"காந்தியின் பெயரை நீக்கியவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்" டி.ஆர். பாலு ஆவேசம்!
"காந்தியின் பெயரை நீக்கியவர்களுக்கு, மக்கள் பாடம் புகட்டுவார்கள் என திமுக மூத்த தலைவர் டி.ஆர் பாலு பேச்சு"

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு, தாம்பரம் மாநகர திமுக சார்பில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. தாம்பரம் சண்முக சாலையில், சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். ராஜா தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், திமுகவின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர். பாலு கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
"அடுத்த தலைமுறையை வழிநடத்தத் தயாராகிவிட்டார் உதயநிதி"
மேடையில் உரையாற்றிய டி.ஆர். பாலு, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் செயல்பாடுகளை வெகுவாகப் பாராட்டினார். அவர் பேசுகையில்: "உதயநிதி ஸ்டாலின் மிகச் சிறப்பாக மக்கள் பணிகளை முன்னெடுத்துச் செல்கிறார். மக்களிடம் அவருக்குக் கிடைத்துவரும் பெரும் வரவேற்பு, அவர் அடுத்த தலைமுறையை வழிநடத்தத் தயாராகிவிட்டார் என்பதையே காட்டுகிறது. தீராத துணிவு, குறையாத ஆற்றல், தளராத உழைப்பு, தூய்மையான திட்டமிடல் என ஒட்டுமொத்தமாக ஒரு 'கலைஞராகவே' உதயநிதி ஸ்டாலின் திகழ்கிறார்," என்று புகழாரம் சூட்டினார்.
மத்திய அரசின் நிதிப் புறக்கணிப்பு
தமிழகத்திற்கான நிதி உரிமைகள் குறித்துப் பேசிய அவர், 100 நாள் வேலைத் திட்டத்திற்காகத் தமிழ்நாடு அரசு 1,089 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை வாங்கியுள்ளதாகவும், அதற்கான தொகையை மத்திய அரசு இதுவரை வழங்காமல் நிலுவையில் வைத்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.
மேலும், "ஆண்டுக்கு 30 கோடி மனித நாட்கள் வேலை வழங்குவதாகக் கூறிவிட்டு, திடீரென அதை 12 கோடி நாட்களாக மத்திய அரசு குறைத்துள்ளது. சட்டத்தை மாற்றிவிட்டதாகக் கூறி, கேட்ட நிதியையும் வேலைவாய்ப்பையும் வழங்க மறுக்கிறார்கள்," எனச் சாடினார்.
"காந்தியின் பெயரை நீக்கியது மன்னிக்க முடியாத பாவம்"
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் காந்தியின் பெயர் மறைக்கப்படுவது குறித்து டி.ஆர். பாலு கடும் கண்டனம் தெரிவித்தார். "மகாத்மா காந்தியின் பெயரைத் திட்டத்திலிருந்து நீக்கியதன் மூலம் நீங்கள் பெரிய பாவத்தைச் செய்துள்ளீர்கள். காந்தியின் பெயருக்கே களங்கம் விளைவிக்க நினைப்பவர்களை இந்த நாட்டு மக்கள் அரசியலில் இருந்தே அப்புறப்படுத்தத் தயாராகிவிட்டார்கள். இந்தச் செயலுக்காக நீங்கள் நிச்சயமாகப் பழிவாங்கப்படுவீர்கள்; மக்கள் உங்களுக்குத் தகுந்த பாடம் புகட்டுவார்கள்," என்று எச்சரிக்கை விடுத்தார்.
இந்த பொதுக்கூட்டத்தில் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்துகொண்டனர்.





















