அதிமுக ஆட்சியில் 4 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வீண் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு..!
அதிமுக ஆட்சியில் வீணடிக்கப்பட்ட 4 லட்சம் தடுப்பூசியை சமன் செய்தது மட்டுமில்லாமல் 3 லட்சம் தடுப்பூசி கூடுதலாக செலுத்தப்பட்டு உள்ளது என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டை சின்னமலையில் உள்ள தனியார் பள்ளியில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் துவங்கி வைத்தார். பின்னர் மேடையில் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், தமிழகத்தில் ஜூன் மாதத்தில் 5 லட்சம் தடுப்பூசி வீணாகி உள்ளது என்று ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பாஜகவை சேர்ந்த நடிகை குஷ்பு தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் 4 லட்சம் தடுப்பூசிகள் வீணாகி உள்ளது அதனை திமுக ஆட்சியில் சமன் செய்தது மட்டுமல்லாமல் கூடுதலாக 3 லட்சம் அவர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். மேலும் தடுப்பூசி குறித்து தேவைப்பட்டால் வெள்ளை அறிக்கை வெளியிட தயாராக உள்ளதாக கூறினார்.
தமிழகத்தில் விரைவில் தடுப்பூசி தட்டுப்பாடு களையப்பட்டு தகுதியுள்ள அனைவருக்கும் தடுப்பு ஊசி செலுத்தப்படும் என்று தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், “தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணியை பொறுத்தவரை நீலகிரி மாவட்டத்தில் உள்ள பழங்குடியினர் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது ,தற்போது அந்த வகையில் நீலகிரியில் உள்ள அனைத்து தேயிலை தொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் ஜூலை மாதம் இறுதிக்குள் திருவண்ணாமலை,நாகூர், ராமேஸ்வரம்,வேளாங்கன்னி போன்ற சுற்றுலாத்தலம் மையங்கள் பகுதியில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை வழங்கப்பட்டு உள்ளது என்றும் அந்த வகையில் சென்னையில் சைதாப்பேட்டை சின்னமலை பகுதியில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கி உள்ளது விரைவில் இங்கு முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்ட சுற்றுலா மையமாக இது மாறும் என்று தெரிவித்தார். தமிழகத்தில் குழந்தைகளுக்கு கொரோனா சிகிச்சை அளிக்க மாவட்டங்களில் கொரோனா சிகிச்சை மையங்கள் உருவாகி உள்ளது என்றும் தற்போது வரை 10 ஆயிரம் படுக்கைகள் ஆக்சிசன் வசதியுடன் தயாராக உள்ளது என்று தெரிவித்தார்.
குழந்தைகளுக்கு நிமோனியா காய்ச்சல் ஊசி செலுத்தம் பணி 21 மாநிலங்களில் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. ஆனால் அதிமுக ஆட்சியில் இந்த ஊசியை செலுத்தும் பணியை துவங்கவே இல்லை, தனியார் மருத்துவமனையில் இந்த ஊசியின் விலை 4000 ரூபாய் என 3 முறை செலுத்த வேண்டும் என்றால் 12 ஆயிரம் ரூபாய் தேவை எனவே தமிழகத்தில் 5 வயதிற்கு கீழ் 9 லட்சத்து 23 ஆயிரம் குழந்தைகள் உள்ளனர். அனைவருக்கும் மத்திய இலவச தடுப்பூசி திட்டத்தின் கீழ் விரைவில் அனைவருக்கும் செலுத்தப்படும் என்று தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் நீட் தேர்வுக்கு வழங்கப்பட்ட பயிற்சி நடைமுறை தொடரும் என்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.