‛அம்மா நிறைய அவமானங்களை பாத்துட்டாங்க’ போராடிய தாயை போற்றும் பேரறிவாளன்!
ஒரு பேட்டியில் அவரது அம்மா துன்பங்களையும் அவமானங்களையும் சந்தித்ததாகவும், அம்மா எந்த அளவுக்கு உத்வேகத்துடன் இருப்பர் என்பதையும், அவர் சிறையில் பேசும் விஷயங்களையும் பகிர்ந்து கொண்டார்.
பேரறிவாளனின் விடுதலைக்கான போராட்டம் 31 நீண்ட ஆண்டுகளாக நடந்து, கடந்த மே 18 அன்று முடிவுக்கு வந்தது. இந்தப் போராட்டத்தில் பேரறிவாளன் மற்றும் அவரது தாய் அற்புதம் அம்மாளின் மன உறுதியும் துணிவும் விடா முயற்சியும் எவராலும் எண்ணிப் பார்க்க இயலாதது. பேரறிவாளன் விடுதலை ஆனதும் பல ஊடகங்ளுக்கு பேட்டி அளித்து வருகிறார். அதில் ஒரு பேட்டியில் அவரது அம்மா துன்பங்களையும் அவமானங்களையும் சந்தித்ததாகவும், அம்மா எந்த அளவுக்கு உத்வேகத்துடன் இருப்பர் என்பதையும், அவர் சிறையில் பேசும் விஷயங்களையும் பகிர்ந்து கொண்டார்.
அம்மாவை தேர்வு செய்தது ஏன்?
இந்த சட்டப் போராட்டத்தை அம்மாதான் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்று உங்கள் குடும்பத்தில் எப்படி முடிவுசெய்தீர்கள் என்று கேட்ட கேள்விக்கு, "நான் இந்த பிரச்சனையில் சிக்கியவுடன் எனக்காக யாரவது ஒருவர் தொடர்ச்சியாக செயல்பட வேண்டுமென்ற நிலை வந்தது. என் தங்கை அப்போது சிறுவயது, படித்துக்கொண்டிருந்தார். அக்காவுக்கு அப்போதுதான் திருமணமாகியிருந்தது. என் தந்தை அரசுப் பணியில் இருந்தார், அவரே குடும்பத்தின் நிதி ஆதாரம் என்பதால் இதன் மூலம் அவர் வேலை இழந்தால் குடும்பம் பிழைப்பது கடினம். அதுமட்டுமின்றி, அவரது உயரம் அதிகம், ஆறு அடி, மூன்று அங்குலம் இருப்பார். அதனால் பயணங்களை மேற்கொள்வது மிகக் கடினம். எங்களுக்கு இருந்த ஒரே நிதி ஆதாரம் என் தந்தைதான். எனவே, என் குடும்பத்தில் எல்லோரும் சேர்ந்து, என் அம்மா எனக்காக இந்த வழக்கைப் பார்த்துக்கொள்வது என முடிவெடுத்தார்கள். அவர் அப்படித்தான் இந்த முயற்சியைத் துவங்கினார். அவர் இதனைத் துவங்கியபோது நிறைய புறக்கணிப்புகள், அவமானங்களைச் சந்தித்தார். அதையெல்லாம் கடந்துதான் இன்று இதில் வெற்றிபெற்றுள்ளார். 'என்னுடைய மகன் நிரபராதி' என்ற ஒரே நம்பிக்கைதான் என்னுடைய தாயை இயக்கிய ஒரே விஷயம். அதுதான் எல்லோருடைய ஆதரவையும் பெற்றுத் தந்திருக்கிறது." என்று கூறினார்.
அவர் பட்ட துன்பங்கள் எப்போது தெரியவந்தது?
