தமிழ்நாட்டில் மேலும் புதிய கொரோனா கட்டுப்பாடுகள் விதிப்பு
தமிழ்நாட்டில் மே 6ஆம் தேதி முதல் மேலும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மே 6ஆம் தேதி காலை 4 மணி முதல் 20ஆம் தேதி காலை 4 மணி வரை இந்தக் கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும்.
கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் மேலும் புதிய கொரோனா கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நாட்டில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, டெல்லி, உத்தரப்பிரதேசம், கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று பாதிப்பு தினமும் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று பரவலை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகள் ஏற்கனவே அமலில் உள்ள நிலையில், வரும் 6ஆம் தேதி முதல் மேலும் புதிய கொரோனா கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. வரும் 6ஆம் தேதி காலை 4 மணி முதல் 20ஆம் தேதி காலை 4 மணி வரை இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக அரசு தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் அலுவலகங்கள் 50 சதவிதம் பணியாளர்களுடன் மட்டும் இயங்க வேண்டும். பயணிகள் ரயில், மெட்ரோ ரயில், தனியார் மற்றும் அரசு பேருந்துகள், டாக்ஸியில் 50 சதவித இருக்கைகளில் மட்டுமே பயணிகள் அமர்ந்து செல்ல அனுமதிக்கப்படுகிறது. மளிகை, காய்கறி கடைகள், குளிர்சாதன வசதியின்றி நண்பகல் 12 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி. இதேபோல், தேநீர் கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி. மாநகராட்சி, நகராட்சியை தொடர்ந்து ஊரகப் பகுதிகளில் சலூன் கடைகள் இயங்க தடை என்று என்பன உள்ளிட்ட மேலும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
முன்னதாக, நேற்று தமிழக அரசின் உயர் அதிகாரிகளுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில் ஒரு பதிவை செய்துள்ளார். அதில், "கொரோனா தடுப்பு குறித்து அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. தடுப்பு நடவடிக்கைகள் முழுமுனைப்புடன் நடைபெற்றிட வலியுறுத்தினேன். மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளி கடைப்பிடித்து, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நோய்ப்பரவலைத் தடுத்திட உதவவேண்டும்" எனப் பதிவிட்டார்.
மேலும் இக்கூட்டத்தின்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மருத்துவ சிகிச்சைகளை மேம்படுத்த மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளுக்கு அரசு ரெம்டெசிவிர் மருந்தை அளிப்பதைப்போல் மற்ற பகுதிகளிலும் இம்மருந்தை வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார். அத்துடன் தமிழ்நாட்டில் தற்போது நோய் தொற்று அதிகரித்து வருவதால் தேவையான ஆக்சிஜன் மற்றும் மருந்துப் பொருட்கள் தங்குதடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
ஸ்டாலினின் ஆலோசனைக்கு பிறகே தமிழகத்தில் புதிய கொரோனா கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.