சிறுமி பாலியல் வன்கொடுமை: 8 நாட்களாகியும் குற்றவாளி கைது செய்யப்படவில்லை! தமிழக காவல்துறை செயலிழப்பா? அன்புமணி கேள்வி
திமுக ஆட்சிக்கு வந்த நாளில் இருந்தே பிறந்து சில ஆண்டுகளே ஆன குழந்தைகள் முதல் 80 வயது மூதாட்டிகள் வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை தான் நிலவுகிறது

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவனை 8 நாளாகியும் பிடிக்க முடியவில்லை என்றும் முற்றிலும் செயலிழந்து விட்டதா தமிழக காவல்துறை? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
சிறுமியை பாலியல் வன்கொடுமை - காவல் துறை செயலிழப்பு; அன்புமணி கண்டனம்
இந்த சம்பவம் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.,
திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கத்தில் 10 வயது மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இன்றுடன் 8 நாள்களாகும் நிலையில், அதற்கு காரணமான மனித மிருகம் இன்று வரை கைது செய்யப்படவில்லை. அதிகாரம்மிக்கவர்களுக்கு ஒன்று என்றால், குற்றஞ்சாட்டப்பட்டவர்களை அடித்துக் கொல்லும் அளவுக்கு களமிறங்கும் காவல்துறை, அடித்தட்டு மக்களின் இன்னலை கண்டுகொள்ள மறுப்பது கண்டிக்கத்தக்கது.
திருவள்ளூரில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் 4ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவி, முன்கூட்டியே பள்ளி முடிந்ததால், அருகில் ஆரம்பாக்கத்தில் உள்ள பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார். தொடர்வண்டி நிலையத்தைக் கடந்து ஆள்நடமாட்டம் இல்லாத மாந்தோப்பு வழியாக சென்ற போது பின்தொடர்ந்து வந்த மனித மிருகம் ஒன்று சிறுமியை கத்தி முனையில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. இதில் சிறுமியின் உடல் முழுவதும் இரத்தக் காயங்கள் ஏற்பட்டுள்ளன. இது தொடர்பாக ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் சிறுமியின் குடும்பத்தினர் புகார் அளித்த நிலையில் இன்று வரை எந்த முன்னேற்றமும் இல்லை.
காவல்துறையினரின் அலட்சியத்தைக் கண்டித்து அவரது உறவினர்களும், ஊர் மக்களுக்கும் ஆரம்பாக்கம் காவல் நிலையத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். அதைத் தொடர்ந்து தான் இந்த வழக்கில் குற்றவாளியை கைது செய்வதற்காக 3 காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனாலும், குறிப்பிடும்படியாக இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த விவகாரத்தில் தமிழக காவல்துறை காட்டும் அலட்சியம் மன்னிக்க முடியாததாகும்.
ஆரம்பாக்கம் காவல்நிலைய அதிகாரிகள் இந்த விவகாரத்தில் அக்கறை காட்டியிருந்தால், குற்றம் நடந்த சில மனி நேரங்களில் குற்றவாளியை கைது செய்திருக்க முடியும். குற்றம் நடந்த இடத்திற்கு இரு பக்கங்களிலும் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில், அவற்றின் வாயிலாக குற்றவாளி யார்? அவன் எந்த திசையில் தப்பிச் சென்றான் என்பதைக் கண்டறிந்திருக்க முடியும். ஆனால், மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், பொறுப்பைக் தட்டிக் கழித்துள்ளனர். இது காவல்துறைக்கு இழுக்கைச் சேர்த்திருக்கிறது.
திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதலாகவே காவல்துறையின் செயல்பாடுகள் முடங்கிக் கிடக்கின்றன. வழக்கமாக காவல்துறைக்கு ஒரு தலைவர் தான் இருப்பார். ஆனால், இன்றைய தமிழக காவல்துறையில் ஆளுங்கட்சியின் அதிகார மையங்களாக திகழும் ஒவ்வொருவரும் ஆதிக்கம் செலுத்துவதால் காவல்துறையின் உயர்மட்டத்தில் பல குழுக்கள் நிலவுகின்றன. அவ்வாறு செயல்படுவர்களை காவல்துறையின் தலைவராலேயே கட்டுப்படுத்த முடியாத நிலை நிலவுகிறது. தங்களின் காட்பாதர்களாக இருப்பவர்கள் பிறப்பிக்கும் கட்டளைகளை செயல்படுத்துவதில் மட்டும் தான் காவல்துறை உயரதிகாரிகள் ஆர்வம் காட்டுகின்றனர். மக்களைக் காக்க வேண்டும் என்ற அக்கறை அவர்களுக்கு சிறிதும் இல்லை. இதே நிலை தொடர்ந்தால் தமிழக காவல்துறை திருத்த முடியாத அளவுக்கு சீரழிந்துவிடும்.
