Metti Oli Viji Uma Maheshwari | ‘மெட்டி ஒலி’ சீரியல் புகழ் உமா மகேஸ்வரி திடீர் மரணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்
Metti Oli Uma Maheswari Passed Away: கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 40.
‘மெட்டி ஒலி’ தொடரில் விஜி கதாபாத்திரத்தில் நடித்த நடிகை உமா மகேஸ்வரி காலமானார். கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 40. அவரது மறைவிற்கு சின்னத்திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சன்டிவியில் ஒளிபரப்பாகி வந்த வரவேற்பைப் பெற்ற தொடர்களில் ஒன்று 'மெட்டி ஒலி'. திருமுருகன் இயக்கத்தில் உருவான இந்த தொடரில் டெல்லி குமார், திருமுருகன், காவேரி, காயத்ரி, போஸ் வெங்கட், சஞ்சீவி, உமா மகேஸ்வரி, விஷ்வா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 2002-ஆம் ஆண்டு முதல் 2005-ஆம் ஆண்டு வரை இந்த தொடர் ஒளிபரப்பானது. சமீபத்திலும் இந்தத் தொடர் சன்டிவியில் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மெட்டி ஒலி சீரியலில் விஜி என்னும் கதாபாத்திரத்தில் நடித்த உமா மகேஸ்வரிக்கு ரசிகர்கள் அதிகம். மறு ஒளிபரப்பு செய்யப்பட்ட நிலையிலும் கூட, இந்த தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். இந்தத் தொடரில் சிதம்பரம் என்னும் கதாபாத்திரத்தின் 4-வது மகளாக நடித்திருந்தவர் விஜி (உமா மகேஸ்வரி). திருமுருகனுக்கு மனைவியாக விஜி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
மெட்டி ஒலி சீரியல் வெற்றிகரமாக நடைபோட்டதையடுத்து, 'வெற்றிக் கொடிகட்டு', 'அல்லி அர்ஜுனா’ உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும், 'ஒரு கதையின் கதை', 'மஞ்சள் மகிமை' உள்ளிட்ட தொடர்களிலும் உமா நடித்துள்ளார்.
இவருடைய கணவர் முருகன் கால்நடை மருத்துவராக இருக்கிறார். திருமணத்துக்குப் பிறகு எந்தவொரு தொடரிலும் நடிக்காமல், குடும்ப வாழ்க்கையைக் கவனித்து வந்தார். சில மாதங்களுக்கு முன்னால் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டார். அதற்குச் சிகிச்சை எடுத்துக் குணமானார். பின்பு மீண்டும் அவருக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டு உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
பலரும் விரும்பிய மெட்டி ஒலி தொடரில் ஒரு ப்ரோமோ காட்சி..
பாதிப்புக்கு தொடர் சிகிச்சை எடுத்து வந்த நிலையில், இன்று (அக்டோபர் 17) காலை திடீரென்று மரணமடைந்தார். முருகன் - உமா தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. உமாவின் மறைவு சின்னத்திரை நடிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் அவருடைய இந்த இளவயது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
பாசமான மகள் கதாபாத்திரத்தில் நடித்த விஜி, தவறான நோக்கம் கொண்ட ஒரு குற்றவாளியுடன் காதல் வயப்பட்டு, அவரால் ஏமாற்றப்பட்டதை அறிந்து தற்கொலைக்கு துணியும் கதாபாத்திரத்தில் பொருந்தியிருந்தார். குடும்பத்தினரின் ஆதரவால், அந்த மன அழுத்தத்தில் இருந்து வெளிவந்து தன்னை அன்பாக நடத்தும் கணவரிடம், பழைய மனத்தடைகளால் சிக்கல்களை எதிர்கொள்ளும் கேரக்டரில் அவரை மக்கள் வெகுவாக ரசித்துவந்தார்கள்