சென்னை டூ ராமேஸ்வரம் வரை புதிய சாலை திட்டங்கள்.. தமிழகத்திற்கு ஜாக்பாட்.. நிதின் கட்காரி சொன்ன தகவல்!
தஞ்சாவூர் - அரியலூர் - பெரம்பலூர் ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் புதிய சாலை திட்டம் அமைக்கப்பட உள்ளது என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
உலக அளவில் வாகன உற்பத்தியில் இந்தியா மூன்றாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது என்றும் இதில் தமிழ்நாட்டின் பங்கு முக்கியமானது என்றும் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் புதிய சாலை திட்டங்கள்:
தஞ்சாவூர்-கும்பகோணம் - விக்கிரவாண்டி இடையே அமைக்கப்பட்டு வரும் நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை பணிகளை மத்திய அமைச்சர் நிதின் கட்காரி இன்று ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "உலக அளவில் வாகன உற்பத்தியில் இந்தியா மூன்றாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது.
அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்ததாக இந்தியா உள்ளது. இந்தியாவில் வாகன உற்பத்தியில் தமிழ்நாடு முன்னணியில் இருக்கிறது. வாகன உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு அளப்பரியது" என்றார்.
விக்கிரவாண்டி - கும்பகோணம் - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை பணி 4 ஆண்டுகள் கால தாமதமாகி உள்ளது என்றும் அடுத்த மூன்று மாதங்களில் இந்த சாலை பணிகள் முழுமையாக நிறைவு பெற்றுவிடும் என்றும் அவர் தெரிவித்தார்.
சூப்பர் தகவல் சொன்ன மத்திய அமைச்சர்:
இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "தமிழ்நாட்டில் சாகுபடி நிலங்கள் அதிக அளவில் உள்ளது. இதனால் நிலம் கையகப்படுத்த முடியவில்லை. தமிழ்நாடு அரசு நிலம் கையகப்படுத்தி கொடுத்தால் மேலும் பல சாலை திட்டங்கள் தமிழ்நாட்டில் அமல்படுத்தப்படும்.
தஞ்சாவூர் -அரியலூர் - பெரம்பலூர் ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் புதிய சாலை திட்டம் அமைக்கப்பட உள்ளது. இந்த சாலை திட்டத்தின் மூலம் சிமென்ட் தொழிற்சாலைகள் உள்ள பகுதிகளில் வளம் பெருகும். குறிப்பாக, தஞ்சாவூர் சுற்றுலா துறையில் வளர்ச்சி பெறும்.
தஞ்சாவூரில் புகழ்வாய்ந்த பிரகதீஸ்வரர் ஆலயம் உள்ளது. இதனால் தஞ்சாவூர் சுற்றுலாத் துறை மேலும் வளர்ச்சி பெறும். தமிழ்நாடு, ஆந்திரா , கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களை இணைக்கும் வகையில் குறிப்பாக தொழில் நகரங்களை இணைக்கும் வகையில் விழுப்புரத்திலிருந்து பெங்களூர் வரை 180 கிலோமீட்டர் தொலைவிற்கு 5400 கோடி ரூபாய் மதிப்பில் நான்கு வழி சாலை அமைக்கப்படும்.
சிவகங்கை -தொண்டி - ராமேஸ்வரம் ஆகிய ஊர்களை இணைக்கும் வகையில் புதிய சாலை திட்டம் உருவாக்கப்படும். சென்னை -கல்பாக்கம் - மகாபலிபுரம் ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் புதிய சாலை திட்டம் உருவாக்கப்படும்.
பெங்களூர் நகரில் புதிய புறவழிச்சாலை அமைக்கப்படும். தேசிய நெடுஞ்சாலை திட்டப் பணிகளுக்கு நிதி ஒரு பொருட்டல்ல. சாலைப் பணிகளுக்கு நிலங்கள் கையகப்படுத்துவதால்தான் சாலை பணிகள் காலதாமதம் ஆகிறது" என்றார்.