தமிழ்நாட்டின் முதன்மை பல்கலைக்கழகமாக கருதப்படும் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஓர் மனித மிருகம் எந்த தடையும் இல்லாமல் நுழைந்து அங்கு பயிலும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து விட்டு, தப்பிச் செல்ல முடியும் என்றால், தமிழ்நாட்டில் சட்டம் & ஒழுங்கு எங்கு வாழ்கிறது?
சென்னை அண்ணாநகரில் ஏழைத் தொழிலாளி குடும்பத்தைச் சேர்ந்த சிறுமி அரசியல் செல்வாக்கு படைத்த ஒருவரின் ஆதரவு பெற்ற ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில், குற்றம் செய்தவரை கைது செய்து தண்டிக்காமல், புகார் கொடுத்த சிறுமியின் பெற்றோரையே காவல்துறை கொடுமைப்படுத்தும் என்றால் தமிழக காவல்துறைக்கு கடமை உணர்வும் மனசாட்சியும் எங்கிருக்கிறது?
சென்னையில் பெண் வழக்கறிஞர் ஒருவரின் ஆபாச படங்கள் அவரது காதலரால் இணையத்தில் பரவவிடப்பட்ட நிலையில், அதை நீக்க வேண்டும் என்று புகார் கொடுத்த அந்த பெண் வழக்கறிஞரை கட்டாயப்படுத்தி, அவருடன் சேர்ந்து ஆபாச படங்களை ஆண் காவலர்கள் பார்ப்பார்கள் என்றால் தமிழக காவல்துறையில் அறமும், ஒழுக்கமும் எங்கு இருக்கிறது?
திமுக ஆட்சிக்கு வந்த நாளில் இருந்தே பிறந்து சில ஆண்டுகளே ஆன குழந்தைகள் முதல் 80 வயது மூதாட்டிகள் வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை தான் நிலவுகிறது. இது குறித்து விமர்சனங்கள் எழும் போதெல்லாம், ‘‘ அது தான் குற்றவாளிகளை கைது செய்து விட்டோமே? அப்புறம் என்ன?’’ என்று வினா எழுப்பும் மனநிலையில் தான் ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள். தமிழ்நாட்டு பெண்களுக்கு எத்தகையக் கொடுமைகள் வேண்டுமானாலும் இழைக்கப்படலாம், அவற்றையெல்லாம் தடுக்க மாட்டோம்; மாறாக, அவர்களுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்குவதையும், அரசு பேருந்துகளில் இலவச பயணம் செய்ய அனுமதிப்பதையும் காரணம் காட்டியே அடுத்த தேர்தலிலும் வாக்குகளை வாங்கி விடுவோம் என்று நினைப்பவர்கள் ஆட்சியில் இருக்கிறார்கள் என்றால், அவர்களை விட மிக மோசமான நச்சுக்கிருமிகள் எவரும் இருக்க முடியாது. அக்கிருமிகள் ஒழிக்கப்பட வேண்டும்.
திருவள்ளூர் அருகே ஆரம்பாக்கத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய மனித மிருகத்தை உடனடியாக கைது செய்ய வேண்டும். தமிழகம் முழுவதும் பெண்கள் அச்சமின்றி பாதுகாப்பாக நடமாடும் நிலையை உறுதி செய்ய வேண்டும். இவற்றையெல்லாம் செய்யத் தவறிய திமுக அரசை வரும் தேர்தலில் தமிழக மக்கள் வீட்டுக்கு அனுப்பப் போவது 100 விழுக்காடு உறுதி. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.





















