'என்ன பேச கூட விடமாட்றீங்க... இருக்கையின் மீது ஏறி சத்தமாக பேசிய எம்.எல்.ஏ... சட்டசபையில் பரபரப்பு
பெண்களுக்கு அதை செய்கிறோம், இதை செய்கிறோம் என பேசுகிறீர்கள். ஆனால் என் குரலைக்கூட எழுப்ப விட மறுக்கிறீர்கள் என சந்திர பிரியங்கா எம்.எல்.ஏ, இருக்கையின் மீது ஏறி சத்தமாக பேசியதால் பரபரப்பு.

புதுச்சேரி: தனக்கு பேச வாய்ப்பு இல்லையா என சட்டபேரவையில் ஒரே ஒரு பெண் குரல்தான் ஒலிக்கிறது, பெண்களுக்கு அதை செய்கிறோம், இதை செய்கிறோம் என பேசுகிறீர்கள். ஆனால் என் குரலைக்கூட எழுப்ப விட மறுக்கிறீர்கள் என சந்திர பிரியங்கா எம்.எல்.ஏ, தனது இருக்கையின் மீது ஏறி சத்தமாக பேசியதால் சட்டமன்றத்தில் பரபரப்பு நிலவியது.
புதுச்சேரி சட்டப்பேரவையில் 2025 -2026ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை, நிதித்துறை பொறுப்பு வைக்கும் முதலமைச்சர் ரங்கசாமி ரூ.13,600 கோடிக்கு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். மாநில சொந்த வருவாய் - ரூ.7,441.40 கோடியும், இதில் ரூ.11,624.72 கோடி வருவாய் செலவினத்திற்காகவும், ரூ.1975.28 கோடி மூலதின செலவினங்களுக்காவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் பேரிடர் மேலாண்மை நிதி மற்றும் மத்திய அரசின் நிதி ரூ.3,432.18 கோடியும், மத்திய அரசின் சாலை நிதி ரூ.25 கோடி, மத்திய அரசின் திட்டங்களின் கீழ் ரூ.400 கோடி, ரூ.2101.42 கோடி கடன் பெற மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இந்த நிலையில், சட்டசபையில் கேள்வி நேரத்தில் என்ஆர்.காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரியங்கா, புதிய கல்வி கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளதால் இந்த கல்வியாண்டு முதல் புதிய கல்விகொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு தொழில் சார்ந்த படிப்புகளை இதர கலைகளை கற்றுத்தர பயிற்றுநர்கள், பயிற்சி கூடங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகள் அனைத்து பள்ளிகளிலும் உருவாக்கப்பட்டுள்ளதா? என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த கல்வி துறை அமைச்சர் நமச்சிவாயம், இதுவரை 52 அரசு பள்ளிகளில் தொழில்சார்ந்த பயிற்றுநர்கள், பயிற்சி கூடங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. அடுத்த கல்வி ஆண்டில் 14 பள்ளிகளுக்கு தொழில் சார்ந்த படிப்புகள் உருவாக்கப்படும். 2028-ம் ஆண்டுக்குள் அனைத்து பள்ளிகளிலும் தொழில் சார்ந்த படிப்புகள் உருவாக்கப்படும்" என்று கூறினார்.
அப்போது, சந்திர பிரியங்கா, 5 ஆம் வகுப்பிலேயே தொழில்படிப்புக்கு பயிற்சி அளிக்கப்படும் என புதிய கல்வி கொள்கையில் உள்ளது. இதனால் மாணவர்கள் பயிற்சி கூடங்களுக்கு செல்வார்கள். அப்படி தொழில் கற்கும் மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு வராமல், சம்பாதிக்க சென்றுவிடுவார்கள். இதை 9-ம் வகுப்புக்கு மேல் என மாற்றி அமைக்க வேண்டும் என்று கூறினார். இதற்கு தி.மு.க, காங்கிரசார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இவர்களுக்கு எதிர்ப்பாக ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-க்களும் பேசியதால் சபையில் கடும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.
அப்போது தனக்கு பேச வாய்ப்பு இல்லையா? சபையில் ஒரே ஒரு பெண் குரல்தான் ஒலிக்கிறது. பெண்களுக்கு அதை செய்கிறோம், இதை செய்கிறோம் என பேசுகிறீர்கள். ஆனால் என் குரலைக்கூட எழுப்ப விட மறுக்கிறீர்கள் என தனது இருக்கையின் மீது ஏறி சத்தமாக பேசினார். இதனால் சட்டபேரவையில் பெரும் பரபரப்பு நிலவியது.

