நாடாளுமன்ற தேர்தல் : விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 940 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 940 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
நாடாளுமன்ற தேர்தல்
நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று (17.04.2024) மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைகிறது. இந்நிலையில் தேர்தல் பிரச்சாரம் ஓய்வடைந்த பிறகு கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
சிறப்பு பேருந்துகள்
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு 17.04.2024 (புதன்கிழமை) மற்றும் 18.04.2024 (வியாழக்கிழமை) அன்று மக்கள் கிளாம்பாக்கம், மாதவரம் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திண்டிவனம், செஞ்சி, கடலூர். சிதம்பரம், நெய்வேலி, பண்ருட்டி, வடலூர், காட்டுமன்னார்கோயில், விருதாச்சலம், திட்டக்குடி, திருவண்ணாமலை, போளூர், வந்தவாசி, வேலூர், திருப்பத்தூர். தர்மபுரி, ஓசூர், ஆரணி, செய்யார் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய ஊர்களுக்கு அதிக அளவில் பயணம் செய்வார்கள் என்பதால் அதற்கு ஏதுவாக விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக கூடுதலாக 17.04.2024 (புதன்கிழமை) அன்று 450 மற்றும் 18.04.2024 (வியாழக்கிழமை) அன்று 490, மொத்தம் 940 சிறப்பு பேருந்துகளை மேற்கண்ட வழித்தடங்களில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இணையதளம் மூலம் முன்பதிவு
எனவே, பயணிகள் https://www.tnstc.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து இச்சிறப்பு பேருந்துகளை பயன்படுத்திக் கொள்ளலாம். அதேபோல் வார இறுதி விடுமுறையை முடித்து பொது மக்கள் பல்வேறு இடங்களிலிருந்து மீண்டும் சென்னை செல்ல ஏதுவாக 21.04.2024 உள்ளது. 500 சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட உள்ளது.
சூடுபிடிக்கும் பிரச்சாரம்:
எனவே ஏப்ரல் 18 அன்று கடைசி நேர கூட்ட நெரிசலில் பயணிப்பதை தவிர்த்து பயணிகள் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு ஏப்ரல் 16 மற்றும் ஏப்ரல் 17 ஆகிய நாட்களில் தங்களின் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுக்க ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் ஏப்ரல் 17ஆம் தேதி மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது. 18 ம் தேதி மாலைக்குள் வாக்கு பதிவு இயந்திரங்கள் வாக்கு பதிவு மையத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு பதிவு அன்று காட்டாயம் விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது தொழிலாளர் நலதுறை ஆணையர் வாயிலாக நடவடிக்கை எடுக்கபடும் என்றும் தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாஹு தெரிவித்துள்ளார்.