TN Govt: அடடா..! ரூ.4000 உதவித்தொகை - அறிவித்தது தமிழக அரசு - யாருக்கு கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி?
stipend for senior Tamil scholars: வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்குத் மாதம்தோறும் உதவித் தொகை வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
stipend for senior Tamil scholars: வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்குத் மாதம்தோறும், ரூ.4,000 உதவித் தொகை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
தமிழறிஞர்களுக்கான உதவித்தொகை திட்டம்:
தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாகச் சீரிளமைத் திறம் கொண்ட அன்னைத் தமிழுக்கு அருந்தொண்டாற்றி வரும், அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதுமைக்காலத்திலும் பொருள் வறுமை, தமிழ்த் தொண்டர் பெருமக்களைத் தாக்காவண்ணம் மாதந்தோறும் ரூ.3500, மருத்துவப்படி ரூ.500 என நான்காயிரம் ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. தமிழுக்காகத் தம் வாழ்நாளை ஈந்துவரும் பெருமக்களுக்கு இந்த உதவித்தொகை அவர்கள் வாழுங்காலமெல்லாம் தமிழ்த் திருப்பணியில் தொய்வின்றி ஈடுபடும் வகையில் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ் காத்த தகைமைக்காக உதவித்தொகை பெற்ற தமிழறிஞர் பெருமக்களின் மறைவுக்குப் பின்னர், அவரின் மரபுரிமையருக்கு, அவர்தம் வாழ்நாள் முழுவதும் ரூ.2500 மற்றும் மருத்துவப் படி ரூ.500 வழங்கப்படுகிறது.
புதிய பயனாளர்கள் விண்ணப்பிக்கலாம்..!
இதுநாள் வரை இத்திட்டத்தில் 1334 வயது முதிர்ந்த தமிழறிஞர்கள் பயனடைந்துள்ளனர். இந்நிலையில், அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் அகவை முதிர்ந்த தமிழறிஞர் பெருமக்களிடமிருந்து 2024-2025ஆம் ஆண்டிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
யாருக்கு தகுதி இல்லை?
மகளிர் உரிமைத் தொகை, சமூகநல பாதுகாப்பு உதவித்தொகை போன்ற தமிழ்நாடு அரசின் வேறு திட்டங்களின் வாயிலாக உதவித்தொகை அல்லது ஓய்வூதியம் பெற்று வரும் பயனாளிகள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க இயலாது.
விண்ணப்பிக்கத் தகுதிகள்:
- 01.01.2024ஆம் நாளன்று 58 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.
- ஆண்டு வருவாய் ரூ.72,000/-க்குள் இருக்க வேண்டும். (வட்டாட்சியர் அலுவலகத்தில் இணையவழியில் பெறப்பட்ட வருமானச் சான்று இணைக்கப்பட வேண்டும்)
- தமிழ்ப்பணி ஆற்றியமைக்கான விவரக் குறிப்பு
- தமிழ்ப்பணி ஆற்றி வருவதற்கான பரிந்துரைச் சான்று இரண்டு தமிழறிஞர்களிடமிருந்து பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
- ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் (ஸ்மார்ட் கார்டு). மரபுரிமையர் (கணவன் / மனைவி) இருப்பின் அவரது ஆதார் அட்டை நகல் இணைக்க வேண்டும்.
விண்ணப்பப் படிவம் எங்கு கிடைக்கும்?
அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் விண்ணப்பப்படிவத்தினை மண்டல / மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை / உதவி இயக்குநர் அலுவலகத்திலேயே நேரடியாகப் பெற்றுக் கொள்ளலாம் அல்லது தமிழ் வளர்ச்சித் துறையின் வலைத்தளத்திலேயே (www.tamilvalarchithurai.tn.gov.in) கட்டணமில்லாமல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பிப்பது எப்படி?
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், அந்தந்த மாவட்டங்களில் மாவட்டாட்சியர் அலுவலகத்தில் இயங்கிவரும் மண்டல, மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் / மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகங்கள், காஞ்சிபுரம் மாவட்டத்தில் வட்டாட்சியர் அலுவலகத்தில் இயங்கிவரும் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகம் மற்றும் மதுரை மாவட்டத்தில் உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் இயங்கிவரும் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்தின் வாயிலாக மட்டுமே அனுப்பப்பெற வேண்டும். மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறை அலுவலகங்கள் வழியாக அல்லாது, நேரடியாக தமிழ் வளர்ச்சி இயக்ககத்திற்கு வரப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
சென்னையைச் சேர்ந்தவர்கள் மட்டும் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ்ச்சாலை, எழுமூர், சென்னை-600008. என்ற முகவரிக்கு நேரடியாக அனுப்பலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 31.10.2024ஆம் நாளுக்குள் அந்தந்த மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறை அலுவலகங்ளுக்கு வந்து சேர வேண்டும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.