விவேகானந்தர் தியானம் செய்த அதே இடத்தில் பிரதமர் மோடி! வைரலாகும் வீடியோ!
விவேகானந்தர் சிலைக்கு மரியாதை செலுத்தி விட்டு தியான மண்டபத்துக்கு சென்று இன்று மாலை 6 மணி அளவில் தியானத்தை தொடங்கினார் பிரதமர் மோடி.
மக்களவை தேர்தல் நடைபெறும் போதெல்லாம் நாட்டின் சிறப்புமிக்க கோயில்களுக்கு சென்று வழிபடுவதையும் தியானம் மேற்கொள்வதையும் பிரதமர் மோடி வழக்கமாக கொண்டுள்ளார்.
அந்த வகையில் இந்த முறை பிரதமர் மோடி கன்னியாகுமரியை தேர்வு செய்துள்ளார். அதன்படி இன்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரத்துக்கு வந்த பிரதமர் மோடி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வந்தடைந்தார்.
தியானத்தை தொடங்கிய பிரதமர்: பின்னர், பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழக படகு தளத்துக்கு சென்று தனிப்படகு மூலம் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை அடைந்தார். அங்கு விவேகானந்தர் சிலைக்கு மரியாதை செலுத்தி விட்டு தியான மண்டபத்துக்கு சென்று இன்று மாலை 6 மணி அளவில் தியானத்தை தொடங்கினார்.
#WATCH | Prime Minister Narendra Modi arrives at Vivekananda Rock Memorial in Kanyakumari, Tamil Nadu
— ANI (@ANI) May 30, 2024
He will meditate from 30th May evening to 1st June evening.
PM Modi will meditate day and night at the same place where Swami Vivekanand did meditation, at the Dhyan… pic.twitter.com/7QfKkvRLLN
அங்கேயே தங்கியிருந்து வரும் நாளை மறுநாள் வரை தியானம் செய்கிறார். இதற்காக விவேகானந்தர் மண்டபத்தில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாளை மறுநாள் மதியம் 3 மணிக்கு திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்தி தியானத்தை நிறைவு செய்கிறார். பிறகு, தனி படகு மூலம் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழக படகு தளம் வந்து சேர்கிறார்.
அங்கிருந்து காரில் ஏறி அரசு விருந்தினர் மாளிகையில் உள்ள ஹெலிகாப்டர் தளத்துக்கு வருகிறார். பிறகு பிற்பகல் 3.25 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் புறப்பட்டு செல்கிறார். மாலை 4.05 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும் அவர் 4.10 மணிக்கு விமானம் மூலம் டெல்லி புறப்படுகிறார். இரவு 7.30 மணிக்கு டெல்லியை சென்றடைகிறார்.
பாதுகாப்பு வளையத்தில் குமரி: பிரதமர் மோடி தங்கியிருந்து தியானம் மேற்கொள்ள இருப்பதை முன்னிட்டு, கன்னியாகுமரியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, மாவட்டம் முழுவதும் காவல்துறையின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. விவேகானந்தர் மண்டபம் பகுதியில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கடல் பகுதிகளில் அசம்பாவிதங்களை தவிர்க்க கடலோர காவல் படையினர் கடந்த இரண்டு தினங்களாகவே இரவு, பகலாக கடலோர காவல்படை படகுகள் மற்றும் கப்பல்கள் மூலம் ரோந்து மூலம் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்திய கடற்படைக்கு சொந்தமான 2 கப்பல்களும் விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து சிறிது தொலைவில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து சுமார் 5 கி.மீ. சுற்றளவுக்கு கடல் பகுதியில் மீனவர்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.