Ramadoss Statement: மனித ரத்தத்தில் பிளாஸ்டிக்: பயன்பாட்டை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை தேவை - ராமதாஸ்
தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தடுக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஏராளமான பணிகளை பசுமைத்தாயகம் அமைப்பின் மூலம் பாட்டாளி மக்கள் கட்சி செய்திருக்கிறது.
மனித உடலிலும், ரத்தத்திலும் பிளாஸ்டிக் மென்துகள்கள் இருப்பது ஆராய்ச்சியில் கண்டு பிடிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாகவும், பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை தேவை எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்ட முழு அறிக்கை:
மனித உடலிலும், ரத்தத்திலும் பிளாஸ்டிக் மென்துகள்கள் இருப்பது ஆராய்ச்சியில் கண்டு பிடிக்கப் பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. பிளாஸ்டிக்குகளால் மனித குலத்திற்கே ஆபத்து ஏற்படக்கூடும் என தெரியவந்த பிறகும் இந்த விஷயத்தில் நம்மிடம் விழிப்புணர்வு ஏற்படாதது வருத்தம் அளிக்கிறது.
ஹாலந்து நாட்டின் ஆம்ஸ்டர்டாம் நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் மனித ரத்தத்தில் 5 வகையான பிளாஸ்டிக் துகள்கள் கலந்துள்ளனவா? என்பதைக் கண்டறிய அண்மையில் ஆய்வுகள் நடத்தப்பட்டன. அந்த ஆய்வுக்காக 22 பேரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்ட நிலையில், அவர்களில் 17 பேரின் ரத்தத்தில் பிளாஸ்டிக் மென்துகள்கள் இருப்பது கண்டறியப்பட்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். அதாவது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களில் 77 விழுக்காட்டினரின் ரத்தத்தில் பிளாஸ்டிக் உள்ளது.
பிளாஸ்டிக்கால் மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை கணக்கில் கொண்டு பார்க்கும் போது, இந்த உண்மையை மனித குலத்தின் மீதான சாபமாகவே பார்க்க வேண்டியுள்ளது. உணவு, தண்ணீர், காற்று ஆகியவற்றில் பிளாஸ்டிக் மென்துகள்கள் கலந்திருப்பதாகவும், நாம் சுவாசிக்கும் போதும், உணவுகளை உட்கொள்ளும் போதும் நமது உடலுக்குள் சென்று உறுப்புகளின் மீது படிவதாகவும், பின்னர் ரத்தத்தில் கலப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். இவை அச்சமூட்டும் தகவல்கள் ஆகும்.
மனித உடல் உறுப்புகளிலும், ரத்தத்திலும் பிளாஸ்டிக் துகள்கள் கலக்கும் நிலை உருவாகும் என்பது ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான். ரத்தத்தில் பிளாஸ்டிக் துகள்கள் ஏற்கனவே கலந்திருக்கக் கூடும். அது குறித்த ஆய்வின் முடிவுகள் தான் இப்போது வெளியாகியிருக்கின்றன. ஆனாலும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களில் 77 விழுக்காட்டினரின் ரத்தத்தில் பிளாஸ்டிக் துகள்கள் கலந்திருப்பது கவலைக்குரிய ஒன்று தான். சுற்றுச்சூழல் சீர்கேடு அதிகம் இல்லாத ஐரோப்பிய நாடுகளிலேயே இந்த அளவுக்கு பிளாஸ்டிக் பொருட்கள் கலந்திருந்தால், பிளாஸ்டிக் பயன்பாடு மிக அதிகமாக இருக்கும் இந்தியா போன்ற நாடுகளின் நிலைமையை நினைக்கவே அச்சமாக உள்ளது. பிளாஸ்டிக் ஒழிப்பை தீவிரப்படுத்தினால் தான் நமக்கு அடுத்தடுத்து வரும் தலைமுறையினரையாவது காப்பாற்ற முடியும்.
