Thamimun Ansari:“மனிதநேய ஜனநாயக கட்சி தமிமுன் அன்சாரி தலைமையில்தான் இயங்குகிறது” - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
மனிதநேய ஜனநாயக கட்சி அதன் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி தலைமையில் தான் இயங்குவதாக அக்கட்சியின் அவைத் தலைவர் மன்னை செல்லச்சாமி அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
மனிதநேய ஜனநாயக கட்சி அதன் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி தலைமையில் தான் இயங்குவதாக அக்கட்சியின் அவைத் தலைவர் மன்னை செல்லச்சாமி அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு மனிதநேய மக்கள் கட்சியில் உறுப்பினராக இருந்த தமிமுன் அன்சாரி, அக்கட்சியில் இருந்து வெளியேறி மனிதநேய ஜனநாயக கட்சியை தொடங்கினார். அக்கட்சியின் பொதுச்செயலாளராக இருந்து வரும் அவர், 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், அதிமுக கூட்டணியில் சேர்ந்து போட்டியிட்டு எம்.எல்,ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதற்கிடையில் சமீப காலமாக மனிதநேய ஜனநாயக கட்சியின் பொருளாளர் ஹாரூனுக்கும், பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரிக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்தது. இதனால் ஹாரூன் ரசித், அவைத்தலைவராக செயல்பட்டு வந்த நாசர் உமரி இருவரும் கட்சியை விட்டு நீக்கப்பட்டனர். இதற்கிடையில் இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் திண்டுக்கலில் வைத்து ஆலோசனை நடத்தி தமிமுன் அன்சாரி கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்தனர். இதனால் அக்கட்சி தொண்டர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து திருச்சியில் நேற்று மனிதநேய ஜனநாயக கட்சியின் சிறப்பு நிர்வாக குழு மற்றும் தலைமை நிர்வாகக் குழு கூட்டம் நடந்தது. இதில் தமிமுன் அன்சாரி தலைமையிலேயே கட்சி தொடர்ந்து செயல்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக அறிக்கை ஒன்று வெளியிடப்படுள்ளது.
அதில், ”மனிதநேய ஜனநாயக கட்சியில் கோஷ்டிகளை உருவாக்கும் நோக்குடனும், கட்சியை பிளவுபடுத்தும் வகையிலும், கட்சியின் விதிமுறைகளை தொடர்ந்து மீறிடும் வகையிலும் செயல்பட்ட காரணத்தினால் கடந்த 07.02.2023 அன்று கட்சியில் பொருளாளராக செயல்பட்டு வந்த ஹாருன் ரசீத், அவைத் தலைவராக செயல்பட்டு வந்த நாசர் உமரி, ஆகியோர் அவர்கள் வகிக்கும் பொறுப்புகள் இருந்து விடுவிக்கப்பட்டனர். இதற்கு 40 மாவட்டங்கள் எழுத்துப்பூர்வ பரிந்துரை செய்துள்ளனர்.
கட்சியின் பைலா (அமைப்பு விதி) விதி எண் 48 உட்பிரிவு 4-ன் படி, கட்சியிலிருந்து நடவடிக்கைக்கு ஆளானவர்கள் எவரும் கட்சியின் பெயரையோ, கொடியையோ எந்த வகையிலும் பயன்படுத்தக் கூடாது. நேற்று முன்தினம் திண்டுக்கலில் கட்சியிலிருந்து ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளானவர்கள் நடத்திய ஒரு கூட்டத்தில் அங்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் பேனரை அவர்கள் பயன்படுத்தியதை அறிந்து, அதை காவல்துறை அகற்றி இருக்கிறது.
அப்படி நடைபெற்ற ஒரு கூட்டத்தில், மனிதநேய ஜனநாயக கட்சியிலிருந்து பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்களை நீக்கியதாக ஊடகங்களுக்கு செய்தி கொடுத்திருக்கிறார்கள். அதை வன்மையாக இந்த சிறப்பு நிர்வாக குழு கண்டிக்கிறது. கட்சியில் நடவடிக்கைகளுக்கு ஆளானவர்கள் ஏற்பாட்டில் தமிழகம் முழுவதிலிருந்து 145 பேரை மட்டுமே திரட்டி அறிவித்திருக்கும் இந்த உண்மைக்கு மாறான தகவலை எவரும் நம்ப வேண்டாம் என்றும், கட்சி பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி தலைமையில் ஒற்றுமையோடு செயல்படுகிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்” என கூறப்பட்டுள்ளது.