நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், உயர்கல்விகளுக்கு நடத்தப்படும் நீட் போன்ற தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை மாநில அரசு ரத்து செய்துள்ளது. இதனால், மருத்துவ இளங்கலைப் படிப்புகளுக்கு நடத்தப்படும் நீட் போன்ற பல்வேறு நுழைவுத்தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,
“ தமிழகத்தில் உள்ள 12ம் வகுப்பு மாணவர்களின் எதிர்கால நலன் கருதி இந்த கடிதத்தை தங்களது கவனத்திற்கு அவசரமாக எழுதுகிறேன். நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வை நடத்த இயலாது என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சி.பி.எஸ்.இ. வாரியம் மாணவர்களின் மதிப்பெண்களுக்காக ஒரு குழு ஒன்றையும் அமைத்துள்ளது.
தற்போதைய கொரோனா பரவும் சூழலை கருத்தில் கொண்டு, நடப்பாண்டில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வை ரத்து செய்வது என்று முடிவு செய்துள்ளோம். 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் அளிப்பது குறித்து முடிவு செய்வதற்காக ஒரு குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள கலை மற்றும் அறவியல் கல்லூரிகள், தொழில்முறை உயர்கல்விகளுக்கு இந்த மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடத்தப்பட உள்ளது. இந்த முடிவு மாணவர்களின் பாதுகாப்பு கருதி எடுக்கப்பட்டுள்ளது. மேலும், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் சுகாதாரத்துறையினரின் ஆலோசனையின் பேரிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த இக்கட்டான சூழ்நிலையில், சில தொழில்முறை பாடப்பிரிவுகளில் சேர்வதற்கு தேசிய அளவில் நுழைவுத்தேர்வு நடத்துவது மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் நலவாழ்விற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். எனவே, தேசிய அளவில் நடத்தப்படும் நீட் போன்ற நுழைவுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று தங்களை வலியுறுத்துகிறேன். மேலும், எங்களது மாநிலம் மருத்துவ படிப்புக்கான எம்.பி.பி.எஸ்.சீட் உள்பட அனைத்து தொழில்முறை பாடப்பிரிவுகளுக்கும் மாநில அரசின் 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலே நிரப்பிக்கொள்வதற்கு அனுமதிக்க வேண்டும். எனது நேர்மையான வேண்டுகோளை ஊக்குவித்து, அதற்கு சாதகமாக நடவடிக்கை எடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர் எழுதியுள்ளார்.
முன்னதாக, தமிழகத்தில் உள்ள கல்வியாளர்கள், பெற்றோர்கள் ஆகியோரிடம் பொதுத்தேர்வு நடத்துவது குறித்து பெறப்பட்ட கருத்துக்களைத் தொடர்ந்து, சட்டபை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, சட்டமன்றத்தின் அனைத்துக்கட்சி பிரதிநிதிகளான 13 கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி ஆலோசனை நடத்தினர். இவர்களின் கருத்துக்களின் அடிப்படையிலே தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க ஒரு குழு ஒன்றையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : TN Corona Cases, 5 June: குறையும் கொரோனா பாதிப்பு - தமிழ்நாடு கொரோனா நிலவரம்!