NLC: பயிர் செய்ய வேண்டாம் என முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டது: என்.எல்.சி விளக்கம்
"கால்வாய் பணியில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கான இழப்பீடு மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கப்பட்டுள்ளது"
சுரங்க விரிவாக்க பணியை தொடங்கிய என்.எல்.சி:
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இரண்டாவது சுரங்க விரிவாக்கத்திற்கான பணியை என்.எல்.சி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதற்காக நிலங்களை கையகப்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. சேத்தியாதோப்பு அருகே கத்தாழை, கரிவட்டி, ஆதனூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள விவசாய நிலங்களை அழித்து கால்வாய் வெட்டும் பணிகளில் என்.எல்.சி நிறுவனம் கடந்த சில நாட்களாக ஈடுபட்டுள்ளது.
அங்கு பயிர் செய்யப்பட்ட வயல்களில் இராட்சத இயந்திரங்களை இறக்கி என்.எல்.சிக்காக நிலங்களை கையகப்படுத்தும் பணிகளில் நடக்கிறது. தற்போது அங்கு நெற்பயிற்கள் அறுவடைக்கு கூட தயார் ஆகாத நிலையில் பச்சை பயிற்களை அழித்து கால்வாய் வெட்டுவதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதற்கு அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
விரிவாக்க பணிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள்:
என்.எல்.சி நிர்வாகத்தை கண்டித்து நெய்வேலியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற என்.எல்.சி. அலுவலகம் முற்றுகை போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதனை கட்டுப்படுத்த கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது. அப்போது போராட்டக்காரர்கள் கற்களை வீசியதில் 20 போலீசார் காயமடைந்தனர். இதனால், கடலூர் மாவட்டத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக என்.எல்.சி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அதில், "கால்வாய் பணியில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கான இழப்பீடு மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கப்பட்டுள்ளது. தனி நபர்களின் பெயர்களில் இழப்பீடுக்கான காசோலைகள் கடலூர் மாவட்ட நிர்வாகத்திடம் ஏற்கனவே ஒப்படைக்கப்பட்டது.
"புதிதாக பயிர் செய்ய வேண்டாம் என முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டது"
புதிதாக பயிர் செய்ய வேண்டாம் என நில உரிமையாளர்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டது. பரவனாறு நிரந்தர கால்வாய் அமைக்கும் பணியின்போது சிறிய அளவிலான பாசன நிலம் பாதிக்கப்பட்டது. உரிய இழப்பீடுகள் வழங்கி நிரந்தர மாற்றுப்பாதைக்கான நிலங்கள் ஏற்கனவே கையகப்படுத்தப்பட்டன.
நிரந்தர மாற்றுப்பாதையில் ஏற்கனவே 10.5 கி.மீ.க்கு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மேல்வளையமாதேவி அருகே 1.5 கி.மீ.க்கு முடிக்கப்படாத பகுதியில் தற்போது பணி மேற்கொள்ளப்படுகிறது. பருவமழையால் பரவனாற்றின் நிரந்தர ஆற்றுபாதையை முடிக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.
பரவனாற்றில் நிரந்தர கால்வாய் அமைக்கப்பட்டால் விவசாய நிலங்கள் வற்றாத நீரை பெறும். தற்போதுள்ள 25,000 ஏக்கருக்கும் அப்பால் புவனகிரி வரை பாசனத்திற்குத் தண்ணீர் கிடைக்கும். நிரந்தர மாற்றுப்பாதை அமைக்காவிட்டால் மழை காலங்களில் குடியிருப்பு நிலங்களில் கடும் வெள்ளம் ஏற்படலாம். நிலக்கரி சுரங்கம் 2இல் கடுமையான வெள்ளப்பெருக்கையும் ஏற்படுத்தக்கூடும்" என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.