மேலூருக்கு ஒரு நீதி, கடலூருக்கு ஒரு நீதியா?... முதல்வர் இதற்கு பொங்காதது ஏன்? - அன்புமணி கேள்வி
டெல்டாவுக்கும், மேலூருக்கும் ஆதரவாக வீராவேசம் காட்டுவதிலிருந்தே அவருடைய மாற்றந்தாய் மனப்பான்மையை புரிந்து கொள்ள முடியும் - அன்புமணி
டங்ஸ்டன் சுரங்கத்திற்கு பொங்கும் முதல்வர் நிலக்கரி சுரங்கத்திற்கு பொங்காதது ஏன்? மேலூருக்கு ஒரு நீதி, கடலூருக்கு ஒரு நீதியா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுபியுள்ளார்.
இதுகுறித்து அவர் அறிக்கையில் கூறுகையில், மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த அரிட்டாப்பட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அனுமதிக்க மாட்டேன்; அவ்வாறு அமைக்கும் நிலை வந்தால் பதவியிலிருந்து விலகிவிடுவேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரவையில் அறிவித்திருக்கிறார். டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக போராடும் மக்களின் உணர்வுகளை மதித்து இத்தகைய நிலைப்பாட்டை முதலமைச்சர் எடுத்தது சரியானது தான். ஆனால், கடலூர் மாவட்டத்தில் லட்சக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்து, சுற்றுச்சூழலை சீரழிக்கும் என்.எல்.சி சுரங்கத்திற்கு எதிராக இதே உணர்வை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிப்படுத்தாதது கடலூர் மக்களுக்கு அவர் இழைக்கும் துரோகத்தையும், இரட்டை வேடத்தையும் அம்பலப்படுத்தியுள்ளன.
வேளாண் நிலங்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தும் எந்தத் திட்டத்தையும் தமிழ்நாட்டில் செயல்படுத்தக் கூடாது என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு. அந்த அடிப்படையில் தான் மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டி பகுதியில் 2015 ஏக்கரில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க தூத்துக்குடி பகுதியை சீரழித்த வேதாந்தா குழுமத்தின் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்ததற்கு பா.ம.க. முதன்முதலில் எதிர்ப்பு தெரிவித்தது. இந்தத் திட்டத்திற்கு தொடக்கத்தில் ஆதரவாக இருந்த திமுக அரசு, மக்களிடம் எதிர்ப்பு எழுந்தவுடன் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததையும் நான் அம்பலப்படுத்தினேன்.
அதே நோக்கத்துடன் தான் தமிழக சட்டப்பேரவையில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தையும் பாட்டாளி மக்கள் கட்சி ஆதரித்தது. போராட்டத்தின் வாயிலாகத் தான் டங்ஸ்டன் சுரங்கத்தை விரட்டியடிக்க முடியும் என்றால், 15 ஆண்டுகளுக்கு முன் தூத்துக்குடி மாவட்டத்தில் 10,000 ஏக்கரில் அமைக்கப்படவிருந்த டாட்டா டைட்டானியம் ஆலைக்கு எவ்வாறு பா.ம.க. முற்றுப்புள்ளி வைத்ததோ, அதே போல் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டங்களை நடத்தி சாதிக்கவும் பா.ம.க. தயாராகவுள்ளது.
ஆனால், பாட்டாளி மக்கள் கட்சி இங்கு எழுப்பவிரும்பும் வினாக்கள் என்னவென்றால், டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம் அம்பலமானவுடன், நிலைமையை சமாளிக்க என்னையும் மீறி டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்பட்டால் முதலமைச்சர் பதவியிலிருந்தே விலகி விடுவேன் என ஆவேசம் காட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், நெய்வேலியில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்காக பல்லாயிரக்கணக்கான மண்ணின் மைந்தர்களின் நிலங்கள் வலுக்கட்டாயமாக பறிக்கப்பட்ட போது அதைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது ஏன்? அதுமட்டுமின்றி, மத்திய அரசை எதிர்ப்பது தான் தமது முதன்மைப் பணி என்று கூறிக் கொண்டிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், நிலக்கரி சுரங்க விவகாரத்தில் மட்டும் என்.எல்.சி நிறுவனத்துடன் கூட்டணி அமைத்துக் கொண்டு கதிர் விடும் நிலையில் இருந்த நெற்பயிர்களை வயலில் எந்திரங்களை இறக்கி, கருவுற்ற தாயை கொலை செய்வதைப் போன்று, அழித்தது ஏன்? என்பன தான்.
சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இத்தகைய சவால்களை விடுப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன் காவிரி பாசன மாவட்டங்களில் நிலக்கரி சுரங்கங்கள் அமைக்கப்படும் என்று அறிவித்த மத்திய அரசு, அதற்கான ஏல அறிவிப்பை வெளியிட்டது. அது தொடர்பாக சட்டப்பேரவையில் 05.04.2023&ஆம் நாள் நடைபெற்ற விவாதத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘‘நானும் டெல்டாக்காரன் தான். நிலக்கரி சுரங்கம் அமைக்க அனுமதிக்க மாட்டேன்’’ என்று வீராவேசம் காட்டினார். ஆனால், நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் புதிய சுரங்கம் மற்றும் சுரங்க விரிவாக்கத்திற்கு நிலம் எடுக்கும் விவகாரத்தில் மட்டும் பெரு நிறுவனத்தின் முகவராக மாறி மக்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவது ஏன்? கடலூர் மாவட்ட மக்கள் மீது அவருக்கு அப்படியென்ன வன்மம்? கடலூர் மாவட்டமும் அவரது அதிகார வரம்புக்குள் தான் வருகிறது என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மறந்து விட்டாரா?
தமிழ்நாட்டில் அனைத்து நிலம் எடுப்பு முயற்சிகளையும் விட முதன்முதலில் எதிர்க்கப்பட வேண்டியது என்.எல்.சி சுரங்கத்திற்காக நிலம் கையகப்படுத்தும் திட்டம் தான். அங்கு தான் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரை வருமான கொடுக்கக்கூடிய, ஏக்கருக்கு ரூ.2 கோடி விலை பெறக் கூடிய நிலங்கள் என்.எல்.சிக்காக அடிமாட்டு விலைக்கு பறிக்கப்படுகின்றன; அங்கு தான் 60 ஆண்டுகளுக்கு முன் நிலம் கொடுத்தவர்களின் குடும்பங்களுக்கு இன்று வரை வேலை வழங்கப்படவில்லை; அங்கு தான் நிலக்கரி சுரங்கத்திலிருந்து வெளிவரும் இராசயனங்களால் மாவட்டம் முழுவதும் உள்ள 30 லட்சம் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்; அங்குள்ள நிலத்தடி நீரில் தான் அனுமதிக்கப்பட்ட அளவை விட 250 மடங்கு அதிக பாதரசம் கலந்து இருக்கிறது; அந்த மாவட்டத்தைத் தான் தாதுக்கள் வெட்டி எடுக்கப்படுவதால் முழுமையாக பாதிக்கப்பட்ட மாவட்டமாக தாது அறக்கட்டளை அறிவித்துள்ளது; அங்கு தான் 8 அடியில் இருந்த நிலத்தடி நீர்மட்டம் 1000 அடிக்கும் கீழ் சென்றிருக்கிறது;
அங்குள்ள மக்களுக்குத் தான் நிலக்கரி சுரங்கங்களால் உயிருக்கு ஆபத்தான நோய்கள் ஏற்படுகின்றன. இவ்வளவு மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்.எல்.சி நிறுவனத்தை தமிழ்நாட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவளிக்காக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், டெல்டாவுக்கும், மேலூருக்கும் ஆதரவாக வீராவேசம் காட்டுவதிலிருந்தே அவருடைய மாற்றந்தாய் மனப்பான்மையை புரிந்து கொள்ள முடியும். அனைவருக்குமான முதல்வர் என்பதையே அவர் மறந்து விட்டார்.
அதுமட்டுமின்றி, மற்ற வகைகளிலும் கடலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களை அவர் சமமாக நடத்தவில்லை. சென்னை மாநகரமும், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களும் கடந்த ஆண்டு கடுமையான மழையால் பாதிக்கப்பட்ட போது, அங்குள்ள மக்களுக்கு ரூ.6,000 வீதம் நிவாரண நிதி வழங்கிய தமிழக அரசு, இப்போது கடுமையான மழை, சாத்தனூர் அணையை முன்னறிவிப்பின்றி திறந்து விட்டதால் ஏற்பட்ட வெள்ளம் ஆகிய இரு வகையான பாதிப்புகளை எதிர்கொண்டுள்ள பாவப்பட்ட கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களுக்கு ரூ.2,000 மட்டுமே நிவாரண நிதி வழங்குகிறார். இது என்ன அநீதி?
ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் அனைத்து மக்களுக்கும் பொதுவானவராக இருக்க வேண்டும். ஆனால், நானும் டெல்டாக்காரன், மேலூருக்கு சிக்கல் என்றால் பதவி விலகுவேன் என்று முழங்கும் முதலமைச்சர், வட மாவட்டங்கள் என்றால் மட்டும் வன்மத்துடன் நடந்து கொள்வது சரியல்ல. அனைவரையும் ஒன்றாய் பார்க்கும் மனநிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்; அரிட்டாப் பட்டியை அழிக்கும் டங்ஸ்டன் சுரங்கமாக இருந்தாலும், கடலூர் மாவட்டத்தை சீரழித்து வரும் என்.எல்.சி நிறுவனமாக இருந்தாலும் தமிழ்நாட்டிலிருந்து விரட்டியடிக்க வேண்டும். என்.எல்.சிக்காக கையகப்படுத்தப் பட்ட நிலங்கள் முழுவதையும் மீண்டும் உழவர்களுக்கே வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.