EPS meets Governor: கள்ளக்குறிச்சி விவகாரம்; தமிழகத்தில் உளவுத்துறை தோல்வி அடைந்துவிட்டதா? ஈபிஎஸ் சரமாரிக் கேள்வி
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி முறையிட்டுள்ளார்.
![EPS meets Governor: கள்ளக்குறிச்சி விவகாரம்; தமிழகத்தில் உளவுத்துறை தோல்வி அடைந்துவிட்டதா? ஈபிஎஸ் சரமாரிக் கேள்வி Opposition leader EPS meets Governor RN Ravi after Annamalai for asking CBI Probe in Kallakurichi Hooch Tragedy EPS meets Governor: கள்ளக்குறிச்சி விவகாரம்; தமிழகத்தில் உளவுத்துறை தோல்வி அடைந்துவிட்டதா? ஈபிஎஸ் சரமாரிக் கேள்வி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/25/b3a640b3447952118153714a74beabbc1719298377451332_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி முறையிட்டுள்ளார். அவருடன் 60-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களும் உடன் சென்றனர்.
60 பேர் பலி
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 60 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
CBCID விசாரணை
இச்சம்பவத்தில் விஷச்சாராய விற்பனையில் தொடர்புடைய 21 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட காவல் துறை அலுவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மாவட்ட ஆட்சித் தலைவர் பணியிட மாறுதல் செய்யப்பட்டார். இந்த வழக்கு CBCID வசம் ஒப்படைக்கப்பட்டது.
ரூ.10 லட்சம் நிவாரணம்
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா பத்து இலட்சம் ரூபாயும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்குத் தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்டது.
ஒரு நபர் ஆணையம் அமைப்பு
இதுபோன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் மீண்டும் நடைபெறாமல் இருக்க, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு ஆலோசனைகளை வழங்க, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் கோகுல்தாஸ் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
கருப்புச் சட்டை அணிந்துசென்ற அதிமுகவினர்
இந்த நிலையில் இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆளுநரைச் சந்தித்து கோரிக்கையை முன்வைத்தார். தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் இன்று ஆளுநரைச் சந்தித்தார். அவருடன் 60-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களும் உடன் சென்றனர். கருப்புச் சட்டை அணிந்துசென்ற அவர்கள், நியாயமான விசாரணை நடைபெறுவதை அரசு உறுதிசெய்ய, ஆளுநர் வலியுறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
முதலமைச்சர் பதவி விலக வேண்டும்
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, ''கள்ளக்குறிச்சி விவகாரத்துக்கு முதலமைச்சர் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும். ஒரு நபர் ஆணையத்தால் நியாயம் கிடைக்காது.
மெத்தனால் குடித்தால் சரி செய்யும் மருந்து மருத்துவமனையில் இல்லை. ஆனால் இதை பற்றி நான் பேசிய பிறகுதான் மருந்து கொண்டு வரப்பட்டுள்ளது. கள்ளச்சாராய மரணம் முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும் என்றால் சிபிஐதான் விசாரிக்க வேண்டும். மாநில அரசு காவல் துறை விசாரித்தால் நியாயம் கிடைக்காது.
உளவுத்துறை தோல்வி அடைந்துவிட்டதா?
ஆளுங்கட்சியின் ஆதரவுடன்தான் கள்ளச்சாராய விற்பனை நடந்து வருகிறது. கல்வராயன் மலையில் வனத்துறை அதிகாரிகளுக்கு தெரிந்துதான் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்படுகிறது. கள்ளச்சாராய விற்பனை குறித்து உளவுத்துறை தகவல் தெரிவிக்கவில்லையா? தமிழகத்தில் உளவுத்துறை தோல்வி அடைந்துவிட்டதா'' என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)