TN Lockdown : தமிழகத்தில் ஊரடங்கு...! 3 புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன..! முழு விவரம் உள்ளே...!
தமிழ்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பிறப்பித்துள்ள புதிய கட்டுப்பாடுகளை கீழே விரிவாக காணலாம்.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகமாகி வருவதால், தமிழக அரசு இன்று புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அவற்றில் முக்கிய கட்டுப்பாடுகளான 4 கட்டுப்பாடுகள் பற்றி கீழே காணலாம்.
- 14 முதல் 18-ந் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதியில்லை :
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறையால் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் கூட வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது. இதனால், கொரோனா தொற்று எளிதில் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் தமிழ்நாட்டில் பொங்கல் தினமான 14-ந் தேதி முதல் மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் மட்டுமின்றி தைப்பூசம் தினமான 18-ந் தேதி வரை 5 நாட்களுக்கு அனைத்து ஆலயங்களிலும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தைப்பூசம் தினத்தில் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு முருகன் ஆலயங்களிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவது வழக்கம். இந்தாண்டு அதை தவிர்ப்பதற்காக. தைப்பூச தினத்திலும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
- ஞாயிறு முழு ஊரடங்கு :
தமிழ்நாட்டில் இயல்பாகவே ஞாயிற்றுக்கிழமைகளில் கல்வி நிறுவனங்கள் மட்டுமின்றி, கடைகள், நிறுவனங்கள் உள்ளிட்வைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது இயல்பு. அன்றைய தினம் பலரும் தங்களது குடும்பத்துடன் வெளியில் செல்வதை வாடிக்கையாக கொண்டிருப்பார்கள்.
கொரோனா தொற்று பெருங்காலம் என்பதாலும், தொடர் விடுமுறை என்பதாலும் அன்றைய தினம் மக்கள் வெளியில் நடமாடுவதைத் தவிர்க்கும் விதமாக அன்றைய தினம் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
- பேருந்துகளில் 75 சதவீத இருக்கை:
தமிழ்நாட்டின் மிகப்பெரிய பண்டிகையான பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காகவும், தொடர் விடுமுறை என்பதாலும் சென்னை, கோவை, திருப்பூர், மதுரை உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதுபோன்ற நாட்களில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பேருந்துகளும் நிரம்பி வழியும்.
குறிப்பாக, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கூட்டம் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு காணப்படும். இந்த சூழலில், இதுபோன்ற கூட்டம் கூடினால் கொரோனா தொற்று எளிதில் பரவிவிடும் என்று அரசு அச்சப்படுகிறது. அதேசமயம், பொதுமக்கள் அவரவர் ஊர்களுக்கு பொங்கல் பண்டிகையை கொண்டாட செல்வதற்கும் ஏற்பாடு செய்வதற்காக பேருந்துகளில் 75 சதவீத பயணிகள் மட்டுமே ஏற்றிச்செல்ல உத்தரவிட்டுள்ளது.
- ஜனவரி 31-ந் தேதி வரை இரவு ஊரடங்கு :
கொரோனா, ஒமிக்ரான் தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் கடந்த வியாழன் முதல் இரவு நேர ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. கொரோனா தொற்று இன்னும் கட்டுக்குள் வராத காரணத்தால், பொங்கல் பண்டிகையை கடந்து இந்த மாத இறுதிவரை (ஜனவரி 31) வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்