(Source: ECI/ABP News/ABP Majha)
Senthil Balaji: அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு ரத்து - சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாரர் தகவல்
வழக்கை ரத்து செய்த உயர்நீதிமன்றத்தின் உத்தரவு நகலை வரும் 19-ஆம் தேதிக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
2011-ஆம் ஆண்டில் நடந்த அதிமுக கட்சி சார்பில் வெற்றி பெற்று தமிழக அரசின் போக்குவரத்துத்துறை அமைச்சராக பணியாற்றிய செந்தில் பாலாஜி, அத்துறையில் வேலை தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதனடிப்படையில் செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறை மூன்று வழக்குகளை பதிவு செய்தன. இதில் ஒரு வழக்கில் குற்றப்பத்திரிகை நகல் பெறுவதற்காக நேரில் ஆஜராகும்படி, அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு சென்னை எம்.பி - எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதற்கிடையே, அந்த வழக்கை ரத்து செய்யக் கோரி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சண்முகம் என்பவர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதி நிர்மல் குமார் முன் விசாரணைக்கு வந்தபோது, காணொலி காட்சி மூலம் ஆஜராகியிருந்த புகார்தாரர்கள், பணத்தை திருப்பி பெற்றுக் கொண்டதாக தெரிவித்தனர். இதை பதிவு செய்த நீதிபதி, வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, வழக்கை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ள விவரத்தை குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து, உயர் நீதிமன்ற உத்தரவின் நகலை சமர்ப்பிக்க உத்தரவிட்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி, விசாரணையை ஆகஸ்ட் 19ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.
ஒரு வழக்கில் நேரில் ஆஜராகுவதில் இருந்து விலக்கு பெற்ற நிலையில், மீதமுள்ள இரண்டு வழக்குகளிலும் நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை சிறப்ப நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அமைச்சர் என்பதாலும், துறைசார்ந்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாலும் ஆஜராக முடியவில்லை என்று செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர் தெரிவித்தார். இதனை ஏற்க மறுத்து நீதிபதி, அமைச்சர் என்பதால் சிறப்பு சலுகைகள் வழங்கப்பட மாட்டாது விசாரணையை இன்று (6ம் தேதி) தள்ளிவைத்தார்.
செந்தில் பாலாஜி வழக்கு:
செந்தில் பாலாஜியின் மீது தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்த நிலையில், கடந்த 2015ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி கட்சியின் மாவட்ட செயலாளர் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து செந்தில்பாலாஜியை நீக்கியது அதிமுக தலைமை. கரூர் மாவட்டத்தின் புதிய மாவட்ட செயலாளராக எம்.ஆர் விஜயபாஸ்கரை நியமித்தார் ஜெயலலிதா. அதனைத் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 442 வாக்கு வித்தியாசத்தில் எம்.ஆர். விஜயபாஸ்கர் வெற்றி பெற்றார். ஆனால், அன்புநாதன் வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை, கண்டெய்னரில் பிடிப்பட்ட கோடிக்கணக்கான பணம் இவற்றைத் தொடர்ந்து, செந்தில்பாலாஜி போட்டியிட்ட அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தலை தள்ளி வைத்தது தேர்தல் ஆணையம். கரூரில் தொகுதியில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு போக்குவரத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுகவில் நிலைத்தன்மை இல்லாமல் இருந்த நிலையிலும், கட்சித் தலைமை தன்னை கண்டுக்கொள்ளாமல் விட்டதாலும், செந்தில்பாலாஜி திமுகவிற்கு மாறினார்.
போக்குவரத்து துறை அமைச்சராக இருந்து போது, செந்தில் பாலாஜி மீதான பணம் மோசடி தொடர்பான விசாரணையை விஜயபாஸ்கர் வேகப்படுத்தினார்.
மேலும், வாசிக்க:
’லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை’ முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் பின்னணி..!
Senthil Balaji : 'வரும் காலங்களில் சீரான மின் விநியோகம்' - அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு!