தமிழகத்தில் பொது போக்குவரத்து அமல் எப்படி? இன்று ஆலோசனை
நாளை முதல் இரவு ஊரடங்கு அமலுக்கு வரவுள்ள நிலையில் இரவில் பொதுப்போக்குவரது செயல்பாடுகள் குறித்து இன்று காலை 11 மணியளவில் போக்குவரத்து துறை சார்பில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் நேற்று ஒரேநாளில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். தலைநகர் சென்னையிலும் 3000ஐ தாண்டி தொற்றின் அளவு உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கினை அறிவித்தது தமிழக அரசு. இரவுநேர ஊரடங்கின்போது இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை பொதுப்போக்குவரது அனுமதிக்கப்படமாட்டாது என்று அரசு அறிவித்தது. விமானநிலையம் மற்றும் ரயில்நிலையம் செல்வதற்கு மட்டும் டாக்ஸி மற்றும் ஆட்டோ ஆகிவற்றை இயக்கலாம் என்றும் அரசு அறிவித்தது. இந்நிலையில் பத்து மணிக்கு பிறகு இரவு நேரத்தில் பொதுப் போக்குவரத்து இயக்கம் குறித்து போக்குவரத்துத் துறை சார்பில் இன்று பிற்பகலில் ஆலோசனை கூட்டம் நடக்கவுள்ளது.
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு பேருந்து சேவை எவ்வாறு இயக்கப்படும் என்பது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது. ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட இரவு நேர டிக்கெட்டுகள் நேரத்தை மாற்றி தரவும், அல்லது பயணத்தை ரத்து செய்தால் பணத்தை திருப்பித் தரவும் போக்குவரத்து துறை முடிவு எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 14 மணிநேரம் பயணம் செய்யக்கூடிய மாவட்டங்களுக்கு காலை 5 மணி முதல் 6 மணி வரை பேருந்து சேவையை இயக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே ஆம்னி பஸ் உரிமையாளர்கள் தங்களுக்கு கடந்தகால ஊரடங்கால் கடும் நஷ்டம் அடைந்திருப்பதாகவும், மீண்டும் இரவு நேர பயணத்திற்கு கெடுபிடி விதித்திருப்பதால் மேலும் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று அறிவிக்கை வெளியிட்டுள்ளனர். அது மட்டுமின்றி பகல் நேரத்தில் கூடுதல் ஆம்னி பஸ்களை இயக்கவிருப்பதாகவும் அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சார்பில் இன்று காலை அறிவிக்கப்பட்டது. அத்தோடு முதல்வரை சந்தித்து தங்கள் கோரிக்கையை வலியுறுத்தவும் அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
அரசு தரப்பில் தங்களின் சிரமத்திற்கு காரணமாக இருக்கும் சில விவகாரங்களிலிருந்து விலக்கு அளிக்கவும், முன்பதிவு செய்த பயணிகளுக்கு எதுமாதிரியான பதில் தர வேண்டும் என்பது குறித்து கேட்டறியவும் அரசு தரப்பை தொடர்பு கொள்ளவிருப்பதாக கூறும் ஆம்னி பஸ் உரிமையாளர்கள், அரசு வெளியிடும் வழிகாட்டுதலின் படி தங்கள் போக்குவரத்து பணியை துவங்கவும் திட்டமிட்டுள்ளனர். அரசு அறிவித்த இரவு நேரத்தில் குறிப்பிட்ட அளவு பேருந்துகளை இயக்க முடியாது என்பதால் அதற்கு மாற்றாக பகலில் முன்கூட்டியே தூரத்திற்கு ஏற்ப பேருந்துகளின் அட்டவணையை மாற்ற ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
அரசு தரப்பில் இன்று அறிவிக்கும் அறிவிப்பை பொருத்து அடுத்த கட்ட போக்குவரத்து இயக்கம் இருக்கும் என தெரிகிறது.