விவசாயிகளுக்கு விரைவில் 24 மணி நேர மும்முனை மின்சாரம் வழங்க திட்டம் - அமைச்சர் செந்தில் பாலாஜி
தமிழ்நாடு முழுவதிலும் விவசாயத்திற்கு ஒரு நாளிற்கு 18 மணி நேரம் மும்முனை மின்சாரம் கோடையிலும் தடையில்லாமல் வழங்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
இலவச மின்சாரம் மற்றும் மானியங்கள் தற்போது உள்ள நிலையே தொடரும் எனவும் அதில் எந்த மாற்றமும் இல்லை எனவும் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, “வழக்கமாக கோடைக்காலத்தில் அதிக மெகா வாட் தேவைப்படும், கோடைகாலத்தில் கூடுதலாக தேவைப்படும் 1562 மெகா வாட் மின்சாரத்தை மாற்று ஏற்பாடு மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் கோடைக்காலத்தில் மின் தடை ஏற்படாது” என கூறினார்.
”தமிழ்நாடு முழுவதிலும் விவசாயத்திற்கு ஒரு நாளிற்கு 18 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படும். உற்பத்தி மற்றும் கட்டமைப்பை வலுப்படுத்திய பின்னர் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும். இந்த 18 மணி நேர மின்சாரம் கோடையிலும் தொடர்ந்து வழங்கப்படும்” என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
”மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இன்னும் 67 ஆயிரம் இணைப்புகள் இணைக்கவில்லை. இதற்கான கால அவகாசம் முடிந்த நிலையில் மேலும் அவகாசம் நீட்டிக்கப்படாது” என ஏற்கனவே அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் திருவொரும்பூரில் உதவி பொறியாளர், அலுவலகத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் இருந்தால் ஒரே இணைப்பாக மாற்ற வேண்டும் என தானாக சுற்றறிக்கை அனுப்பிய விவகாரம் தொடர்பாக அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
கடந்த முறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகையில், சூரிய மின்சக்தி பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பதில் ராஜஸ்தான் முதல் இடத்தில் உள்ளது. தமிழகத்தில் முதன் முறையாக பிப்ரவரி 27ஆம் தேதி அதிகபட்சமாக சூரிய மின்சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 6 ஆயிரம் மெகாவாட் தயாரிப்பிற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. திருவாரூரில் முதல் சூரிய மின் உற்பத்தி பூங்காவை தமிழக முதல்வர் தொடங்கி வைக்க இருக்கிறார். அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார்.
மேலும், இதுவரை தமிழகத்தில் 2.67 கோடி பேர் மின் எண்ணுடன் அதார் எண்ணை இணைத்துள்ளனர். ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் பல முறை நீட்டிக்கப்பட்ட நிலையில் மேலும் கால அவகாசம் கொடுக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இடையில் மின் எண்ணூடன் ஆதாரை இணைக்கும் பணியில் சில சிக்கல் இருந்தாலும் அந்த பணிகள் நிறைவடைந்துள்ளது என கூறினார்.