"ஒருநாள் கரண்ட் இல்லனாலும் கேள்வி கேப்பாங்க" : அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு!
அனைத்து பணிகளையும் சிறப்பாக மேற்கொண்டாலும், ஒரு நாளைக்கு மின்சாரம் இல்லையென்றால் நம்முடைய ஒட்டுமொத்த பணிகளையும் மக்கள் கேள்விக்குட்படுத்துவார்கள் என அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாட்டுப் பணிகள் மற்றும் வெள்ளத்தடுப்புப் பணிகள் தொடர்பாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
சென்னையில் நடந்த முக்கிய மீட்டிங்: ரிப்பன் கட்டட வளாகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, முக்கிய அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி, "இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட திட்டப்பணிகள் மற்றும் தூர்வாரும் பணிகளை தொய்வின்றி தொடர்ந்து செயல்படுத்திட வேண்டும். சாலைகளில் தேங்கும் மழைநீரினை அகற்ற போதுமான அளவில் மோட்டார் பம்புகளை வெளியூர்களிலிருந்து மழை தொடங்குவதற்கு முன்பே கொண்டு வரவேண்டும்.
தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்களை மீட்டு தங்கவைப்பதற்கான நிவாரண மையங்களில் சுகாதாரமான முறையில் குடிநீர், பால், பாய். போர்வை போன்ற அடிப்படைத் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்ய மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இப்பொழுதே தயார்நிலையில் இருக்க வேண்டும். மழைக்காலங்களிலும் நீரேற்று நிலையங்கள் தொடர்ந்து இயங்கும் வகையில் தொழில்நுட்ப நடவடிக்கைகளை உறுதி செய்திட வேண்டும்.
அதிகாரிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு: மழைநீர் வடிகால்கள், வண்டல் வடிகட்டித் தொட்டிகள் மற்றும் கழிவுநீர் குழாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை சரிசெய்திட வேண்டும். மேலும், மழைநீர் வடிகால்களில் உள்ள மனித நுழைவு பகுதி மற்றும் இரண்டு மனித நுழைவு பகுதிகளுக்கு இடைப்பட்ட பகுதிகளில் உள்ள கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டிருப்பதை உறுதி செய்திட வேண்டும். இதில் எந்த தவறுகளும் நிகழாவண்ணம் பணியினை சரியாக மேற்கொள்ள வேண்டும்.
அனைத்து பணிகளையும் சிறப்பாக மேற்கொண்டாலும், ஒரு நாளைக்கு மின்சாரம் இல்லையென்றால் நம்முடைய ஒட்டுமொத்த பணிகளையும் மக்கள் கேள்விக்குட்படுத்துவார்கள். அதனால் மழைக்காலத்தில் மின் வாரியப் பணி என்பது மிகவும் முக்கியமானது என்பதைக் கருத்தில் கொண்டு விழிப்புணர்வுடன் பணியாற்றிட வேண்டும்.
கழிவுநீர் கால்வாய்களில் தன்னார்வலர் அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ள அவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும். மழைக்கு முன்பாக அவர்களை அழைத்துப் பேசுவது மிகவும் சிறப்பாக அமையும். மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் மக்கள் பணிகளில் நீண்ட அனுபவம் உள்ளவர்கள். பேரிடர் காலங்களில் மக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அவர்கள் தான் பதிலளிப்பவர்கள்.
எனவே, அலுவலர்கள் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளுடன் தொடர்பில் இருந்து அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டு. விரைந்து பணியாற்றிட வேண்டும். அலுவலர்கள் ஆய்வுப்பணிகளுக்கு செல்லும் போது நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பினர்கள். மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளை அழைத்துச் செல்ல வேண்டும்" என்றார்.