New Parliament Building: நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவில் அ.தி.மு.க. பங்கேற்பு - கலந்து கொள்ளப்போவது யார்?
New Parliament Building Inauguration: மே 28-ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற கட்டட திறப்பு நிகழ்ச்சியில் அதிமுக பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மே 28-ஆம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற கட்டிட திறப்பு நிகழ்ச்சியில் அதிமுக பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. பங்கேற்பு:
அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை, சண்முகம் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். 19 எதிர்கட்சிகள் நாடாளுமன்ற கட்டிட திறப்பு நிகழ்ச்சியை புறக்கணிக்கும் நிலையில் பாஜக கூட்டணியில் உள்ள அதிமுக நிகழ்ச்சியில் பங்கேற்கிறது.
குடியரசு தலைவருக்கு அழைப்பு விடுக்காமல், புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைப்பது ஜனநாயகத்தின் மீதான நேரடி தாக்குதல் என கண்டனம் தெரிவித்து 19 எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற திறப்பு விழாவை புறக்கணிப்பதாக கூட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
நாடாளுமன்ற கட்டிட திறப்பு:
வரும் மே 28-ஆம் தேதி நாடாளுமன்ற புதிய கட்டிட திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி இந்த கட்டிடத்தை திறந்து வைக்கிறார். ஆனால் மரபு படி குடியரசுத் தலைவர் தான் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்க வேண்டும் என தொடர்ந்து எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் 19 எதிர்கட்சிகள் ஒன்றாக கூட்டறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், ஆம் ஆத்மி கட்சி, தேசியவாத காங்கிரஸ் கட்சி, சிவசேனா,ராஷ்டிரிய ஜனதா தளம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சமாஜ்வாதி கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ஜார்க்கண்ட் முக்தி மோர்சா, தேசிய மாநாட்டு கட்சி, கேரளா காங்கிரஸ், புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், ராஷ்டிரிய லோக் தள் ஆகிய கட்சிகள் கையொப்பமிட்டுள்ளது.
எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு:
அந்த அறிக்கையில், “குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை அழைக்காமல், பிரதமர் நரேந்திர மோடி தானாகவே புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைப்பது, அவமானம் மட்டுமல்ல; இந்திய ஜனநாயகத்தின் மீது நேரடி தாக்குதல் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்றத்தின் கட்டிட திறப்பு விழாவிலேயே குடியரசுத் தலைவர் இல்லை. அவர் இல்லாமலே திறப்பு விழாவை நடத்துவது கண்ணியமற்ற செயல். பிரதமரின் இச்செயல் குடியரசுத் தலைவருக்கான பதவியை அவமதிப்பது மட்டுமில்லாமல், இந்திய அரசியலமைப்பின் உணர்வை மீறுவதாகவும் உள்ளது” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் “புதிய நாடாளுமன்ற கட்டிடம் பெருந்தொற்றுகளுக்கு இடையேயும், பொருளாதார நெருக்கடிக்கு இடையேயும் நாட்டின் குடிமக்களையோ அல்லது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களையோ கலந்தாலோசிக்காமல் பெரும் பொருட்செலவில் கட்டப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் ஜனநாயகத்தின் மதிப்பை சீர்குலைக்கும் வகையில் உள்ள செயலை கண்டிக்கும் வகையில் நாடாளுமன்ற திறப்பு விழாவில் காங்கிரஸ் உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் பங்கேற்காது” என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.