புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றி வதந்தி பரப்பிய வழக்கில் திருப்பம்...வதந்தி பரப்பியவர் சரண்..!
பீகாரில் கைதானவரை தமிழ்நாடு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றி வதந்தி பரப்புவதில் சூத்திரதாரியாக செயல்பட்ட மணிஷ் காஷ்யப் மீது தமிழ்நாட்டில் 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. புலம்பெயர் தொழிலாளர் பற்றி வதந்தி பரப்பியது மட்டுமின்றி ஏற்கெனவே பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் மணிஷ் காஷ்யப்.
புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து வதந்தி:
வதந்தி பரப்பியதாக கைது செய்யப்பட்டுள்ள மணிஷ் காஷ்யப் வங்கி கணக்குகளை பீகார் மாநில பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் முடக்கியது. பீகாரில் கைதானவரை தமிழ்நாடு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையால் முடக்கப்பட்டுள்ள காஷ்யப்பின் 4 வங்கிக் கணக்குகளில் ரூ.42.11 லட்சம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
காஷ்யப்பின் வங்கிக் கணக்குகளில் உள்ள பணம், வதந்தி பரப்புவதற்காக வழங்கப்பட்டதா என காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. சித்தரிக்கப்பட்ட வீடியோக்களை எடுக்க மணிஷ் காஷ்யப்புக்கு உதவியவர்கள் யார் எனவும் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாட்னாவில் வாடகைக்கு வீடு ஒன்றை எடுத்து பீகார் மாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதுபோல் வீடியோக்கள் படமாக்கப்பட்டதும் தெரிய வந்துள்ளது. மார்ச் 6ஆம் தேதி, படமாக்கப்பட்ட வீடியோவை மார்ச் 8ஆம் தேதி திட்டமிட்டு வதந்தி பரப்பும் நோக்கில் சமூக வலைதளங்களில் பகிர்ந்தது அம்பலம் ஆகியுள்ளது.
விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்:
வதந்தி பரப்புவதற்காக வீடியோக்கள் தயாரிக்க மணிஷ் காஷ்யப்புக்கு உதவியது யார் என காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. வதந்தி பரப்பிய வழக்கில் சரண் அடைந்துள்ள காஷ்யப், பொய்யான தகவல்களை பரப்புவதில் கைதேர்ந்தவர் என பீகார் போலீஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றி வதந்தி பரப்பிய வழக்கில் தேடுதல் நடவடிக்கையின் ஒரு பகுதியாக காஷ்யப் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது. ட்விட்டர் முடக்கப்பட்டவுடன் மற்றொரு பெயரில் கணக்கு தொடங்கி தன்னை காவல்துறை கைது செய்ததாக பொய்யான தகவலை வெளியிட்டுள்ளார் காஷ்யப்.
தன்னுடன் யுவராஜ் என்பவரையும் போலீஸ் கைது செய்ததாக காஷ்யப் பதிவிட்டதால் பீகாரில் சர்ச்சை ஏற்பட்டது. கைது நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளவில்லை என்று பீகார் காவல்துறை விளக்கம் அளிக்கும் அளவுக்கு வதந்தி பரப்பியவர் காஷ்யப். தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பப்பட்ட விவகாரத்தில் திடுக்கிடும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
முன்னதாக, தமிழ்நாட்டில் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக, குறிப்பாக பீகார் மாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலியான தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, தமிழ்நாட்டில் பீகார் மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து விசாரணை நடத்த பீகார் மாநிலத்தில் இருந்து பீகார் ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் பாலமுருகன் உள்பட 2 அதிகாரிகள் சென்னை வந்தனர்.
ஆய்வுக்கு பிறகு, பீகார் மாநிலத் தொழிலாளர்களுக்கு போதுமான பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதாக அவர்கள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.