Rameshwaram To Srilanka: ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து - சட்டசபையில் அமைச்சர் எ.வ. வேலு அறிவிப்பு
தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த மார்ச் 20ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, எம்எல்ஏக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அந்தந்த துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். அந்த வகையில், இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து தொடங்குவது தொடர்பாக தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு சட்டப்பேரவை இன்று அறிவிப்பு வெளியிட்டார்.
இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து:
ராமேஸ்வரம் முதல் இலங்கை வரை குறைந்த தூர கப்பல் போக்குவரத்து தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று எ.வ.வேலு சட்டப்பேரவையில் தகவல் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து தலைமன்னார் (50 கி.மீ.), ராமேஸ்வரம் முதல் காங்கேசன்துறை (110 கி.மீ.) ஆகிய வழித்தடங்களில் கப்பல் போக்குவரத்து தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியான அறிக்கையில், "தமிழ்நாடு கடல்சார் வாரியம் இந்தியா - இலங்கை நாடுகளுக்கிடையே பயணிகள் குறைந்த தூர கப்பல் போக்குவரத்தினை
1. ராமேஸ்வரம்-தலைமன்னார் (50 கி.மீ)
2. ராமேஸ்வரம்-காங்கேசந்துறை (100 கி.மீ) ஆகிய வழித்தடங்களில் துவக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இந்தியா இலங்கை நாடுகளுக்கிடையே குறைந்த தூர பயணிகள் கப்பல் போக்குவரத்தினை துவக்கும் நோக்கில்
1. ராமேஸ்வரம்-தலைமன்னார் (50 கி.மீ)
2. ராமேஸ்வரம்-காங்கேசந்துறை (100 கி.மீ) ஆகிய வழித்தடங்களில் இயக்க ராமேஸ்வரம் சிறுதுறைமுக பகுதியில் கப்பலணையும் மேடை, பயணிகள் சுங்க மற்றும் குடிமை 33 பிரிவு சோதனை மையங்கள் ஆகிய கட்டுமானங்களை ஏற்படுத்துவதற்கு ஒரு விரிவான திட்ட அறிக்கை மற்றும் மதிப்பீடுகள் (Detailed Project Report. 35/36 Estimates) தயாரிக்கப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய மாவட்டங்கள் உருவாக்கம்:
முன்னதாக, புதிய மாவட்டங்கள் உருவாக்கம் குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் விளக்கம் அளித்திருந்தார்.
தமிழ்நாட்டில் மேலும் 8 மாவட்டங்களை உருவாக்குவது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் சேவூர் ராமச்சந்திரன் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் இந்த பதிலை அளித்துள்ளார்.
புதிதாக 8 மாவட்டங்களை உருவாக்க சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்து வருவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
ஆரணியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு அமைச்சர் ராமச்சந்திரன் பதில் அளிக்கையில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
சமீபத்தில், கும்பகோணத்தை புதிய மாவட்டமாக உருவாக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
தமிழ்நாட்டில் 12 லட்சம் பேருக்கு ஒரு மாவட்டம் என்ற அளவில் புதிய மாவட்டங்களை உருவாக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார். கடந்த 1966ஆம் ஆண்டு, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களாக இருந்த எண்ணிக்கை, தற்போது, 38 மாவட்டங்களாக அதிகரித்துள்ளது.