Perarivalan: "எல்லாத்துக்கும் காரணம் அம்மாதான்.." நெகிழ்ந்த பேரறிவாளன்.. கண்கலங்கிய அற்புதம்மாள்..!
பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட செய்தி வெளியானதும், அவர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்துள்ளார்.
பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட செய்தி வெளியானதும், அவர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்துள்ளார்.
இது குறித்து பேரறிவாளன் கூறும்போது, “எல்லாருக்கும் வணக்கம். அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப்படும் என்பது குறள். “அவ்விய நெஞ்சத்தான் ஆக்கம் அப்படி என்றால், கெட்டவன் மகிழ்ச்சியாக வாழுதல். நல்லவர்கள் வீழ்ந்து போகுதல். இது இரண்டையும் இந்த உலகம் பார்த்து கொண்டிருக்குமாம். காரணம் இது இயற்கையின் நீதி கிடையாது. இதற்கு மாறானதுதான் இயற்கையின் நீதி. அப்படித்தான் உலகத்தில் உள்ள அனைத்து தமிழகர்களும் பார்த்தனர். அதற்கு காரணம் என்னுடைய அம்மா. அம்மாவின் தியாகம், அம்மாவின் போராட்டம், வேதனை வலிகளை சந்தித்து உள்ளார். அதையெல்லாம் கடந்து 31 ஆண்டு காலம் இடைவிடாது போராடியிருக்கிறார். இவ்வளவையும் கடந்து அதற்கான வலிமையை கொடுத்தது எங்கள் பக்கம் இருந்த நியாயம்.
மாக்சிம் கார்க்கி தாயுடன் ஒப்பிட்ட பேரறிவாளன்
மாக்சிம் கார்க்கியின் தாயை நான் நான்கு முறை படித்திருக்கிறேன். என்னுடைய வாழ்கையின் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் அது எனக்கு ஒவ்வொரு உணர்வை கொடுத்திருக்கிறது. அதை நான் அம்மாவோடு ஒப்பிட்டு இருக்கிறேன். அதை நான் இதுவரை அம்மாவிடம் சொன்னதில்லை. காரணம் அதனால் எங்களுக்குள் இருக்கும் இயல்பான உறவு உடைந்து விடும் என்ற தயக்கம் இருந்தது. ஆனால் இதை நான் இப்போது சொல்ல நினைக்கிறேன். எனது குடும்பம் எனக்கு பெருந்துணையாக இருக்கிறது. இந்த சட்டப்போராட்டத்தில் ஒவ்வொரு முறை நான் எனது அம்மாவை பார்க்கும்போதுதான் அஞ்சுவேன். காரணம அவர்களுடைய தனிப்பட்ட வாழ்கையை திருடி விட்டேனே என்ற குற்ற உணர்வு என்னுள் இருக்கும். அவர்கள் உயிருடன் இருக்கும் போதே நான் விடுதலை ஆகவேண்டும் என்று நினைத்தேன். எல்லாரும் எங்களுக்காக அவர்களுடைய சக்தியை மீறி உதவியிருக்கிறார்கள்.
விடுதலையானார் பேரறிவாளன்
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி காந்தி கொலை வழக்கில் கடந்த 1991ம் ஆண்டு பேரறிவாளன் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கில் இருந்து தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று கடந்த 2016ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் மனுதாக்கல் செய்தார்.
தொடர்ந்து 9 மாதங்களாக பரோலில் இருந்த பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் ஜாமீன் வழங்கியது. அதனையடுத்து, பேரறிவாளன் தன்னை விடுதலை செய்யக்கோரி தொடர்ந்த வழக்கு ஏப்ரல் 27ம் தேதி விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கினை உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல். நாகேஸ்வரராவ், பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை செய்தது. பேரறிவாளன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், தமிழ்நாடு அரசின் சார்பில் ராகேஷ் துவிவேதி, மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நட்ராஜ் ஆகியோர் ஆஜராகி தங்கள் தரப்பு வாதங்களை வைத்தனர்.
