(Source: ECI/ABP News/ABP Majha)
Diwali Special Bus: தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா.. இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. எங்கே? எப்போது? எப்படி பயணம் மேற்கொள்ளலாம்?
தீபாவளி பண்டிகை முன்னிட்டு இன்று முதல் போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
வரும் 12 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனால் மக்கள் தீபாவளி பண்டிகை முன்னிட்டு புத்தாடைகள், பட்டாசுகள் மற்றும் தேவையான பொருட்களை வாங்கி வருகின்றனர். கடை வீதிகள் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகின்றது. பலரும் சொந்த ஊர்களுக்கு சென்று பண்டிகையை கொண்டாடுவார்கள். இதற்காக ரயிலில் பயணம் மேற்கொள்ளும் மக்கள் ஜூலை மாதமே டிக்கெட் முன்பதிவு செய்தனர்.
அதே சமயம் ரயிலில் டிக்கெட் கிடைக்காத நபர்கள் பேருந்துகளில் பயணம் மேற்கொள்வார்கள். இதற்காக அரசு தரப்பில் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது.
அதேசமயம் வழக்கமாக இயக்கப்படும் எஸ்.இ.டி.சி எனப்படும் அரசு விரைவு சொகுசு பேருந்துகளில் டிக்கெட்டுகள் முன்பதிவு கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வருகிறது. அதிலும் 90% டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை ஒட்டி நவம்பர் 9,10, 11 ஆகிய தேதிகளில் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி மாதவரம் புதிய பேருந்து நிலையம், கலைஞர் கருணாநிதி மாநகர போக்குவரத்து கழக பேருந்து நிலையம், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தம், தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகிறது. வழக்கமாக ஒவ்வொரு நாளும் சென்னையில் இருந்து மற்ற பகுதிகளுக்கு 2100 பேருந்துகள் இயக்கப்படுகிறது. ஆனால் பண்டிகை காலம் என்பதால் 3 நாட்களில் கூடுதலாக 4, 675 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
அதன்படி, இன்று நவம்பர் 9 ஆம் தேதி 3,465 பேருந்துகளும், நாளை 10 ஆம் தேதி 3,995 பேருந்துகளும், 11 ஆம் தேதி 3,515 பேருந்துகள் என 10,975 பேருந்துகள் இயக்கப்படும். அதேபோல் பிற ஊர்களில் இருந்து 5,920 பேருந்துகள் என மொத்தமாக 3 தினங்களில் மட்டும் 16 ஆயிரத்து 895 பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதேபோன்று தீபாவளி பண்டிகை முடிந்து வெளியூர் பயணிகள் திரும்புவதற்காக 13 ஆம் தேதி 3,375 பேருந்துகளும், 14 ஆம் தேதி 3,075 பேருந்துகளும், 15 ஆம் தேதி 3,017 பேருந்துகளும் சென்னைக்கு இயக்கப்படுகிறது. மற்ற இடங்களுக்கு 3,825 பேருந்துகள் இயக்கப்படுகிறது.
தீபாவளி பண்டிகை முன்னிட்டு பேருந்துகளில் பயணம் மேற்கொள்ள சுமார் ஒரு லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு பேருந்துகள், மாதவரம் புதிய பேருந்து நிலையம், கே.கே. நகர் மாநகர பேருந்து நிலையம், தாம்பரம் அண்ணா பேருந்து நிலைய நிறுத்தம், பூந்தமல்லி விரைவுச்சாலை பேருந்து நிறுத்தம் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இன்று இயக்கப்படுகிறது.
தீபாவளி என்பதால் போக்குவரத்து நெரிசலை கணக்கிட்டு மக்கள் முன்கூட்டியே பயணத்தை திட்டமிட்டு தகுந்த நேரத்தில் பேருந்து நிலையத்திற்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு செல்ல வசதியாக வேறு இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகிறது.