petrol diesel GST : ஜிஎஸ்டி வரம்பிற்குள் பெட்ரோல் டீசல்.. எதிர்க்கும் தமிழ்நாடு.. என்ன காரணம்.? பிடிஆர் விளக்கம்!
மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளாத, மத்திய அரசால் விதிக்கப்படும் மேல்வரி மற்றும் கூடுதல் கட்டணங்களின் விகிதம் அதிகரித்துள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் நேற்று 45 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. புற்றுநோய் உள்ளிட்ட ஏழு உயிர்க் காக்கும் மருந்துகளுக்கான ஜிஎஸ்டி 12% த்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. உயிர்க் காக்கும் மருந்துகளான ஸோல்செல்ஸ்மா, வில்டெப்ஸோ ஆகிய இரண்டு மருந்து பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியிலிருந்து முழுவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில், தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொள்ளவில்லை. கூட்டத்தில், ஜிஎஸ்டி வரம்பிற்குள் பெட்ரோல், டீசல் கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக ஜிஎஸ்டி மன்றம் விரைவாக தன்னுடைய முடிவை தெரிவிக்க வேண்டும் என்று கேரள உயர்நீதிமன்றம் வழக்கு ஒன்றில் தெரிவித்திருந்தது. நேற்றைய கூட்டத்தில், தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல் மற்றும் டிசல் ஆகிய இரண்டையும் கொண்டு வர வேண்டாம் என்று கூறியுள்ளதால் இதை தற்போதைக்கு ஜிஎஸ்டியில் கொண்டு வரும் எண்ணமில்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். அத்துடன் இந்த முடிவு தொடர்பாக கேரள உயர்நீதிமன்றத்திற்கும் தெரிவிக்கப்படும் என்று நிதியமைச்சர் கூறினார்
அரசியலைப்பிலுள்ள ஜிஎஸ்டியின் விளக்கத்தின்படி மனிதன் உட்கொள்ளும் மதுவை GSTயிலிருந்து வெளியேற்றிவிட்டது. கச்சா பெட்ரோல், மோட்டார் எரிபொருள் (பெட்ரோல்), அதி வேசு டீசல், இயற்கை எரிவாயு மற்றும் விமான டர்பைன் எரிபொருள் ஆகிய ஐந்து பெட்ரோலியப் பொருட்களை GSTக்கு வெளியில் தற்காலிகமாக வைத்துள்ளது. எந்த தேதியிலிருந்து அவை GSTக்குள் சேர்க்க வேண்டும் என்பதை ஜிஎஸ்டி மன்றம் முடிவு செய்யும்.
ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வந்தால் என்ன நன்மை:
மத்திய அரசின் தற்போதைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணய கொள்கை மற்றும் விலை நிர்ணயம் செய்யும் உரிமையை எண்ணெய் நிறுவனங்களுக்கே வழங்கியுள்ளது. ஜி.எஸ்.டி. வரிகள் 5%, 12%, 18% மற்றும் 28% என நான்கு அடுக்கு வரிவிகித அமைப்பாக ஏற்கப்பட்டது. எனவே, ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வந்தால் பெட்ரோல்/டீசல் எரிபொருள் மீது அதிகபட்சமாக 28% வரிவிதம் மட்டுமே போடப்படும். எனவே, சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு உட்பட்டு, பெட்ரோல் டீசல் விலை லிட்டருக்கு சராசரியாக 70 ரூபாயாக குறைய நேரிடம்.
2014-ஆம் ஆண்டு முதல் கடந்த ஏழு வருடங்களில் பெட்ரோல் டீசல் மீதான மத்திய அரசின் வரி கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. 2014-ஆம் ஆண்டு மே மாதத்தில் லிட்டருக்கு ரூ.9.48 ஆக இருந்த பெட்ரோல் மீதான வரி மே 2021 மாதத்தில் லிட்டருக்கு ரூ.32.9 ஆக உயர்த்தப்பட்டுள்ளது அதாவது மத்திய அரசின் வரி 216% அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே போன்று, மாநில அரசின் 29% விற்பனை வரி ஒரு லிட்டர் பெட்ரோல் மீது வசூலிக்கிறது. எனவே, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாய் அளவில் விற்பனை செய்யப்படுகிறது.
மத்திய அரசிடம் இருந்து தமிழ்நாட்டிற்கு கிடைக்கும் வரிபங்கீடானது மற்ற மாநிலங்களை விட குறைவாக உள்ளது. இந்த சூழலில் பெட்ரோல் டீசல் மீதான வரியை மேலும் குறைப்பது என்பது அரசாங்கத்திகு பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்தும் என்று தமிழ்நாடு அரசு முன்னதாக தெரிவித்தது.
