமிடங்களில் ரெட்டினா பாதிப்பு பரிசோதிக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் என்று முனைவர் சுப்புலட்சுமி கூறுகிறார். இது இரத்தச் சர்க்கரை அளவீட்டுப் கருவி போலவே, கண்ணின் நலனை கண்டறியும் சாதனமாக அமைய வேண்டும் என்று அவர் கூறினார்.





















