மு.க.ஸ்டாலினின் ஒரு மாத கால ஆட்சியும், அரசியல் நாகரிகமும் !
எதிர்ப்பு அரசியலுக்கும் பழிவாங்கும் அரசியலுக்கும் பழகிப்போய்விட்ட தமிழ்நாடு, இப்போது பழைய பண்பாட்டு அரசியலை கையில் எடுத்திருப்பது பெருவாரியான வரவேற்பை பெற்றுள்ளது. மு.க.ஸ்டாலினின் ஒரு மாத கால இந்த ஆட்சியில் அவரின் அரசியல் நாகரிக பண்புகளின் பட்டியல்...
மே 7 - தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்றார். இதுவரை தமிழக முதல்வராக பொறுப்பேற்றவர்களிலேயே அதிக வயதுக்குப் பிறகு பொறுப்பேற்றவர் ஸ்டாலின் தான். முதல்வரான பிறகு அவர் காட்டும் நிதானம், விவேகம், பொறுமை, அவரின் அனுபவத்தைக் காட்டுவதாகக் கட்சி பாகுபடுகள் இன்றி பாராட்டுகின்றனர்.
திமுக பெருவெற்றி பெற்ற அன்றே தனது ஆட்சி எப்படி இருக்கும் என்பதற்கான ஒரு ட்ரெய்லரைக் காட்டிய ஸ்டாலின். வெற்றி பெற்றதற்கு பலரும் வாழ்த்துக்கூறிய நிலையில், எதிர்க்கட்சியினர் கூறிய வாழ்த்துகளுக்கு ஸ்டாலின் தெரிவித்த நன்றியிலேயே அரசியல் நாகரிகத்தைக் காட்ட தொடங்கினார். பிரதமருடனும் பாஜகவுடனும் தீவிர எதிர்ப்பு பிரசாரத்தை முன்னெடுத்து வந்த ஸ்டாலின் மாநில வளர்ச்சிக்காக ஒன்றிய அரசுடன் இணைந்து செயல்படுவேன் என தன் நன்றியில் குறிப்பிட்டார். கருணாநிதியை அவமதிக்க மு.க.ஸ்டாலின் என்று சொன்னாலே போதும் என ஸ்டாலினை தேர்தல் பரப்புரைகளில் கடுமையாக சாடியிருந்த கமல்ஹாசன் கூறிய வாழ்த்துக்கு, தங்களின் ஆலோசனைகளும் புதிய அரசுக்கு உதவட்டும் என்று சொல்லி வியக்க வைத்தார் ஸ்டாலின். அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக களமிறங்கி இருந்த எடப்பாடி பழனிசாமியின் வாழ்த்துக்கு நன்றி கூறிய ஸ்டாலின், ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்ததே ஜனநாயகம், அந்த ஜனநாயகத்தைக் காப்போம். தமிழ்நாடு காக்க தங்களின் ஆலோசனைகளும் ஒத்துழைப்பும் தேவை என சொல்லி அதிமுகவினர் முகத்திலும் புன்முறுவல் பூக்கச் செய்தார். ஓ.பி.எஸ். கூறிய வாழ்த்துக்கும் தங்கள் ஒத்துழைப்பைத் தாருங்கள் என கேட்டுக்கொண்டார் அவர். தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் சொன்ன வாழ்த்துக்கு, ஆதரவையும் ஒத்துழைப்பையும் நல்குமாறு கேட்டுக்கொண்டார்.பாமக நிறுவனத்தலைவர் ராமதாஸிடம் தொலைபேசியில் பேசி, தனக்கு ஆலோசனை கொடுக்கும்படி கேட்டிருக்கிறார் ஸ்டாலின். பாமகவின் ஆலோசனைகளுக்கு முதல்வர் செவி மடுப்பதாக அன்புமணி ராமதாஸும் குறிப்பிட்டிருக்கிறார்.
பதவியேற்பு விழாவில் அதிமுக சார்பில் பங்கேற்ற அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் சபாநாயகர் தனபால் ஆகியோருக்கு முன்வரிசையில் இடம் அளித்து, அவர்களுடன் தேநீர் விருந்தில் கலந்துகொண்டது மக்கள் மத்தியில் வெகுவான பாராட்டைப் பெற்றது. ஜெயலலிதா 2016 இல் முதல்வராக பொறுப்பேற்ற நிகழ்வில் ஸ்டாலினுக்கு உரிய இடம் கொடுக்கப்படாதது விமர்சனங்களை எழுப்பி இருந்த நிலையில் முதல்வரின் செயல்பாடுகள் பாராட்டுகளைப் பெற்றன. அம்மா உணவகத்தில் யாரோ சில திமுகவினர் அராஜகத்தில் ஈடுபட்ட சில நிமிடங்களில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரை நிகழ்விடத்திற்கு அனுப்பி திமுகவினரால் கிழிக்கப்பட்ட போஸ்டர்கள், ஜெயலலிதா படங்களை மீண்டும் அதே இடத்தில் பொறுத்த வைத்து, தவறிழைத்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை பாய்வதை உறுதி செய்ததும் மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியது. ஸ்டாலின் முதல்வரான பின்பு கொண்டுவரப்பட்ட முக்கிய திட்டங்களான பேருந்துகளில் பெண்களுக்கான கட்டணமின்றி பயணிக்கும் திட்டம், கொரோனா நிவாரண நிதி ஆகியவற்றுக்கான டோக்கன் உள்ளிட்ட எந்தத் திட்டத்திலும் முதல்வரின் புகைப்படம் இடம்பெறாமல் பார்த்துக்கொண்டார் ஸ்டாலின். இதுவும் எதிர்க்கட்சியினரே பாராட்டும் அளவுக்கு இருந்தது.
