நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகள் வரவேண்டாம் - ஆட்சியர் அறிவுறுத்தல்..
நீலகிரி மாவட்டத்திற்கு அடுத்த 3 நாட்களுக்கு மிக கனமழை காரணமாக சுற்றுலா பயணிகள் வர வேண்டாம் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் அதி கனமழை காரணமாக சுற்றுலா பயணிகள் 18,19, 20 ஆகிய தேதிகளில் முடிந்தவரை பயணத்திஅ . என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கியது முதலே பல்வேறு மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. சூரியன் சுட்டெரித்த நிலையில் தொடர் கோடை மழை காரணமாக வெப்பநிலை குறைந்து பதிவாகி வருகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்கள் நல்ல மழை பதிவாகி வரும் நிலையில், அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. நாளை கன்னியாகுமரி, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சிராப்பள்ளி, கரூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்கள் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் வரும் 19 ஆம் தேதி, தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்கள் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
வரும் 20 ஆம் தேதி, கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், தேனி, நீலகிரி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே 18 மற்றும் 19 ஆம் தேதி நீலகிரி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 20 ஆம் தேதி அதிகனமழை காரணமாக ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த 3 நாட்களுக்கு நீலகிரி மாவட்டத்தில் மிக கனமழை இருக்கும் என்பதால் சுற்றுலா பயணிகள் பயணத்தை ஒத்திவைக்கும் படி நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். அல்லது பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் பயணத்தை திட்டமிடும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.