மாநில அரசு வருவாய் இழப்பு ஏற்படும்:
மத்திய வரிகளின் ஒட்டுமொத்த பகிர்வுத் தொகுப்பிலிருந்து மாநிலங்களுக்கான பங்கீட்டை 32 விழுக்காட்டிலிருந்து 42 விழுக்காடாக உயர்த்தப் பரிந்துரைத்த 14 ஆவது நிதிக்குழு பரிந்துரைத்தது, பரிந்துரை காலம் 2015–16 முதல் 2019-20 ஆகும். இது, மாநிலங்களுக்கு நிதி ஆதாரங்களை கணிசமான அளவில் பகிர்ந்து அளிக்கக்கூடிய மிகப்பெரிய சீர்திருத்தம் என பாராட்டப்பட்டது. இதன்படி, விருப்புரிமையற்ற பங்கீடு உண்மையில் அதிகரித்திருந்தாலும், மாநிலத்திற்கான மொத்த நிதி அளிப்பு உண்மையில் அதிகரிக்கவில்லை. இது குறைந்திருக்கவும் வாய்ப்புள்ளது என்று தமிழ்நாடு நிதியமைச்சகம் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
மத்திய திட்டக் குழுவை கலைத்தபோது, மத்திய அரசால் மாநிலங்களுக்குத் திட்ட மானியமாக வழங்கப்பட்டு வந்த பொதுவான மத்திய நிதியுதவி நிறுத்தப்பட்டது இதற்கு ஒரு காரணமாகும்.
மேலும், ஒன்றிய நிதியுதவி பெறும் திட்டங்களில் மாநில அரசுகளின் பங்களிப்பும் கணிசமான அளவு உயர்த்தப்பட்டது. ஒன்றிய அரசால் சில வரிகள் மீது விதிக்கப்படும் சலுகைகள் காரணமாக மாநிலங்களுக்கான நிதி அளிப்பும் குறைந்தன. 2017-18 ஆம் ஆண்டிற்கான ஒன்றிய வரவு செலவுத் திட்டத்தில் பெருநிறுவனங்களுக்கான வருமான வரி (Corporate Tax) விகிதம் குறைக்கப்பட்டது இதற்கு முக்கியக் காரணமாகும். இதனால், ஒட்டுமொத்த வரி வருவாயில் நேரடி வரிகளின் பங்கு குறைந்துள்ளது.
இதனால் மத்திய வரி வருவாயில் நேரடி வருவாயின் பங்கு அதிகரித்துக் கொண்டிருந்த நீண்டகால நிலையை மாற்றியுள்ளது. மேலும், பல்வேறு வரி பொருட்களின் மீது மேல்வரி மற்றும் கூடுதல் கட்டணங்கள் (Surcharge and Cess) விதிக்கும் நடைமுறையை ஒன்றிய அரசு அதிகமாகக் கையாண்டு வருகிறது. அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 270 மற்றும் 271 இன் கீழ், அத்தகைய வரி விதிப்புகள் பகிர்ந்தளிக்கப்படாது.
ஏன் ஜிஎஸ்டி கூட்டத்தில் கலந்து கொள்ள வில்லை: முன்னதாக, ஜிஎஸ்டி வரம்பிற்குள் பெட்ரோல், டீசல் கொண்டு வருவது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தயாகராஜன், " மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளாத, மத்திய அரசால் விதிக்கப்படும் மேல்வரி மற்றும் கூடுதல் கட்டணங்களின் விகிதம் அதிகரித்துள்ளது. இத்தகையை போக்கை மத்திய அரசு குறைத்துக் கொண்டால் தான், ஜிஎஸ்டி வரம்பிற்குள் பெட்ரோல், டீசல் கொண்டு வருவது தொடர்பான விவாதம் ஆக்கப்பூர்வமாக இருக்கும்" என்று தெரிவித்தார்.
மேலும், நேற்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "17ம் தேதி அன்று கூட்டம் நடைபெறும் நிலையில், பத்தாம் தேதிக்கு மேல்தான் தகவல் கூறப்பட்டது. கூட்டத்தில் விவாதிக்கப்படும் கருப்பொருள்கள் குறித்த தகல்வகள் அதைவிட தாமதமாக தரப்பட்டது. முன்கூட்டியே சில பணிகளுக்கு நேரம் ஒதுக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. எனவே அதை ரத்து செய்து விட முடியவில்லை. உதாரணத்துக்கு.. இப்போது இந்த செய்தியாளர் சந்திப்பை முடித்துக் கொண்டு நேரடியாக, வளைகாப்பு நிகழ்ச்சிக்கு ஒன்றுக்கு செல்ல இருக்கிறோம். எனவே எல்லாவற்றையும் சேர்த்து வைத்து இந்த முடிவை எடுத்துள்ளோம்" என்று காமெடியாக பதிலளித்தார்.