பொய் சொல்வதற்கு கூட ஒரு குறைந்தபட்ச அறிவு வேண்டும் - நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் காட்டம்!
நான் கூட்டத்திற்கு செல்லாதது, இல்லாத விழாவிற்காகவா? அல்லது நான் எப்போதும் புறக்கணிக்கும் தனிவிமானம் இல்லாததாலா? அநாகரீகமாக எனது மனைவியை பற்றி பேசுவதை நிறுத்திக்கொள் - பிடிஆர்
வளைகாப்பு சர்ச்சை: முன்னதாக, மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், "17-ஆம் தேதி அன்று கூட்டம் நடைபெறும் நிலையில், பத்தாம் தேதிக்குமேல்தான் தகவல் கூறப்பட்டது. கூட்டத்தில் விவாதிக்கப்படும் கருப்பொருள்கள் குறித்த தகவல்கள் மேலும் தாமதமாக தரப்பட்டது. முன்கூட்டியே சில பணிகளுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுவிட்டது. எனவே அதை ரத்துசெய்து விட முடியவில்லை. உதாரணத்துக்கு, இப்போது இந்த செய்தியாளர் சந்திப்பை முடித்துக்கொண்டு நேரடியாக, வளைகாப்பு நிகழ்ச்சிக்கு ஒன்றுக்கு செல்ல இருக்கிறோம். எனவே எல்லாவற்றையும் சேர்த்து வைத்து இந்த முடிவை எடுத்துள்ளோம்" என்று காமெடியாக பதிலளித்தார்.
பிடிஆர்-ன் இந்த கருத்து சமூக ஊடகங்களில் பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கியது.
பத்திரிகையாளர் ஆர். ராஜகோபாலன் என்பவர் தனது ட்விட்டரில் , "டெல்லியில் நடக்கும் ஜிஎஸ்டி கூட்டத்தில் கலந்துகொள்ள முதல்வரிடம் பிடிஆர் தனி விமானம் கேட்டுள்ளார். அதற்கு, முதல்வர் மறுப்புத் தெரிவிக்கவே, பிடிஆர் டெல்லி செல்லவில்லை. இது, முழுக்க முழுக்க ஈகோ சம்பந்தப்பட்ட விசயம்" என்று தெரிவித்தார்.
2 pics show the effects of drinking too much cow-urine
— Dr P Thiaga Rajan (PTR) (@ptrmadurai) September 19, 2021
Reality:
I fear small craft & refuse "Special Flights" (pic 1)
I have no Sister-in-law (pic 2)
The meeting was in Lucknow not Delhi (pic 2)
Now imagine the morons who reply/like as they such clowns as "intellectuals"🤦♂️🤦♂️ pic.twitter.com/IhU21Rz5Br
இதற்குப் பதில் தாக்குதல் கொடுத்த பி.டி.ஆர், "வடிகட்டிய முட்டாள்தனம். கூட்டம் நடந்தது டெல்லியில் இல்லை லக்னோவில். எனக்கு கொழுந்தியாள் இல்லை, எப்படி இல்லாதவர் மகளுக்கு விழா நடக்கும். பொய் சொல்வதற்கு கூட ஒரு குறைந்தபட்ச அறிவு வேண்டுமடா மாட்டு மூத்திரம் குடித்தே மூளை கெட்டுப் போனவர்களா" என்று தெரிவித்தார்.
மேலும் மற்றொரு பதிவரின் ட்விட்டர் ரிப்ளைக்கு பதிலளித்த அவர், ஒன்றுக்கொன்று முரண்பாடான 2 பொய்களை சொல்ற முட்டாள்களே நான் கூட்டத்திற்கு செல்லாதது இல்லாத விழாவிற்காகவா? அல்லது நான் எப்போதும் புறக்கணிக்கும் தனிவிமானம் இல்லாததாலா? கூட்டம் டெல்லியிலா? லக்னோவிலா? அநாகரீகமாக எனது மனைவியை பற்றி பேசுவதை நிறுத்திக்கொள், மாட்டுச்சாண மூளை கொண்டவரே" என்றும் தெரிவித்தார்.
பிடிஆர் கலந்து கொண்டது சமுதாய வளைகாப்பு விழா:
ஜிஎஸ்டி கூட்டம் நடைபெற்ற நாளான 17 அன்று, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மதுரையில் நடைபெற்ற கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு விழாவில் கலந்து கொண்டார்.
கடந்த 17-ஆம் தேதி நாளன்று, மதுரை மாவட்டம் ஆரப்பாளையம் சிவபாக்கியா மஹாலில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம் சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இதில், நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சு.வெங்கடேசன், தெற்கு சட்டமன்ற உறுப்பினர் திருமு.பூமிநாதன் அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில், கர்ப்பிணி தாய்மார்களுக்கு அரசின் சார்பில் சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டன.
முன்னதாக, எப்படியாவது, ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டும்தான், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, பொருட்கள் மற்றும் சேவைகள் வரியின் வரம்பிற்குள் கொண்டு வரவேண்டும் என்று திமுக தெரிவித்ததாக அதிமுக ஒருங்கினைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த 17-ஆம் தேதி, லக்னோவில் நடைபெற்ற பொருட்கள் மற்றும் சேவைகள் வரிக்கான 45-வது கவுன்சில் கூட்டத்தில், பெட்ரோல் மற்றும் டீசலை சரக்குகள் மற்றும் சேவைகள் வரி வரம்பிற்குள் கொண்டு வருவதை தமிழ்நாடு ஏற்க மறுத்தது. இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "மாநில சுயாட்சி, நீட் தேர்வு ரத்து, அண்டை மாநிலங்களுடனான நதிநீர்ப் பிரச்சனை என எந்தப் பிரச்சனையாக இருந்தாலும், ஆட்சியில் இல்லாத போது ஒரு பேச்சு, ஆட்சியில் இருக்கும் போது ஒரு பேச்சு என்பது தி.மு.க.வுக்கு கைவந்த கலை.
