"உங்களுக்கு சாவு மணி ஒலித்து விட்டது" - பாஜகவுக்கு எதிராக கொதித்தெழுந்த எம்.எல்.ஏ. ஈஸ்வரன்..!
அனைத்து துறைகளையும் வைத்துக் கொண்டு எதிர்கட்சிகள் ஆட்சியில் உள்ள மாநிலங்களில் ஆட்சியை கவிழ்க்க பாஜக முயற்சி செய்கிறது என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை கண்டித்து, கோவை சிவானந்தா காலனி பகுதியில் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
"ஆட்சியை கவிழ்க்க பாஜக முயற்சி"
இதில் பேசிய கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன், "நாடு இதுவரை இல்லாத வகையில் நெருக்கடியை சந்தித்து கொண்டிருக்கிறது. ஏமர்ஜெண்சியின் போது கூட இப்படி இல்லை. அறிவிக்கப்படாத ஏமர்ஜென்சி நடக்கிறது. அனைத்து துறைகளையும் வைத்துக் கொண்டு எதிர்கட்சிகள் ஆட்சியில் உள்ள மாநிலங்களில் ஆட்சியை கவிழ்க்க பாஜக முயற்சி செய்து கொண்டிருக்கிறது.
8 ஆண்டு முன்பு நடந்ததற்கு, இப்போது தலைமை செயலகத்தில் ஆதாரம் கிடைக்குமா? கரூரில் வருமான வரித்துறை சோதனையின் போது நடந்ததற்கும், செந்தில் பாலாஜிக்கும் சம்மந்தம் இல்லை. எடப்பாடி பழனிசாமி, சசிகலா, அன்புமணி என ஒவ்வொருவராக மிரட்டல் விடுக்கிறார்கள். செந்தில் பாலாஜியையும் மிரட்டியுள்ளார்கள்.
அதற்கு அடிபணிந்து விட மாட்டோம் என செந்தில் பாலாஜி சொன்னதால் தான் இந்த வெறி, கோபம் உள்ளது. கோவையில் திமுக வெல்ல செந்தில் பாலாஜி காரணமாக இருந்ததால், அவரை முடக்க வேண்டுமென கைது செய்துள்ளார்கள். மற்ற மாநிலங்களைப் போல நடத்தி விடலாம் என நினைத்தால் ஏமாந்து போவீர்கள்.
"உங்களுக்கு சாவு மணி ஒலித்து விட்டது"
பாஜக தவிர அனைத்து அரசியல் கட்சிகளும் ஒற்றுமைப்பட்டு 2024ல் இந்த ஆட்சியை தூக்கி ஏறிய வேண்டுமென முடிவு எடுத்துள்ளார்கள். உங்களுக்கு சாவு மணி ஒலித்து விட்டது. அஸ்திவாரம் ஆட்டம் கண்டு விட்டது. நமது கூட்டணி வெற்றி பெற்று, ஆட்சி அமைக்கும். நாங்கள் பயப்படுபவர்கள் அல்ல. எதற்கும் தயாராக இருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.
இதை தொடர்ந்து பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், "சங்பரிவார்களுக்கு சமாதி கட்டும் வரை இந்த கூட்டணி தொடரும். அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்குகளில் 0.05 சதவீத வழக்குகளில் தான் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்ற அமைப்புகள் அரசியலமைப்பால் உருவாக்கப்படட் அமைப்புகள்.
மோடி உருவாக்கிய அமைப்புகள் அல்ல. அவை சுதந்திரமான செயல்பட கூடிய அமைப்புகள். அப்படி தான் கடந்த காலத்தில் செயல்பட்டு கொண்டு இருந்தது. மோடியை ஹிட்லர் என கூப்பிடுங்கள். அமித்ஷாவை முசோலினி அல்லது கோயபல்ஸ் என கூப்பிடுங்கள். அவற்றை அடிமை அமைப்புகளாக மாற்றி விட்டார்கள்.
மோடி, அமித்ஷா ஏவுகிறார்கள். அமலாக்கத்துறை, வருமானவரித்துறையினர் அம்புகளாக பாய்ந்து கொண்டிருக்கிறார்கள். மோடி, அமித்ஷா பாசிஸ்டாக செயல்பட்டு கொண்டு இருக்கிறார். யார் அமைச்சராக இருக்க வேண்டுமென முடிவு செய்வது முதலமைச்சர். அவர் அமைச்சரவை பொறுப்புகளை பகிர்ந்து அளித்து அனுப்பிய கடித்ததை திருப்பி அனுப்பும் அதிகாரத்தை ஆளுநர் யார் வழங்கியது?
ஆளுநருக்கான அனைத்து செலவுகளை மாநில அரசுகள் தான் செய்கிறது. ஆளுநர் மாளிகைக்கு அவ்வளவு பெரிய நிலம் தேவையில்லை. அந்த நிலத்தை ஏழை மக்களுக்கு பகிர்ந்து அளியுங்கள். தமிழ்நாடு அரசிற்கு எதிராக போட்டி அரசாங்கத்தை ஆளுநர் நடத்தி கொண்டிருக்கிறார். இது ஜனநாயகத்திற்கு புறம்பானது. பாஜகவிற்கு பாடம் புகட்ட வேண்டும்” எனத் தெரிவித்தார்.