பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் பாட்டி காலமானார்!
கோயம்புத்தூர் தேக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த பாப்பம்மாள் பாட்டி உடல்நலக்குறைவால் காலமானார். இயற்கை விவசாயத்தில் பாப்பம்மாளின் பங்களிப்பை பாராட்டி அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கெளரவித்தது.
பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் பாட்டி இன்று காலமானார். இவருக்கு வயது 109. கோயம்புத்தூர் தேக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த பாப்பம்மாள் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இயற்கை விவசாயத்தில் பாப்பம்மாளின் பங்களிப்பை பாராட்டி கடந்த 2021ஆம் ஆண்டு, மத்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கெளரவித்தது.
கடந்த 17ஆம் தேதி சென்னையில் நடந்த விழாவில் பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் பாட்டிக்கு தமிழக அரசு தந்தை பெரியார் விருது வழங்கி கௌரவித்தது.
யார் இந்த பாப்பம்மாள்?
தேனாவரத்தில் பிறந்தவர் பாப்பம்மாள். கோயம்புத்தூர் மேட்டுப்பாளையத்தில் உள்ள தேக்கம்பட்டி கிராமத்திற்கு மூன்று வயதில் இடம்பெயர்ந்தார். தனது இறுதி மூச்சு வரை அங்கு தான் வசித்து வந்தார்.
பாப்பம்மாள், இளம் வயதிலேயே தன்னுடைய பெற்றோரை இழந்தார். பின்னர், இவருக்கும் இவரது அக்காவுக்கும் அவரது பாட்டி தான் அடைக்கலம் கொடுத்துள்ளார். முதன் முதலில் மளிகை கடையில் வேலை செய்துள்ளார். இவரது அம்மா, அப்பா வழியில் இவரும் மளிகை கடை வைத்து தனது வாழ்க்கையை தொடங்கியுள்ளார். தனது சமூகப் பணிக்காக மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது பெற்றுள்ளார்.
நாடு சுதந்திரம் பெற்றது முதல் நடைபெற்றுவரும் அனைத்து தேர்தல்களிலும் இவர் தவறாமல் வாக்களித்து வந்துள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கூட வாக்களித்தார்.