கிரின்வேஸ் சாலையில் அமைச்சர்களுக்கான பங்களாவில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஒதுக்கப்பட்டிருந்த வீடான செவ்வந்தி இல்லம். தற்போது எதிர்க்கட்சி தலைவர் என்பதால் எடப்பாடி பழனிசாமி அதே வீட்டில் வசிக்க அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். இந்த அணுகுமுறையும் மக்களால் பாராட்டப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அதிகாரிகள் மாற்றம் என்பது வழக்கமானதுதான். ஆனாலும் ஆட்சி மாற்றத்துக்கு பிறகாக சுகாதாரத்துறை செயலாளராக அதிமுக அரசால் நியமிக்கப்பட்டிருந்த ஜெ.ராதாகிருஷ்ணனை அதே பொறுப்பில் தொடர்ந்து செயல்பட வைத்ததும் ஒரு நல்ல முன்னுதாரணமாக பார்க்கப்பட்டது. நீதிமன்றமே கூட இந்த விவகாரத்தில் தனது பாராட்டைத் தெரிவித்தது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், ஊரடங்கு குறித்து ஆலோசனை செய்வதற்காக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டினார் ஸ்டாலின். அவர் எதிர்க்கட்சியாக இருந்தபோது தொடர்ந்து சொன்னதில் முக்கியமானது இது. அதேபோல், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முதல்வர் தலைமையிலான அனைத்துக் கட்சி குழுவில், திமுகவினரால் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்ட முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு இடம் அளிக்கப்பட்டது மிகுந்த வரவேற்பை பெற்றது.
திமுகவை மிக அதிகமாக சமீப காலங்களில் விமர்சித்தவர் சீமான். அவரின் தந்தை மறைவுக்கு சீமானிடம் தொலைபேசியில் ஸ்டாலின் ஆறுதல் கூறியதும், நீங்க கூட இருக்கறது ரொம்ப பெருமையாக இருக்கிறது என ஸ்டாலினுக்கு நன்றி கூறிய சீமானின் வார்த்தைகளும் மனம் உருகும் படியாக இருந்தன. முதல்வராக பொறுப்பேற்ற பிறகு இரண்டாம் முறையாக ஆய்வுக்காக ஸ்டாலின் கோவைக்குச் செல்லும்போது, கோவையை திமுக புறக்கணிப்பதாகக் கூறி, GoBackStalin என்ற ஹேஸ்டைக்கை ட்ரெண்ட் செய்தனர் சிலர். அப்போது திடீரென, பிபிஇ கிட் அணிந்து கொரோனா நோயாளிகளை நேரில் சந்தித்து ஆறுதலும் நம்பிக்கையையும் அவர்களுக்குக் கொடுத்து அசத்தினார் ஸ்டாலின். அன்று செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எனக்கு வாக்களித்தவர்களின் நம்பிக்கையையும் வாக்களிக்காதவர்கள் இவருக்குப் போய் வாக்களிக்காமல் விட்டுவிட்டோமே என்று எண்ணும்படியாகவும் நடந்துகொள்வேன் என்று கூறி ஆஃப் செய்தார் அவர். முதல்வர் நிவாரண நிதிக்கு உதவிய சிறுவனிடம் தொலைபேசியில் பேசியது, தன்னை சந்திக்க காத்திருந்த இரவு நேர காவல் செக்யூரிடியை அழைத்து நேரில் சந்தித்தல், மனு கொடுக்க காத்திருந்தவர்களுக்காக கான்வாயை நிறுத்தி மனு பெற்றுக்கொள்ளுதல், தன் பயணங்களில் தன்னைப் பார்க்க கால்கடுக்க நின்றுகொண்டிருப்பவர்களிடம் கான்வாயில் இருந்து இறங்கிச் சென்று நலம்விசாரித்தல் என கிடைக்கும் இடங்களில் எல்லாம் சிக்ஸர் அடித்துக்கொண்டிருக்கிறார் முதல்வர்.
அதிகாரிகள், பத்திரிகையாளர்கள், பொதுமக்கள் என நல்ல ஆலோசனைகளை யார் தந்தாலும் செவி கொடுத்து செயலாக்கும் பண்பும், எதிர்க்கட்சியினரே ஆயினும் அவர்தம் நல்ல ஆலோசனைகளை அமலாக்கும் திறனும் எல்லோராலும் வெகுவாக ரசிக்கப்படுகிறது. தொடரட்டும் ஸ்டாலினின் அரசியல் நாகரிகம்! ஊர்கூடி தேர் இழுக்கட்டும்!!