Harassment Case Rajagopalan | "சினிமாவில் நடிக்கவைப்பதாக கூறி பாலியல் சீண்டல்" : ராஜகோபாலன் மீது குவியும் புகார்கள்.
சினிமாவில் நடிக்கவைப்பதாக ஆசை வார்த்தைகள் கூறியதாக தற்போது ஆசிரியர் ராஜகோபாலன் மீது மாணவிகள் பலர் குற்றம்சாட்டியுள்ளனர்.
சென்னை கே.கே.நகரில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு, அதே பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் ராஜகோபாலன் பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து, அவர் மீது 354 ஏ (பாலியல் தொல்லை), தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளில் மீது அசோக் நகர் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், எழும்பூர் நீதிமன்ற நீதிபதி, ராஜகோபாலனை ஜூன் 8-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனியார் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது நேற்று மேலும் 2 பேர் பாலியல் புகார் கூறினார். ஏற்கனவே முன்னாள் மாணவி அளித்த பாலியல் தொல்லை புகாரில் கைதான நிலையில் மேலும் 2 பேர் புகார் கூறியதை தொடர்ந்து, அந்த புகார்கள் தொடர்பாக ஆதாரங்களை திரட்டும் பணியில் அசோக நகர் மகளிர் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக, இந்தப் பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வணிகவியல் பாடம் எடுக்கும் ஆசிரியராக பணிபுரியும், ராஜகோபாலன் மீது பள்ளியின் முன்னாள் மாணவி ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகார் ஒன்றை பதிவிட்டிருந்தார். அந்த குற்றச்சாட்டில் ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு வாட்ஸ் அப்பில் ஆபாச செய்திகளை அனுப்பியதும், மாணவிகளுடனான ஆன்லைன் வகுப்பின்போது அரை நிர்வாணத்தில் மாணவிகளுக்கு அவர் பாடம் எடுத்ததையும் ஆதாரத்துடன் அவர் பகிர்ந்திருந்தார். மேலும், அவர் மாணவிகளை இரவில் வீடியோ கால் செய்ய சொல்லி வற்புறுத்துவதும், திரைப்படங்களுக்கு செல்ல அழைப்பதும் என்று மாணவிகளுக்கு தொடர்ந்து தொல்லை அளித்து வந்ததும் தெரியவந்துள்ளது.
Harassment Case Rajagopalan: ஆசிரியர் ராஜகோபாலன் மீது மேலும் இரு பாலியல் புகார்கள்!
இந்நிலையில் ஆசிரியர் ராஜகோபாலன் தங்களை சினிமாவில் நடிக்கவைப்பதாக ஆசைகாட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக மாணவிகள் தற்போது வாக்குமூலம் கொடுத்துள்ளார். போலீசார் ஏற்கனவே பல குற்றச்சத்துக்களின் கைது செய்யப்பட்டுள்ள ராஜகோபாலன் மீது தற்போது மேலும் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே அந்த பள்ளியின் முன்னாள் மாணவிகள் மற்றும் தற்போது பயிலும் மாணவிகள் என 30-க்கும் மேற்பட்டோர் ராஜகோபாலன் மீது புகார் அளித்துள்ளதாக காவல்துறையினர் அதிர்ச்சிகரமான தகவல் தெரிவித்துள்ளனர். புகார் அளித்துள்ள ஒவ்வொரு மாணவிகளிடமும் தனித்தனியாக ரகசிய விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். பின்னர், அந்த புகார்களின் அடிப்படையில் சென்னை பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்யப்பட உள்ளது. ஆசிரியர் ராஜகோபாலன் மீது மேலும் பல மாணவிகள் புகார் அளிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.