விசாரணையின்போது, ``ஆளுநர், குடியரசுத் தலைவர் அதிகாரம் குறித்து விஷயங்களுக்குப் போகாமல் பேரறிவாளனை நாங்கள் ஏன் விடுவிக்கக் கூடாது. பேரறிவாளன் விவகாரத்தில் ஆளுநரின் பதில் ஒவ்வொரு முறையும் முரணாகவே உள்ளது. பேரறிவாளனை விடுவிப்பதே இந்த வழக்கை முடித்து வைக்க ஒரே தீர்வு என கருதுகிறோம். விடுதலை செய்வதில் யாருக்கு அதிகாரம் என்ற குழப்பத்தில் பேரறிவாளன் ஏன் சிக்க வேண்டும்.
அமைச்சரவையின் ஒவ்வொரு முடிவுக்கு எதிராகவும் மாநில ஆளுநர் செயல்பட்டால் அது கூட்டாட்சி கட்டமைப்புக்கே மிகப் பெரிய பாதகமாகிவிடும். அதுமட்டுமல்லாமல், மாநில அமைச்சரவையின் முடிவுகளுக்கு எதிராகச் சொந்த கண்ணோட்டத்தில் செல்ல ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. மேலும், மாநில அமைச்சரவை அனுப்பக்கூடிய பரிந்துரைகளைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப ஆளுநருக்கு என்ன அதிகாரம் உள்ளது" என்று நீதிபதிகள் சரமாரியாகக் கேள்வி எழுப்பினர்.
அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டு நடப்பதில் சில சிக்கல்கள் உள்ளன. இவ்வாறு செயல்படுங்கள் என்று ஆளுநருக்கு யாரும் அழுத்தம் தரமுடியாது இது மத்திய புலனாய்வு கையாண்ட விவகாரம். இதில் கருணை காட்ட வேண்டும் என்றாலோ முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டும் என்றாலோ அது மத்திய அரசின் வசம் தான் இருக்கிறது. தமிழ்நாடு அரசு தீர்மானம் நிறைவேற்றியிருந்தாலும் இந்த விவகாரத்தில் குடியரசுத் தலைவர் தான் முடிவெடுப்பார். தீர்மானத்தின் மீது முடிவெடுக்க ஆளுநரை யாரும் கட்டாயப்படுத்த முடியாது. அவர் என்ன முடிவெடுக்கிறாரோ அதன்படி தான் நடக்கும் என்று மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
ஆளுநரின் செயல்பாடு கூட்டாட்சி தத்துவத்தின் அடிபப்டையை அழிக்கும் வகையில் உள்ளது. பேரறிவாளன் மனுவை குடியரசுத் தலைவருக்கு அவர் அனுப்ப முடியாது; குடியரசுத் தலைவரை தொடர்புபடுத்தவும் முடியாது; தனக்கான கடமையை செய்யத் தவறியதோடு தேவையில்லாமல் குடியரசுத் தலைவரை இழுத்துவிட்டிருக்கிறார் ஆளுநர்; அமைச்சரவையின் முடிவுக்கு ஒப்புதல் தருவது ஆளுநரின் வேலை; அதை உடனே செய்யாமல் கிடப்பில் போட்டிருக்கிறார் ஆளுநர்; பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் அமைச்சரவையின் முடிவை ஏற்காமல் மிகப்பெரிய அரசியல் பிழையை ஆளுநர் செய்துவிட்டார் என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் கடுமையான வாதங்களை எடுத்து வைத்திருந்தனர்.
இறுதியாக, அனைத்துத் தரப்பு வாதங்களையும் எழுத்துப்பூர்வமாக அளிக்குமாறு உத்தரவிட்டிருந்த நீதிபதிகள் தீர்ப்பினை நாள் குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். இந்த நிலையில், இவ்வழக்கின் மீதான தீர்ப்பினை நீதிபதிகள் இன்று வழங்கினர்.
நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில், 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த பேரறிவாளன் விடுதலை விவகாரத்தின் மீது ஆளுநர் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தியதன் காரணமாக ஜாமீனில் உள்ள அவரை தங்களுக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி முழுமையாக விடுதலை செய்து நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான, போபண்ணா, கவாய் ஆகிய 3 பேர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது.