Seeman Gets Emotional : ’சத்தியமா நான் பிச்சை எடுத்துதான் வாழுறேன்’ நேர்காணலில் உணர்ச்சிவசப்பட்ட சீமான்..!
'ஆமா, கொடுக்குறாங்க. நான் கையெழுத்துப்போட்டுக்கொடுத்தால் கனடா போன்ற நாடுகளில் குடியுரிமை கொடுக்குறாங்க என்பது உண்மைதான். ஆனால், அது எப்படி என்பது மட்டும் எனக்கு தெரியாது’
ஆவேசம், ஆக்ரோஷம் என தன் குரல்வளை உடைந்து சிதறும் அளவிற்கு மேடைகளில் முழங்குபவர் நாம் தமிழர் கட்சியின் சீமான். அவரது பேச்சை ரசிக்க ஒரு பெரிய கூட்டம் இருக்கிறதென்றால், அவர் சிரிப்புக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. தமிழர் உரிமைகளுக்காக, ஈழத்தமிழர்களுக்காக களப்போராட்டம், சட்டப்போராட்டம் என சுற்றி சுழன்று வரும் சீமானுக்கு நிகராக அவர் மீதான சர்ச்சைகளும் மற்றொருபுறம் சூறாவளியாய் சுழன்று அடித்து வருகிறது.
சீமான் பாஜகவின் ‘பி’ டீம், சீமான் ஒரு ‘ரா’ உளவு அமைப்பின் ஏஜெண்ட், புலம்பெயர் தமிழர்களிடமிருந்து கோடிக் கணக்கில் பணம் பெற்று தான் மட்டும் பலனடையும் பச்சோந்தி, சர்வதிகாரி, ஆமைக்கறி, இட்லிக்குள் கறி டிஷ் சாப்பிட்டதாக புளுகிறார் என பல விமர்சனங்கள் அவர் மீது வைக்கப்பட்டு வரும் நிலையில், தன் மீதான சர்ச்சைகளுக்கும் விமர்சனங்களுக்கும் பதில் அளித்து நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு நேர்காணல் அளித்திருக்கிறார் சீமான்.
அந்த பேட்டியில், எந்த வேலைக்கும் செல்லாத, திரைப்படங்கள் பண்ணாத சீமான், வசதி வாய்ப்புகளுடன் சொகுசாக வாழ எங்கிருந்து பணம் வருகிறது என நெறியாளர் கேட்ட கேள்விக்கு உணர்ச்சிவசப்பட்டு பதில் அளித்திருப்பார்.
‘பிச்சை தாங்க, பிச்சைதான் எடுக்குறன். சத்தியமா சொல்றன் பிச்சை எடுத்துதான் வாழ்றேன். வெளில சொல்றது இல்ல, கவுர பிச்சைதான் எடுக்கிறேன். ஒரு பத்தாயிரம் போட்டுவிடா டேய் னா போட்டுவிடுவாங்க, என் மச்சான் சுந்தர் சி கிட்ட ஒரு லட்சம் கொடுத்துவிடுன்னா, ஒரு லட்சம் கொடுத்துவிடுவாரு, யார்கிட்டயாவது பேசுவேன், தம்பி, அண்ணன் கொஞ்சம் செலவுக்கு காசு கொடுத்துவிடுங்ன்னு, அவங்க கொடுத்துவிடுவாங்க. இன்னைக்கு கூட தாணு அண்ணன் கிட்ட பணம் வாங்க ஆளு அனுப்பியிருக்கேன் ; காசு இல்லன்ண்ணே செலவுக்கு கொஞ்சம் கொடுத்துவிடுண்ணேன்னு. சத்தியமா என் தலைவன் மேல ஆணையா பிச்சை எடுத்துதான் வாழ்றேன்’ என உணர்ச்சிப் பொங்க பேசியிருப்பார்.
அதேபோல், சீமான் கையெழுத்து போட்டுக்கொடுத்தால் கனடா போன்ற நாடுகளில் குடியுரிமை தருவதாக சொல்லியிருக்கின்றீர்களே என்ற நெறியாளரின் கேள்விக்கு பதில் அளித்த சீமான் ‘ஆமா, சத்தியமா கொடுக்குறாங்க. அரசியல் இயக்கம் வைத்து மக்கள் பணி செஞ்ருக்கிறேன் அப்டிங்கிற மதிச்சு கொடுக்குறாங்க’ என பதில் அளித்திருப்பார். அது எப்படி இன்னொரு நாடு உங்களது கையெழுத்தை போட்டால் குடியுரிமை கொடுக்கும் என நெறியாளர் திருப்பிக் கேட்டபோது, அது எனக்குத் தெரியாது. நான் கையெழுத்து போட்டு குடியுரிமை பெற்றவர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள். அவர்களை வேண்டுமானால் உங்களிடம் பேசச் சொல்லவா என பதில் அளித்திருக்கிறார் சீமான்.
