’கோடநாடு கொலையில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு’- ஜம்சிர் அலியிடம் விசாரணை...!
கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாகவும், இவ்வழக்கில் வேறு நபர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டதாக தெரிகிறது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான நீலகிரியில் உள்ள கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இரவில் ஆயுதங்களுடன் எஸ்டேட்டுக்குள் அத்துமீறி நுழைந்த கும்பல், பாதுகாவலராக இருந்த ஓம்பகதூர் என்பவரை கொலை செய்து விட்டு, சில மதிப்புமிக்க பொருட்களை திருடிச் சென்றது. இது தொடர்பாக சயன், சதீசன், உதயகுமார், ஜம்சிர் அலி, தீபு, சந்தோஷ், திலிப் ஜாய், வாளையார் மனோஜ், மனோஜ் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கோடநாடு வழக்கில் முக்கிய குற்றவாளியான முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஓட்டுநர் கனகராஜ், சேலம் மாவட்டத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் தேதி நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனிடையே கோடநாடு வழக்கில் கூடுதல் விசாரணையை துவக்கிய நீலகிரி காவல் துறையினர், முக்கிய குற்றவாளியான சயன் மற்றும் விபத்தில் உயிரிழந்த கனகராஜின் அண்ணன் தனபால் ஆகியோரிடம் விசாரணை செய்தனர். பின்னர் ஏடிஎஸ்பி தலைமையில் 5 தனிப் படைகள் அமைத்து கூடுதல் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சாட்சிகள், குற்றம் சாட்டப்பட்டவர்கள், அவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என கூடுதல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கோடநாடு பங்களா மேலாளர் நடராஜன், கோத்தகிரி மின்வாரிய பொறியாளர், விபத்தில் உயிரிழந்த கனகராஜின் மனைவி கலைவாணி மற்றும் அவரது உறவினர் தினேஷ், குற்றவாளிகளை கேரளாவிற்கு தப்பிக்க உதவியதாக கூறப்படும் கூடலூர் பகுதியை சார்ந்த அனீஸ் மற்றும் சாஜி, சம்பவத்தன்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் பயன்படுத்திய வாகனங்களை வழங்கிய வாகன உரிமையாளர் நவ்ஷத், இடைத்தரகர் நப்பல், விபத்தில் உயிரிழந்த முக்கிய குற்றவாளியான கனகாரஜின் நண்பர்களான குழந்தை வேலு, சிவன் உள்ளிட்டோரிடம் நீலகிரி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். மேலும் கோடநாடு எஸ்டேட்டிலும் தனிப்படை காவல் துறையினர் ஆய்வு நடத்தினர்.

இந்நிலையில் கோடநாடு வழக்கில் நான்காவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட ஜம்சிர் அலி உதகையில் உள்ள பழைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று விசாரணைக்கு ஆஜராகினார். நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஸ்ராவத் உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் ஜம்சிர் அலியிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில் கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாகவும், இவ்வழக்கில் வேறு நபர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டதாக தெரிகிறது. கோடநாடு வழக்கில் கூடுதல் விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், ஜம்சிர் அலி வாக்குமூலம் அடிப்படையில் மேலும் பலரிடம் நீலகிரி காவல் துறையினர் விசாரணை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.





