இது போன்ற புறக்கணிப்புகள், அவமானங்களை உங்களைச் சிறையில் பார்க்க வரும்போது பகிர்ந்துகொள்வார்களா என்று கேட்டதற்கு, "ஒருபோதும் பகிர்ந்துகொண்டதில்லை. இதையெல்லாம் பின்புதான் நான் அறிந்துகொண்டேன். சிறை விடுப்பில் வரும்போதும் உறவினர்கள் வந்து சந்திக்கும்போதுதான் அதையெல்லாம் நான் தெரிந்துகொண்டேன். என்னுடைய அம்மாவைப் பற்றி முதன் முதலாக நெடுமாறனின் மகள் பூங்குழலி 'தொடரும் தவிப்பு' என்ற புத்தகத்தை எழுதினார். அந்தப் புத்தகத்தை நான் இன்றுவரை படித்ததில்லை. என்னுடைய தாயின் துயரத்தை நான் படிக்க விரும்பவில்லை. அனுஸ்ரீ என்ற கேரளாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் 'அடைபட்ட கதவுகளின் முன்னால்' என்று ஒரு புத்தகத்தை எழுதினார். அதையும் நான் இதுவரை படித்ததில்லை. அம்மாவின் துயரங்கள் என்னைத் தாக்கிவிடுமோ, ஒடிந்துவிடுவேனோ என்ற அச்சம் இருந்தது." என்றார்.
நம்பிக்கை ஊட்டும் வார்த்தைகள்
சிறையில் நம்பிக்கை ஊட்டும் வார்த்தைகளை மட்டுமே சொல்வாரா என்ற கேள்விக்கு, "நாங்க ரெண்டு பேருமே அப்படித்தான் வாழ்ந்திருக்கிறோம். அம்மா தன் தரப்பிலிருந்து நம்பிக்கையூட்டும் வாக்கியங்களைச் சொல்வார். "அவரைப் பார்த்தேன், ஆதரவாக இருந்தார், இதைச் சொன்னார்" என்றுதான் தொடர்ந்து நம்பிக்கை ஊட்டுவார். அதுபோலத்தான் நானும் பேசுவேன். "பார்த்துக்கொள்ளலாம், சட்ட ரீதியாக எதிர்கொள்ளலாம். பழைய தீர்ப்புகள் இருக்கின்றன" என்று பேசுவேன். இப்படித்தான் எங்களுக்கு இடையிலான உரையாடல் இருக்கும். ஒருவருக்கொருவர் ஆறுதலாகவும் உற்சாகமூட்டுபவராகவும் இருந்தோம். உற்சாகத்தைக் குறைப்பதுபோல பேசவே மாட்டோம்." என்றார்.
அம்மாவின் கதைகள் காட்டும் உலகம்
அம்மாவின் உத்வேகம் பற்றி பேசுகையில், "எதாவது ஒரு இடத்தில் "ஐயோ, என் பையன் என்னை ஒரு சங்கடத்தில் நிறுத்திட்டானேன்னு" நினைச்சிருந்தா, நான் தோற்றிருப்பேன். "எங்க அம்மாவை இப்படி ஒரு நிலையில் நிறுத்திவிட்டோமே" என்று நான் நினைத்திருந்தால் என் அம்மாவும் தோற்றிருப்பார். சிறையில் யாரையாவது வெளியில் இருந்து பார்க்க வந்தால் பத்து நிமிடம் பேசுவார்கள். ஆனால், நானும் எனது அம்மாவும் மணிக் கணக்காக உட்கார்ந்து பேசுவோம். நீயும் உங்கம்மாவும் உட்கார்ந்து என்னதாண்டா பேசுறீங்க என்று அதிகாரிகள் கேட்பார்கள். எல்லா விஷயத்தையும் அம்மா பேசுவார்கள். திடீரென பஸ் டிக்கெட் விலை ஏற்றத்தைப் பற்றிச் சொல்வார். அங்கே ஒரு மரம் இருந்துதுல்ல, அந்த மரத்தை வெட்டிவிட்டார்கள் என்பார். ஒரு பேருந்தில் வரும்போது இதைப் பார்த்தேன், அதை பார்த்தேன் என்பார். தேநீர் விலை ஏறிவிட்டது என்பார். அப்படிச் சொல்வதன் மூலம், வெளி உலகத்தை அப்படியே சித்திரமாக வரைந்து காண்பிக்க விரும்புவார். அப்படி ஒரு ஆசையும் ஆதங்கமும் அவருக்கு இருந்தது. தன் மகன் பார்க்காத வெளி உலகத்தை அவனுக்கு அப்படியே காட்ட வேண்டுமென விரும்பினார்." என்றார்.