"பழுதடைந்த ஆதிதிராவிடர் நல விடுதி கட்டிடங்களுக்கு அருகே புது கட்டிடங்கள் கட்டப்படும்" - அமைச்சர் கயல்விழி செல்வராஜ்
சேலம் மரவனேரி பகுதியில் உள்ள ஆதித்திராவிடர் நல விடுதியினை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் சேலம், நாமக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடந்தது. இதில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஜவகர், தாட்கோ தலைவர் மதிவாணன், ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் ஆனந்த், பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் அண்ணாதுரை மற்றும் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் சேலம் மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் என பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய அமைச்சர் கயல்விழி செல்வராஜ், தமிழகத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சிறப்பு பள்ளிகளில் சமீப காலமாக குறைந்து வந்த மாணவர்களின் எண்ணிக்கையை மீண்டும் அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும், கல்வி மற்றும் பொருளாதாரத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களை மேம்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்த அவர் மு.க ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் இத்துறையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் தேவையான அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்தி வருவதாகவும் தெரிவித்த அவர், அரசு திட்டங்கள் முழுமையாக மக்களிடம் கொண்டு செல்ல சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என கேட்டுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் 58 பயனாளிகளுக்கு ரூ.3.27 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பின்னர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அதிகாரிகளை அழைத்து சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
அதன்பின் சேலம் மரவனேரி பகுதியில் உள்ள ஆதித்திராவிடர் நல விடுதியினை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு இருந்த மாணவர்களிடம் விடுதி எவ்வாறு உள்ளது, குறைகள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கயல்விழி செல்வராஜ், “தமிழக அரசு சார்பாக நிறைய புதிய கட்டிடங்கள், விடுதிகளுக்கான கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. முன்னதாகவே 5.47 கோடி புதுகட்டிடம் கட்டுவதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் மாற்று இடத்திற்கு கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “மாணவர்களை மாற்றிய இடத்திற்கு கொண்டு சென்ற பிறகு புதிய கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மாணவருடைய எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் மாற்று இடத்திற்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் புதிய கட்டிடம் கட்டப்படும் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகம் முழுவதும் அரசு மாணவர்கள் விடுதிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பழுதடைந்த விடுதி கட்டிடங்களுக்கு அருகே புது கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. 30 ஆண்டுகளுக்கு மேலான கட்டிடங்கள், மிக மோசமான கட்டிடங்கள் அனைத்தும் இடித்துவிட்டு புதிய கட்டிடங்கள் மற்றும் பழுதடைந்த கட்டிடங்களை சரி செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று கூறினார்.