அந்த வகையில், தற்போது பெட்ரோலியப் பொருட்களை சரக்குகள் மற்றும் சேவைகள் வரிவரம்பின் கீழ் கொண்டு வருவது குறித்து தனது நிலைப்பாட்டை தமிழ்நாடு அரசு தெரிவித்து இருக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்பட வேண்டுமென்றால், அவற்றை பொருட்கள் மற்றும் சேவைகள் வரியின் வரம்பிற்குக் கீழ் கொண்டு வர வேண்டும் அல்லது அதற்கான ஆயத் தீர்வை குறைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்தச் செய்தி 25-01-2018 அன்று அனைத்துப் பத்திரிகைகளிலும் வெளி வந்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக, 04-04-2018 அன்று தனது டிவிட்டர் பக்கத்தில், பொதுமக்களின் சுமையை குறைக்கும் வகையில், பெட்ரோலியப் பொருட்களை, சரக்குகள் மற்றும் சேவைகள் வரி வரம்பின்கீழ் கொண்டு வர வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியவர் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், தற்போதைய முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின்.
I strongly condemn frequent price hike of petrol and Diesel that terribly affects the common man. I urge the govt to revert back the decision and bring petro products under GST to ease the burden of common people. #petrolpricehike
— M.K.Stalin (@mkstalin) April 4, 2018
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், பெட்ரோலியப் பொருட்களை, பொருட்கள் மற்றும் சேவைகள் வரி வரம்பின்கீழ் கொண்டு வர வேண்டும் என்பதுதான் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தேர்தலுக்கு முந்தைய தி.மு.க.வின் நிலைப்பாடு.
இந்த நிலைப்பாடு, தி.மு.க. ஆட்சிக்கு வந்தபிறகு மாறிவிட்டது. லக்னோவில் நடைபெற்ற பொருட்கள் மற்றும் சேவைகள் வரிக்கான 45-வது கவுன்சில் கூட்டத்தில், கேரள உயர் நீதிமன்ற உத்தரவின்படி, 'பெட்ரோல் மற்றும் டீசலை சரக்குகள் மற்றும் சேவைகள் வரி வரம்பிற்குள் கொண்டு வருவது குறித்த தீர்மானம் பரிசீலிக்கப்பட்டு, அதனை பல்வேறு மாநிலங்கள் ஏற்க மறுத்ததால், அந்தத் தீர்மானம் நிராகரிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில், தி.மு.க. சார்பில் நிதி அமைச்சர் அவர்கள் கலந்து கொள்ளாவிட்டாலும், அவர் மத்திய நிதி அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில், "மாநிலங்களின் சொந்த வருவாயை நிர்வகிப்பதில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மாநில வரிவிதிப்பு மட்டுமே தற்போது உள்ளது என்றும், இதையும் ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் கொண்டு வந்தால் மாநிலங்களுக்கு சொந்த வரி வருவாய் என்பதே இல்லாமல் போய்விடும் என்றும், அதனால் இதுபோன்ற சிறிய அதிகாரங்களை இழக்க விரும்பவில்லை" என்றும் தெரிவித்து இருப்பதாக பத்திரிகைகளில் செய்தி வெளிவந்துள்ளது.
அதாவது, பொருட்கள் மற்றும் சேவைகள் வரி வரம்பின் கீழ் பெட்ரோலியப் பொருட்களை கொண்டு வருவதை தமிழ்நாடு அரசு எதிர்க்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தேர்தலுக்கு பிந்தைய தி.மு.க.வின் நிலைப்பாடு. இதன் விளைவாக, முதலமைச்சர் அவர்கள், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது, பொருட்கள் மற்றும் சேவைகள் வரி வரம்பின் கீழ் பெட்ரோலியப் பொருட்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது எப்படியாவது ஆட்சியைப் பிடித்து விடவேண்டும் என்பதற்காகத்தான் என்ற ஐயப்பாடு மக்கள் மனதில் ஏற்பட்டுள்ளது.
எனவே, முதலமைச்சர் இதில் உடனடியாக தலையிட்டு, பொதுமக்களின் சுமையை குறைக்கும் வண்ணம், பெட்ரோலியப் பொருட்களை சரக்குகள் மற்றும் சேவைகள் வரியின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுத்து தி.மு.க.வின் தேர்தலுக்கு முந்தைய நிலைப்பாட்டை நிலைநிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இது போன்ற நடவடிக்கை, பொதுமக்களின் சுமையை குறைப்பதோடு, பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் குறைப்பு, டீசல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு என்ற தி.மு.க.வின் வாக்குறுதியும் முழுமையாக நிறைவேற வழிவகுக்கும்".
இவ்வாறு, அந்த செய்திக் குறிப்பில் தெரிவித்தார்.
மேலும், வாசிக்க: petrol diesel GST : ஜிஎஸ்டி வரம்பிற்குள் பெட்ரோல் டீசல்.. எதிர்க்கும் தமிழ்நாடு.. என்ன காரணம்.? பிடிஆர் விளக்கம்!