ஜெய்பீம் போன்ற படத்தை சூர்யா-வை தவிர பிறரால் தயாரிக்க முடியாது. அதற்கு ஒரு துணிவு வேண்டும் என்று பேசியுள்ள சீமான், இந்த மாதிரி திரைப்படங்கள் வருவது பெருமையா இருக்கிறது என்று, இதை சூர்யாவை தவிர வேறு யாருக்கு எடுக்க தைரியம் உள்ளது என கேள்வி எழுப்பினார். அப்போது, சூர்யாவை தவிர வேறு எந்த நடிகர்களுக்கும் தைரியம் இல்லையென சொல்ல வருகின்றீர்களா என நெறியாளர் கேட்க, அதற்கு பதிலளித்த சீமான், ’துணிஞ்சு பேசலாம், பேசனும். என் தம்பி விஜய் பேசனும். ஆனால், அவருக்கு இருக்கும் உயரம் அவருக்கே தெரியாது. அவரு பயப்படுவாரு. திடீர்ன்னு பேசிடுவாரு, அப்பறம் பயப்படுவாரு. அதான் அவர்கிட்ட எரிச்சல் வரக் காரணம். துணிஞ்சு பேசனும், இது உன்நாடு, உன் நிலம், உன் சொந்தம், உன் மக்கள், எதுக்கு பயப்படுற ? அவனுக்காகதானே பேசுற ?’ ’விஜய்க்கு கார் வாங்குனதுல பிரச்னை, நான் தான் போய் சண்ட போட்டேன். ஏய் வாய மூடுய்யா அப்டின்னு. நான் தான் விஜய்க்காக போய் மல்லுக்கட்ட வேண்டி இருக்கு. எதுக்கு பயப்படனும். ஒன்னு அச்சத்த கைவிடனும், இல்லையெனில் லட்சியத்தை கைவிடனும். என்றார்.
ஏன் எல்லா காலக்கட்டங்களிலும் சீமான் பொதுமேடைகளில் மிகவும் ஆவேசமாக கோபமாகவே பேசுகிறார் என்ற கேள்விக்கு, ’பிரச்னையின் சிக்கல்களின் ஆழத்தை பொறுத்தான் அது இருக்கு. இலக்கிய மேடைகளில், திரைப்பட பாடல் வெளியீட்டு விழா போன்ற இடங்களில் அப்படி பேசுவது கிடையாது. ஆனால், உணர்வுபூர்வமான பிரச்னைகளில் ஒரு இனம் தெரியாத ஆவேசம் அந்த இடங்களில் பிடித்து உந்தி தள்ளும் என பதில் அளித்துள்ள சீமான், உங்க கிட்ட இருக்கிற ஆக்ரோஷம் கோபம் எல்லாம் ரொம்ப அதிகமாகவே இருக்கிறதே என கேட்டபோது, ‘இதயத்தில் நெருப்பு எரியும்போது, வாய் வழியே சில நெருப்பு துகள்கள் வந்து விழத்தான் செய்யும். சங்கே பேசுன்னு என் தாத்தன் சொல்லலீயே, முழங்கு அப்டின்னுதானே சொல்றாரு, இது பேச்சு மொழி அல்ல மூச்சு மொழி அது அப்படிதான் இருக்கும் என விளக்கம் தந்துள்ளார்.
இப்படி விளக்கம் அளித்தும் சீமானை விடாத நெறியாளர் தமிழரசன், அப்படி உரக்க பேசும்போது, சில காட்டமான வார்த்தைகளும், வசை சொற்களும் உங்களிடமிருந்து வந்து விழுந்துவிடுகிறதே என கேட்க, ’நீங்க வந்து மயிருன்னு சொல்றாரு சொல்வீங்க, மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர்நீப்பர் மானம் வரின் அப்டின்னு குறளே சொல்லுது. அப்படி நான் சொல்லக்கூடாதுன்னா எல்லோரும் மொட்டை அடிச்சுறவேண்டியதுதானே, அது போனா போகுது மயிரு. இருக்கிற இந்த கொஞ்ச நஞ்ச கோபத்தையும் தொலைச்சுட்டேன்னா நான் கோடம்பாக்த்துலதான் இருக்கனும். அதனால் அத விடுங்க, இது ஒன்னுதான் இருக்கு என பதில் தந்துள்ளார்.