MK Stalin: “பாஜக அரசுக்கு தமிழ் என்றால் கசப்பு, தமிழர்கள் என்றால் வெறுப்பு“ - கடுமையாக விமர்சித்த முதல்வர்
முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், கீழடி விவகாரத்தில் பாஜக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். கடிதத்தின் விவரங்களை காணலாம்.

திமுக தலைவர் ஸ்டாலின், தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், பாண்டிய மன்னரின் படைகள்தான் மறுபடியும் அணிவகுத்ததோ, பட்டாளச் சிப்பாய்கள்தான் களம் புகுந்தனரோ என விழிகள் வியந்து பார்க்கின்ற வகையில், மதுரை விரகனூர் சாலையில் ஜூன் 18-ஆம் நாள் திமுக மாணவரணியினர் அன்னைத் தமிழின் பெருமை காத்திட போராட்டக் களத்தில் இறங்கியதாக பெருமிதம் தெரிவித்துள்ளார்.
“ஆய்வறிக்கையை திட்டமிட்டு புறக்கணிக்கிறது பாஜக அரசு“
தமிழர்களின் பண்பாட்டுப் பெருமையைப் பறைசாற்றும் கீழடி அகழாய்வுகள் குறித்த அறிவியல்பூர்வமான ஆய்வறிக்கையை மத்திய பாஜக அரசு திட்டமிட்டு புறக்கணித்து, திருப்பி அனுப்பியதற்கான எதிர்வினைதான், திமுக மாணவரணியின் மாபெரும் ஆர்ப்பாட்ட அணிவகுப்பு என்று குறிப்பிட்டுள்ளார்.
மாணவர்கள், இளைஞர்கள், இளம்பெண்களை ஒருங்கிணைத்து, 'கீழடி தமிழர் தாய்மடி' என்ற முழக்கத்துடன் புறநானூற்று வீரர்கள் போல ஆர்ப்பாட்டப் போர்ப்பாட்டாக உணர்ச்சிமிகு குரலெழுப்பி, தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மத்திய பாஜக அரசின் செவிப்பறை கிழியச் செய்திருப்பதை, திமுக தலைவர் என்ற முறையிலும், தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற வகையிலும் பாராட்டி மகிழ்வதாக தெரிவித்துள்ளார்.
“தமிழ் என்றால் கசப்பு, தமிழர்கள் என்றால் வெறுப்பு“
கீழடியில் நடந்த அகழாய்வுகள், தமிழர்களின் நாகரிகம் தனித்துவமான நாகரிகம் என்பதையும், தமிழர்களின் பண்பாடு மிகவும் தொன்மையானது என்பதையும் ஆதாரப்பூர்வமாக மெய்ப்பித்த அகழாய்வு என கூறியுள்ள அவர், கலைஞர் எச்சரித்தது போலவே, தமிழ் என்றால் கசப்புடனும், தமிழர்கள் என்றால் வெறுப்புடனும் பார்க்கக்கூடிய மத்திய பாஜக அரசு, கீழடி அகழாய்வுகளில் வெளிப்பட்ட தமிழ்ப் பண்பாட்டின் பெருமையை மறைக்கவும் புதைக்கவும் தொடர்ந்து முயற்சித்து வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
தொல்லியல் பணிகளை மேற்கொண்ட இயக்குநர் அமர்நாத் ராமகிருஷ்ணாவை அசாம் மாநிலத்திற்கு இடமாறுதல் செய்து தமிழ்ப் பண்பாட்டின் மீதான வெறுப்புணர்வை பாஜக அரசு அப்பட்டமாகக் காட்டியது என்றும், பின்னர், சட்டப் போராட்டத்தின் மூலம் தமிழ்நாட்டிற்கு அவர் மீண்டும் வந்து பணியாற்றினார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
“சிந்துவெளி நாகரிகத்தை அழிக்க நினைக்கும் பாஜக“
தரவுகள் எதுவுமில்லாத கற்பனையான சரஸ்வதி நாகரிகத்தை முன்னிறுத்தி, திராவிடப் பண்பாட்டு அடையாளமான சிந்துவெளி நாகரிகத்தை அழிக்க நினைக்கும் பாஜக, இதுவரை சரஸ்வதி நாகரிகத்தை எந்தவித அறிவியல் சோதனைகள் மூலமாகவும் நிரூபிக்கவில்லை என மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆனால், தமிழர் பண்பாட்டு அடையாளமான கீழடி அகழாய்வில் கிடைத்த பொருள்கள் ஒவ்வொன்றும், உலகத் தரத்திலான அறிவியல்பூர்வமான ஆய்வுக்குட்படுத்தப்பட்டு நிரூபிக்கப்பட்டும்கூட, அதனை ஏற்பதற்குப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசுக்கு மனது வரவில்லை என்று வேதனை தெரிவித்துள்ளார். மேலும், அந்தளவுக்கு தமிழினத்தின் மீதான வெறுப்பு அந்த கட்சியின் கொள்கைகளில் ஊறிக் கிடக்கிறது என விமர்சித்துள்ளார்.
மொத்தத்தில், கீழடியிலும், சென்னையிலும் ஒலித்திருப்பது, முதல் கட்ட முழக்கம் என்றும், இது டெல்லி வரை தொடர்ந்து எதிரொலிக்கும் என்றும், தமிழரின் பண்பாட்டுப் பெருமையை நிலைநாட்டும் வரை திமுகவின் போராட்டம் ஓயவே ஓயாது! என்று மு.க. ஸ்டாலின் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.





















