(Source: Poll of Polls)
Cyclone Michaung: புரட்டியெடுத்த மிக்ஜாம் புயல்! ”நாளைக்குள் 100 சதவீத மின் விநியோகம்" - தலைமைச் செயலாளர் உத்தரவாதம்!
வெள்ள பாதித்த இடங்களில் நாளை மாலைக்குள் முழுமையாக மின் விநியோகம் செய்யப்பட்டு விடும் என்று தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.
தலைநகரை புரட்டிப்போட்ட மிக்ஜாம் புயல்:
மிக்ஜாம் புயல் நேற்று முன்தினம் வட கடலோர தமிழகத்தில் கடுமையான சேதாரத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் மிக்ஜாம் புயலால் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. கடந்த திங்கள் கிழமை பெய்த கனமழையால் சென்னை மாநகரமே முடங்கியுள்ளது. தற்போது சென்னையில் மழை இல்லாத சூழலில், தண்ணீர் சில இடங்களில் வடிந்துள்ளது.
ஆனால், பல்வேறு பகுதிகளில் தண்ணீர் வடியாமல் தேங்கி நிற்கிறது. பலரும் தங்கள் குடியிருப்புகளை இழந்து தவித்து வருகின்றனர். உண்ண உணவின்றி, இருக்க இடமின்றி தண்ணீரில் தத்தளித்து வருகின்றனர். மாநகராட்சி பணியாளர்கள், தீயணைப்பு வீரர்கள், மாநில பேரிடர் மீட்பு படை, இந்திய விமானப்படை, கடலோர காவல்படி, தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்தவர்கள் மீட்புபணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த மிக்ஜாம் புயலால் இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாளை மாலைக்குள் 100 சதவீத மின் விநியோகம்:
இந்நிலையில், வெள்ள நிவாரண பணிகள் குறித்து தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "சென்னையில் தற்போது 343 இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளது. மழைநீர் தேங்கி உள்ள பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. தற்போது 18 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் உள்ளனர். 3 ஆயிரம் தூய்மை பணியாளர்கள் களத்தில் உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மீட்பு பணிகளில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 95 சதவீதம் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது. சென்னை மாநகரில் 77 இடங்களில் மின்தடை நீடிக்கிறது. வியாசர்பாடி, பள்ளிக்கரணை, மடிப்பாக்கம் சில பகுதிகளில் மின் தடை நீடிக்கிறது.
இன்று மாலை அல்லது நாளைக்குள் 100 சதவீதம் மின் இணைப்பு வழங்கப்படும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 277 இடங்களில் மின் தடை நீடிக்கிறது. மொத்தமாக வெள்ளம் பாதித்த 4 மாவட்டங்களில் 655 இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட இடங்களில் நாளை மாலைக்குள் 100 சதவீதம் மின் இணைப்பு வழங்கப்படும்" என்றார்.
"நாளையும் இலவசமாக ஆவின் பால் தரப்படும்”
தொடர்ந்து பேசிய அவர், ”வெள்ள பாதித்த இடங்களில் தொடர்ந்து மக்களுக்கு உணவு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. நேற்றைக்கு மட்டும் சென்னை மாநகரில் 3.93 லட்சம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. இன்றைக்கு காலையில் 3 லட்சம் நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளன. சுமார் 34 ஆயிரம் பால் பவுடர் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.
இன்று ஆவின் மூலமாக 14.5 லட்சம் லிட்டர் பால் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. நாளையில் அனைத்து இடங்களிலும் பால் விநியோகம் சீராகும். சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நாளையும் இலவசமாக ஆவின் பால் தரப்படும்.
புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழுவை அனுப்பும்படி மத்திய அரசை கேட்டுள்ளோம். விரைவில் மத்திய குழு நேரில் ஆய்வு செய்து மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்கும் என்று நம்புகிறோம். மத்திய குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் மிக்ஜாம் புயல் நிவாரண நிதியை மத்திய அரசு அறிவிக்கும்" என்றார் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா.