Kalaignar Womens Assistance Scheme: குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்துள்ளீர்களா.. புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு ரூ.1000 கிடைக்குமா?
தமிழ்நாட்டில் புதியதாக விண்ணப்பித்த நபர்களுக்கு உடனடியாக குடும்ப அட்டை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் புதியதாக விண்ணப்பித்த நபர்களுக்கு உடனடியாக குடும்ப அட்டை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
உடனே ரூ.1000 கிடைக்காது..!
தமிழ்நாடு அரசு அறிவித்த மகளிர் உரிமைத் தொகை திட்டம் செப்டம்பர் 15ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. அந்த உதவித்தொகையை பெற பல்வேறு தரப்பினரும் புதிய குடும்ப அட்டைக்கு அதிகளவில் விண்ணப்பிக்க தொடங்கியுள்ளனர். இதுதொடர்பாக பேசியுள்ள உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் “பொதுமக்கள் புதிய குடும்ப அட்டைகளுக்கு விண்ணப்பிக்க எந்த தடையும் இல்லை. ஆனால் கள ஆய்வு தற்போது செய்ய வேண்டாம் என தெரிவித்துள்ளோம். வருவாய் ஆய்வாளர்கள், தாலுகா வழங்கல் அலுவலர்கள் இதற்கான தொடர் பணியை நிறுத்தி வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு அறிவித்துள்ள உரிமைத் தொகை திட்டத்தில் இதுவரையில் குடும்ப உறுப்பினர்களாக உள்ள மகளிருக்கு மட்டுமே ரூ.1000 எனும் உரிமைத்தொகை கிடைக்கும். புதியதாக விண்ணப்பிக்க கூடியவர்களுக்கு உடனடியாக உதவித் தொகை கிடைக்காது” என விளக்கமளித்துள்ளனர்.
மகளிர் உரிமைத்தொகை:
திமுக அளித்த தேர்தல் அறிக்கையின் அடிப்படையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் எனும் பெயரில் தகுதியான குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் வரும் செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கப்பட உள்ளது. இதற்காக நடப்பாண்டில் ஒரு கோடி பயனாளர்களுக்கான உதவித் தொகை வழங்க ரூ.7000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கான ஆரம்ப கட்டப் பணிகளும் தொடங்கிவிட்டன. பொது விநியோகத் திட்டத்தின் கீழ் செயல்படும் ரேஷன் கடைகள் வாயிலாக இதனை செயல்படுத்த முடிவு செய்து விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் குறித்த நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. விண்ணப்ப படிவங்கள் 20ம் தேதி முதல் வீடுதோறும் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகரிக்கும் குடும்ப அட்டைகளுக்கான விண்ணப்பம்:
திட்டம் தொடர்பான அற்விப்பை தொடர்ந்து, இதுவரை குடும்ப அட்டை பெறாதவர்களும் தற்போது புதியதாக விண்ணப்பிக்க தொடங்கியுள்ளனர். கூட்டு குடும்பத்தில் வசித்து வருபவர்களும் உரிமைத் திட்டத்தின் மூலம் பலன் கிடைக்கும் என்ற நோக்கில், புதிய குடும்ப அட்டைகளுக்கு விண்ணப்பிக்க தொடங்கியுள்ளனர். கடந்த சில நாட்களாக குடும்ப அட்டைகளில் பெயர் நீக்கம் மாநிலம் முழுவதும் அதிகரித்து வருவதாகவும், புதிய குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பிக்கும் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகம் முழுவதும் புதிய குடும்ப அட்டைக்கு தினமும் 500-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் ஆன்லைன் வழியாக பெறப்படுவதாகவும் கூறப்படுகிறது.
அதிகாரிகள் நடவடிக்கை:
இந்நிலையில் தான், புதியதாக குடும்ப அட்டைக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கொடுப்பதில் அரசுக்கு நெருக்கடி ஏற்படக்கூடும் என்பதால், புதிய குடும்ப அட்டைகளுக்கு விண்ணப்பிக்கலாம், ஆனால் அதனை செயல்படுத்துவதற்கான நடைமுறைகளை தற்போது மேற்கொள்ள வேண்டாம் என, உணவு பாதுகாப்புத் துறை சம்பந்தட்ட தாலுகா வழங்கல் அலுவலர், உதவி ஆணையர்களுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.