EPS Meets Modi: அதிமுக தொண்டர்கள் யாரும் அதிருப்தியில் இல்லை - பிரதமரை சந்தித்த பின் ஈபிஎஸ் பேட்டி..!
திமுக ஆட்சிப்பொறுப்பேற்று மூன்று மாதங்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில், அவர்களை பற்றி பிரதமரிடம் பேசவில்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்த பின் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். இதில் பேசிய அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி,
2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டதற்காக பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து நன்றி தெரிவித்தோம், தமிழகத்திற்கு தேவையான கொரோனா தடுப்பூசியை வழங்க வேண்டும் என நானும் ஓபிஎஸும் பிரதமரிடம் வலியுறுத்தினோம். மேகதாது அணையை பொறுத்தவரை முதல்வராக ஜெயலலிதா இருக்கும்போதுசரி, ஓபிஎஸு ம் நானும் முதல்வராக இருந்தபோதும்சரி அங்கு அணை கட்டக்கூடாது என்பது தான் எங்கள் நிலைப்பாடு, மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழ்நாடு பாலைவனம் ஆகிவிடும், தமிழ்நாட்டில் 16 மாவட்டங்கள் காவிரி நீரை குடிநீர் ஆதாரமாக கொண்டுள்ளன. எனவே மேகதாது அணை கட்ட மத்திய அரசு உதவக்கூடாது என கோரிக்கை வைத்தோம், நீர் பற்றாக்குறை மாநிலமாக உள்ள தமிழ்நாட்டில் கோதாவரி-காவிரி நதிநீர் இணைப்புத் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டோம், தமிழகத்தில் பல்வேறு சாலைகளை அமைக்க மத்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதித்துள்ள நிலையில் அதனை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கவும், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்வதை தடுத்து நிறுத்தவேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளோம் என்றார்.
தேர்தலுக்கு பிறகு அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் திமுகவில் இணைவது குறித்த கேள்விக்கு, ‘’தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் அவர்கள் விலகி சென்று இருக்கிறார்கள், தொண்டர்கள் யாரும் அதிருப்தியில் இல்லை, கட்டுக்கோப்பாக இருக்கும் இயக்கம் அதிமுக’’.
திமுக ஆட்சி குறித்து பிரதமரிடம் பேசினீர்களா? என்ற கேள்விக்கு ’’திமுக ஆட்சிப்பொறுப்பேற்று மூன்று மாதங்கள்தான் ஆகியுள்ள நிலையில் எனவே அவர்களை பற்றி பிரதமரிடம் பேசவில்லை, அதிமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் பணி செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் தமிழகத்தின் கோரிக்கைகளை பிரதமரை சந்தித்து பேசியுள்ளோம்’’.
தமிழகத்தில் லாட்டரி சீட்டை கொண்டு வரும் திட்டமில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது குறித்த கேள்விக்கு, ’’எங்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே தமிழ்நாடு அரசு லாட்டரி சீட்டு கொண்டு வர உள்ளதாக அறிக்கை விட்டேன்; தமிழக அரசு அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர், தமிழ்நாட்டில் லாட்டரி சீட்டை கொண்டுவரவில்லை என்றால் அது நல்லதுதான்’’மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு ’’இதுவரை மத்திய உள்துறை அமைச்சரை சந்திக்க யாரிடமும் நாங்கள் வாய்ப்பு கேட்கவில்லை, வாய்ப்பு கிடைத்தால் சென்று சந்திப்போம்’’ என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பாக பேசப்பட்டதா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பை முடித்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.