Namakkal MP Chinraj: ”காவிரியை காப்பாற்ற பாடுபட்டு வருகிறேன்..” நாமக்கல் எம்.பி சின்ராஜ் பேச்சு..!
நாமக்கல், ஈரோட்டில் அதிகப்படியான புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக நாமக்கல்லில் 20 ஆயிரம் பேர் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டம் உடையாபட்டி அடுத்துள்ள கந்தாஸ்ரமம் பகுதியில் எஸ்.ஆர்.பி கிரிக்கெட் மைதானத்தில் இயற்கை சுற்றுச்சூழல் மாசுக்கட்டுப்பாடு பாதுகாப்பு விழிப்புணர்வு மாநாடு நடைபெற்றது. சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி முன்னாள் நீதி அரசர் கலையரசன், நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜ், மனிதராக இருக்கும் நாம் தான் சுற்று சூழலை கெடுக்கிறோம். பூமி வெப்பமாவதை தடுப்பதற்கு உலக நாடுகள் அனைத்தும் சரி செய்யும் கட்டாயத்தில் உள்ளோம். நாம் அன்றாட குடிப்பதற்கு தண்ணீர் வேண்டும் என்றால் மரங்களை நட வேண்டும். மரம் இருந்தால் ஆக்ஸிஜன் கிடைக்கும். வீட்டில் மணி பிளான்ட் வைத்தால் ஆக்சிஜன் கிடைக்காது. ஆக்சிஜன் தேவைக்கு மரங்கள் வேண்டும். ஒருவர் வாழ்க்கையில் குறைந்த பட்சம் ஒரு மரமாவது நட வேண்டும். நான் எம்பியாக ஆவதற்கு முன் அரசுத் துறையினரிடம் ஏதேனும் கூறினால் அது நடக்காது. ஆனால் மக்கள் பிரதிநிதியாக சென்றால் எது கூறினாலும் நடக்கும். நான் அடிக்கடி ஆய்வுக்குச் செல்லக்கூடிய ஒருவர். அறிவுக்கு செல்லும் போது எனக்கு நல்லது கண்ணுக்குத் தெரியாது. குற்றங்களை மட்டுமே பார்த்துக் கொண்டு செல்வேன். மரம் இல்லாத அரசு அலுவலகங்களை கண்டால் உடனடியாக உள்ளே சென்று விடுவேன். மரம் இல்லாத காரணத்தினால் அரசு பள்ளி ஆசிரியர்களை கூட பணி நீக்கம் செய்திருக்கிறேன் என்றார்.
ராசிபுரம் அரசு கலைக் கல்லூரியில் கல்லூரி முதல்வரை பணியிடை நீக்கம் செய்திருக்கிறேன். 19 மரங்களை கல்லூரி முதல்வர் அனுமதியுடன் அடியோடு வெட்டுகின்றனர். இதற்கு நான் உத்தரவு போட்டேன், இந்த கல்லூரி முதல்வருக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டேன். அதன்படி வனத்துறை அலுவலர்கள் உதவியுடன் மரங்களின் மதிப்பில் இருந்து ஐந்து மடங்கு அதிகமான தொகையை அபராதமாக செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டேன். மேலும் தனக்கென வாழ்வது வாழ்க்கை இல்லை. மத்திய அரசு பல கோடி ரூபாய் மரங்களை வளர்த்த ஒதுக்கீடு செய்கிறது. ஆனால் கிராம பஞ்சாயத்தில் இருக்கக்கூடிய நிர்வாகத்தினர் அதனை முறையாக செயல்படுத்துவதில்லை.
அதேபோல் இன்று குடிக்கக்கூடிய நீர் மாசு படுகின்றது. காவேரி ஆறு தற்போது மாஸ் அடைந்து வருகிறது. அதனை மீட்க நான் பாடுபட்டுக் கொண்டிருக்கிறேன். தற்போது நிலவரப்படி நாமக்கல், ஈரோட்டில் அதிகப்படியான புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக நாமக்கல்லில் 20 ஆயிரம் பேர் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். தண்ணீர் மாசுடைந்துள்ளதால் பெண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட்டுள்ளது. இதனால் தனியார் மருத்துவமனைகளில் அதிகப்படியான மருத்துவமனை கருத்தரித்தல் மையமே செயல்படுகிறது. இதற்கு எல்லாம் முக்கிய காரணம் உணவு முறை மற்றும் நாம் அறிந்தும் தண்ணீரில் தான் உள்ளது. இயற்கையை நாம் நாசப்படுத்திகின்றோம். எனவே நாம் தண்ணீரை பாதுகாக்க வேண்டும். கோழி, ஆடு, மாடு போன்ற கால்நடைகள் இருந்தால் அதனை பணம் கொடுத்து வாங்குகிறார்கள். அதுவே ஒரு மனிதன் இறந்தால் பெற்ற தாயாக இருந்தாலும் கூட யாரும் வாங்க மாட்டார்கள். எனவே இருக்கும் வரை நம்மால் எந்த உயிரும் அழியக் கூடாது என்று நினைத்து வாழுங்கள் என உரையாற்றினார்.