(Source: ECI/ABP News/ABP Majha)
MK Stalin AutoBiography: முதல்வரின் சுயசரிதை புத்தக வெளியீட்டு விழா; பங்கேற்பாளர்களின் முழு விவரம் இதோ
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் எழுதிய, ' "உங்களில் ஒருவன்" பாகம் I நூல் வெளியிட்டு விழா நாளை (பிப்.28ம் தேதி) நடைபெற இருக்கிறது
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் எழுதிய, ' "உங்களில் ஒருவன்" பாகம் I நூல் வெளியிட்டு விழா நாளை நடைபெற இருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் செயல் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிடுகிறார்.
நாளை மாலை 3:30 மணி அளவில் நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்தில் இந்த விழா மிகுந்த அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. கழகப் பொதுச்செயலாளர், நீர்வளத் துறை அமைச்சர் அண்ணன் துரைமுருகன் தலைமையேற்க, கழகப் பொருளாளரும் நாடாளுமன்ற மக்களவை தி.மு.க. குழுவின் தலைவருமான டி.ஆர்.பாலு முன்னிலை வகிக்க, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் செயல் தலைவர் ராகுல் காந்தி புத்தகத்தை வெளியிடுகிறார்.
கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன், பீகார் மாநில எதிர்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், ஜம்மு- காஷ்மீர் முன்னாள் முதலமைசச்சர் உமர் அப்துல்லா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கயிருக்கின்றனர். பாடலாசிரியர் வைரமுத்து, நடிகர் சத்தியராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கிச் சிறப்பிக்கிறார்கள். நூலாசிரியர் என்ற முறையில் முதலைவர் ஸ்டாலின் ஏற்புரை வழங்குகிறார்.
சுயசரிதை புத்தகம்:
தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் தனது 23 வயது வரையிலான வாழ்க்கை அனுபவங்களை இந்த புத்தகத்தில் எழுதியுள்ளார். 1953 மார்ச் 1, பிறந்த தனத்தில் இருந்து, 1976 மார்ச் 1 அன்று மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டது வரையிலான வாழ்க்கைப் பயணங்களை, உங்களில் ஒருவன் முதல் பாகமாக எழுதியுள்ளார்.
இளமைப்பருவம்: அரசியலுக்கு வருவதற்கு முன்பாக, பல்வேறு நாடகங்களிலும், திரைப்படங்களிலும் மு.க ஸ்டாலின் நடித்துள்ளார். அவர் நடித்த முதல் நாடகம் திருவல்லிக்கேணி என்.கே.டி.கலா மண்டபத்தில் அஞ்சுகம் நாடக மன்றம் நடத்திய "முரசே முழங்கு" என்ற நாடகமாகும். இந்நாடகம் கலைஞர் முன்னிலையில், எம்.ஜி.ஆர். தலைமையில் நடந்தது. இந்நாடகம் பல இடங்களிலும் நடத்தப்பட்டது. நான்கு ஆண்டுகள் கழித்து அதன் வெற்றிவிழா திருவல்லிக்கேணியில் அதே மேடையில் நடத்தப்பட்டது.
திரைப்படங்கள்:
ஒரே ரத்தம்(1988), மக்கள் ஆணையிட்டால்(1988), குறிஞ்சி மலர்(நெடுந்தொடர்) ஆகிய படைப்புகளில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
மிசா சிறை:
1975ல் பிரதமர் இந்திரா காந்தி நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தார். அன்றைய கலைஞர் தலைமையிலான தி.மு.க. அரசு நெருக்கடி நிலையை அடியோடு எதிர்த்ததால் மத்திய அரசால் முறையில் கலைக்கப்பட்டது. இதையடுத்து முரசொலி மாறன், மு.க ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள் மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் என 25000க்கும் மேற்பட்டோர் ‘மிசா' சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
நெருக்கடி நிலை காலகட்டத்தில் ஸ்டாலின் ஓராண்டு காலம் சிறையில் இருந்தார். மிசாவில் ஸ்டாலினுடன் சிறை வைக்கப்பட்ட சிட்டி பாபு காவல்துறையினர் தாக்கிய தீவிரத்தால் இறந்துபோனது கழகத்தின் வரலாற்றில் ஆறாத வடுவை ஏற்படுத்தியது. ஸ்டாலினை தீவிரமான அரசியலில் பங்குபெற வைத்ததில் இந்த சிறை வாசத்துக்கு பெரும்பங்குண்டு என்று கூறப்படுகிறது.