ஓசூர் அருகே காட்டு யானை தாக்கி வாலிபர் உயிரிழப்பு : காவல்துறையினர் தீவிர விசாரணை!
ஓசூர் அருகே காட்டு யானை தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர் அருகே காட்டு யானை தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை அருகேவுள்ள மரக்கட்டா வனப்பகுதியில் இன்று வனத்துறையினர் 50 க்கும் மேற்பட்ட காட்டு யானைகளை பட்டாசுகள் வெடித்து விரட்டும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 40க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் ஒரு குழுவாக தேன்கனிக்கோட்டை அஞ்செட்டி சாலையை கடந்து சென்றனது. அந்தநேரத்தில், பாதுகாப்பு கருதி வனத்துறையினர் சாலையில் போக்குவரத்தை நிறுத்தி பொதுமக்களை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். காட்டு யானைகள் சாலையை கடந்த பின்னர் அப்பகுதியில் போக்குவரத்தை வனத்துறையினர் அனுமதித்தனர்.
50 காட்டு யானைகளில் 40க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முதலில் ஒரு குழுவாக சாலையை கடந்து சென்றது. அதன் பின்னர் வந்த 10 காட்டு யானைகள் தேன்கனிக்கோட்டை அஞ்செட்டி சாலையை கடந்து செல்வதற்காக சாலை ஓரத்திற்கு வந்து நின்றுள்ளது. அப்போது தேன்கனிக்கோட்டையில் இருந்து அஞ்செட்டி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்ற அஞ்செட்டி ஏரிக்கோடி கொட்டாய் கிராமத்தை சேர்ந்த மருந்தக உரிமையாளர் அருள்குமார் (20) என்ற வாலிபர் சாலையோரம் யானைகள் நிற்பதை கவனிக்காமல் சென்றுள்ளார். அப்போது கூட்டத்தில் நின்ற ஒற்றை காட்டு யானை அவரை விரட்டி கொடூரமாக தாக்கியுள்ளது. இதில் அருள்குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து அவரை மீட்ட பொதுமக்கள் மற்றும் வனத்துறையினர் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அருள்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது அங்கிருந்தவர்களின் நெஞ்சை கரைத்தது. இந்த சம்பவம் குறித்து தேன்கனிக்கோட்டை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.