இதற்குக் காரணம் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு கட்டுப்பாடின்றி அதிகரித்து வருவது தான். அறிவியலும், நாகரிகமும் வளர, வளர பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. குடிப்பதற்கான தண்ணீரையும், தேநீர், சாம்பார் உள்ளிட்ட உணவுப் பொருட்களையும் பாத்திரங்களில் வாங்கிச் சென்ற நிலை மாறி இப்போது அனைத்துக்கும் பிளாஸ்டிக் பைகளே பயன்படுத்தப்படுகின்றன. வெளியிலிருந்து பொருட்களை வாங்கச் செல்வதற்காக மஞ்சள் பைகளை எடுத்துச் சென்ற நிலைமை மாறி, அவற்றுக்கும் பிளாஸ்டிக் பைகள் தான் பயன்படுத்தப்படுகின்றன. எந்த இடத்தில் நின்று திரும்பி பார்த்தாலும், அங்கு குறைந்தது 5 பிளாஸ்டிக் பொருட்களை பார்க்க முடியும். அந்த அளவுக்கு நமது மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் பிளாஸ்டிக் பொருட்கள் நீக்கமற நிறைந்திருக்கின்றன.
உலகெங்கும் கடந்த 70 ஆண்டுகளில் 900 கோடி டன் பிளாஸ்டிக் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அவற்றில் 700 கோடி டன் குப்பையாக நிலத்திலும் நீரிலும் வீசப்பட்டுள்ளது. மீதமுள்ள பிளாஸ்டிக் தீயில் எரிக்கப்பட்டு, கொடிய நச்சுக்காற்றாக மாற்றப்பட்டுள்ளது. உலகெங்கும் உற்பத்தி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கில் வெறும் 9 விழுக்காடு மட்டுமே மறுசுழற்சி செய்யப்பட்டது. 1950-ஆம் ஆண்டில் 20 லட்சம் டன்னாக இருந்த ஆண்டு பிளாஸ்டிக் உற்பத்தி, 2020-ஆம் ஆண்டில் 37 கோடி டன்னாக அதிகரித்து விட்டது. இது 2050-ஆம் ஆண்டில் 100 கோடி டன்னாக பெருகி விடும். அப்போது கடலில் உள்ள மீன்களின் எடையை விட, பிளாஸ்டிக் குப்பையின் எடை அதிகமாக இருக்கும். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அது ஒட்டுமொத்த கடல் வளத்திற்கும் பேரழிவாகி விடும். இது கடல் ஆதாரங்களுக்கு மட்டும் மனித உடல் நலனுக்கும் சரி செய்ய முடியாத அளவுக்கு தீங்கை ஏற்படுத்தும்.
தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தடுக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஏராளமான பணிகளை பசுமைத்தாயகம் அமைப்பின் மூலம் பாட்டாளி மக்கள் கட்சி செய்திருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துதல், பன்னாட்டு கருத்தரங்குகளில் பங்கேற்று பிளாஸ்டிக் ஒழிப்பு திட்டங்களை வகுக்க ஆலோசனைகளை வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பிளாஸ்டிக் பொருட்களில் நுகர்வோர் பொருட்களை விற்பனை செய்து தமிழகத்தை பிளாஸ்டிக் குப்பை மேடாக மாற்றி வரும் நிறுவனங்களே அவற்றை சேகரித்து பாதுகாப்பாக அகற்றுவதை கட்டாயமாக்க சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. பலமுறை முகாம்களை அமைத்து பிளாஸ்டிக் கழிவுகளை வாங்கிக் கொண்டு அவற்றின் எடைக்கு எடை அரிசி வழங்குதல், பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணிப் பைகளை வழங்குதல் ஆகியவற்றை பசுமைத் தாயகம் அமைப்பு செய்திருக்கிறது. இவற்றில் பல நிகழ்ச்சிகளை நானே முன்னின்று நடத்தியுள்ளேன். ஆனாலும், பிளாஸ்டிக் ஒழிப்பில் எதிர்பார்த்த முன்னேற்றத்தை எட்ட முடியாதது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.
பிளாஸ்டிக் கழிவு உலகத் தீமையாக மாறி வரும் நிலையில், அதை அனைத்து நாடுகளும் இனைந்து அகற்ற வேண்டும். அதற்கான பிளாஸ்டிக் ஒப்பந்தம் 2024-ஐ உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தைகள் ஐக்கிய நாடுகள் அமைப்பின் மூலம் நடத்தப்பட்டு வரும் நிலையில், பிளாஸ்டிக்கை முழுமையாக ஒழிக்கும் வகையில் ருவாண்டா - பெரு நாடுகள் உருவாக்கிய வரைவு ஒப்பந்தம் முழுமையாக இருப்பதால் அதை இந்தியா ஆதரிக்க வேண்டும். தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மட்டுமின்றி அனைத்து வகையான பிளாஸ்டிக்குகளையும் அரசு தடை செய்ய வேண்டும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்