தமிழகம் புதுச்சேரியில் அக்டோபர் 29, 30 ஆகிய தேதிகளில் கன மழை… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
ஒரு வழியாக நாளை மறுநாள் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாகவே மழை டிரெய்லர், டீசர்களை காட்டிக்கொண்டிருக்கிறது.
அக்டோபர் 29 மற்றும் 30 ஆம் தேதிகளில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை
வழக்கமாக தமிழ்நாடு தென்மேற்கு பருவமழையை விட, வடகிழக்கு பருவமழை காலத்தில்தான் அதிக மழை பெறும். எனவே வடகிழக்கு பருவமழையை தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறன்றன. வடகிழக்கு பருவமழையானது ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 3-வது வார இறுதியிலோ அல்லது 4-வது வார தொடக்கத்திலோ தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு வங்க கடலில் நிலைகொண்டிருந்த சித்ராங் புயல் காரணமாக வடகிழக்கு பருவமழை தொடங்குவதில் சற்று தாமதம் ஏற்பட்டிருந்தது. ஒரு வழியாக நாளை மறுநாள் (அக்டோபர் 29) வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாகவே மழை டிரெய்லர், டீசர்களை காட்டிக்கொண்டிருக்கிறது.
காலை முதல் மழை
இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை துவங்கும் என்றும் எதிர்பார்க்கப்படும் நாளின் வானிலை அறிக்கை வெளியாகி உள்ளது. அன்றும் அதற்கு அடுத்த நாளான அக்டோபர் 30 ஆம் தேதியும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கன மழை பெய்யும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே இன்று காலை சென்னையில் மழை பரவலாக ஒரு காட்டு காட்ட பருவமழையில் இன்னும் நல்ல மழை வருமென எதிர்பார்க்கப் படுகிறது.
குறைந்த வெப்ப மண்டலம்
வானிலை மையம் வெளியிட்டுள்ள முன்னறிவிப்பில், தற்போது மேற்கு மத்திய மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த வெப்ப மண்டல அளவில் ஒரு சூறாவளி சுழற்சி நிலவுகிறது. தெற்கு உள் கர்நாடகத்திலிருந்து தென்மேற்கு வங்காள விரிகுடா வரை தமிழ்நாடு முழுவதும் குறைந்த வெப்பமண்டல மட்டம் நிலவுகிறது.
அக்டோபர் 29, 30 தேதிகளில் கன மழை
“மேற்கண்ட நிலைமைகளின் கீழ், அக்டோபர் 29 மற்றும் 30 ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் மற்றும் கடலோர ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஏனாம், ராயலசீமா மற்றும் கேரளா மற்றும் மாஹே ஆகிய பகுதிகளில் பரவலாக லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது,” என்று வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பு அறிக்கையில் வெளியிட்டுள்ளது. மேலும், "அக்டோபர் 30-ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த இரண்டு நாட்களில் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் துணை இமாலய மேற்கு வங்காளம் மற்றும் சிக்கிம் ஆகிய இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்." என்று கூறப்பட்டு இருந்தது. முன்னதாக, தென்மேற்கு பருவமழையின் காரணமாக தமிழ்நாடு இயல்பைவிட 45% அதிகமான மழைபொழிவை பெற்றிருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே போல இந்த வருடம் வடகிழக்கு பருவ மழையிலும் அதிக மழை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 23ஆம் தேதியுடன் இந்தியாவில் இருந்து தென்மேற்கு பருவமழை விலகியுள்ளது.