செல்லூர் ராஜூ வாண்டடா வண்டில ஏறுகிறார்; நான் தெர்மாகோலுக்கு போய்டுவேன்! - சிரிச்சி கலாய்த்த அமைச்சர்
வழித்தடங்களிலும் பள்ளி, கல்லூரி நேரத்திற்கு ஏற்ப பேருந்து வசதிகள் செய்து கொடுக்கப்படும்
செல்லூர் ராஜு தேவையில்லாம வண்டியில் ஏறுகிறார் எனவும் நான் தெர்மாகோல் பற்றி பேச வேண்டி வரும் எனவும் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேரவையில் தெரிவித்தார்.
5ஆம் நாள் சட்டமன்ற கூட்டத்தொடரில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். அதனடிப்படையில் சட்டமன்ற உறுப்பினர் ஷாநவாஸ் பேசுகையில், “தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே பேருந்துகள் உடைந்து ஓடுகிறது. கண்ணாடி இல்லாமல் ஓடுகிறது. படிகட்டு தொங்குகிறது என்றெல்லாம் செய்திகள் எதிர்மறையாக வருகிறது. அது பழுதாகி பணிமனைக்கு செல்லும் போது கூட அதை படம் பிடித்து செய்தியாக்குகிறார்கள். ஏன் இப்படி செய்தியாக்கப்படுகிறது. போக்குவரத்துறை ஏன் குறி வைக்கப்படுகிறது. இதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதை இந்த அவை வாயிலாக அறிய விரும்புகிறோம்” என கேள்வி எழுப்பினார்.
இதுகுறித்து பதிலளித்த அமைச்சர் சிவசங்கர் “கொரோனா காலத்தில் தனியார் பள்ளியில் படித்த மாணவர்கள் எல்லாம் அரசுப்பள்ளிக்கு மாறியபோது மாணவர்களுக்கு புதிய பேருந்து சேவை தேவை பட்டது. புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் மாணவியரின் சேர்க்கை அதிகரித்தது. அப்போது கூடுதல் பேருந்து வசதி தேவைப்பட்டது. அவையும் செய்து கொடுக்கப்பட்டன. உதவித்தொகை அறிவித்தபோது கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை அதிகரித்தது. அப்போதும் பேருந்து வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன.
வழித்தடங்களிலும் பள்ளி, கல்லூரி நேரத்திற்கு ஏற்ப பேருந்து வசதிகள் செய்து கொடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
மேலும், “பழைய பேருந்துகள் இயக்கபடுவதாக செய்திகள் வருவதாக கூறப்படுகிறது. கடந்த காலத்தில் ஓடிய பேருந்து, கயிறு வைத்து கட்டிய பேருந்து என அந்த புகைப்படங்களையெல்லாம் இப்போது போட்டு ட்ரெண்ட்ட் செய்து வருகிறார்கள். அதை சில ஐடி விங் செய்து வருகிறது” எனக் குறிப்பிட்டார்.
அப்போது எம்.எல்.ஏ செல்வராஜ் குறுக்கிட்டதாக தெரிகிறது. இதைப்பார்த்த அமைச்சர் சிவசங்கர், “செல்வராஜ் அண்ணே கையை இறக்குங்க.. கொஞ்சம் பேசாம இருங்க. எழும்பும்போது பேசுங்க. உட்காந்துட்டு பேசாதீங்க” என்றார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், “அவையெல்லாம் Fact Check செய்யப்பட்டு எது புதிது? எது பழையது என தெரிந்து கொண்டு பேச வேண்டும்” எனத் தெரிவித்தார்.
அப்போது முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு குறுக்கிட்டதாக தெரிகிறது. இதற்கு சபாநாயகர் அப்பாவு, ”செல்லூர் ராஜு உட்காருங்க. நடந்த விஷயத்தை சொல்றாங்க கேட்டுட்டு இருங்க” எனறார்.
இதில் கடுப்பான அமைச்சர் சிவசங்கர் செல்லூர் ராஜூவை பார்த்து, “செல்லூர் ராஜு தேவையில்லாம வண்டியில் ஏறுகிறார். நான் மறுபடியும் தெர்மாக்கோலுக்கு போக வேண்டி வரும். புதிய பேருந்துகள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பழைய பேருந்துகள் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. 15 ஆண்டுகள் ஓட்டிய பேருந்துகள் எல்லாம் மாற்ற வேண்டும் என கூறிய நிலையில் அவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன” என குறிப்பிட்டார்.