செறிவூட்டப்பட்ட அரிசியை மறைமுகமாக மக்களிடம் சோதனை செய்யும் அரசு - சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு
செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படுவது குறித்து எந்த அறிவிப்பும் வழங்காமல் மறைமுகமாக மக்களுக்கு அரசு வழங்கி வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த பல பிரச்சனைகள் மனு அளித்து பேசினர். இந்நிலையில் கூட்டத்தில் கலந்து கொண்ட சீர்காழியை சேர்ந்த இயற்கை விவசாயி நலம் பாரம்பரிய அறக்கட்டளையின் செயலாளர் சுதாகர் செறிவூட்டப்பட்ட அரிசியை தடை செய்ய வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், மக்களுக்கு தீங்கு விளைவிக்ககூடிய செறிவூட்டப்பட்ட அரிசி திட்டம் அரசின் தவறான முடிவும் இத்திட்டத்தினை தடை செய்ய வேண்டும், இந்திய அரசமைப்பு சாசனம் 13-வது கோட்பாட்டின்படி பொதுமக்களின் அடிப்படை உரிமைகளாக 3-வது பாகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எதையும் அரசின் கொள்கை முடிவுகள் பாதிக்காமல் இருக்க வேண்டும். அப்படி பாதிக்குமாறு அரசின் முடிவுகள் இருந்தால் அது செல்லாது என்று இந்திய அரசியல் சாசனம் குறிப்பிடுகிறது.
இந்திய அரசியல் அமைப்பு Article 21-ன் படி வாழ்வதற்கான உரிமை இருப்பதால் இந்த வேதிமருந்து திணிக்கப்பட்ட செறிவூட்டப்பட்ட அரிசியில் மக்களின் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வேதிபொருட்கள் இருக்கிறது. எந்த ஒரு வேதிமருந்துகளிலும் ஒவ்வாமை ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது என்பதால் இது மக்களின் உயிரையோ உடலையோ பாதிக்கும் ஆபத்து இருப்பதால் Article 21-ன்படி செறிவூட்டப்பட்ட அரிசியை அரசின் கொள்கை முடிவாக திணிப்பது இந்திய அரசமைப்பு சாசனத்திற்கு விரோதமானது சட்டத்திற்கு புறம்பானது.
Anicle 29-ன் படி ஒவ்வொரு மாநிலத்திற்கும் மரபு, வரி வடிவம், கலாச்சாரம், பண்பாடு சார்ந்த உரிமைகளை பறிக்கக்கூடாது என்று 3- வது பாகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த 3-வது பாகத்தில் பாதிக்கபடக்கூடிய அரசின் கொள்கை முடிவுகள் இந்திய அரசியலமைப்பு சாசனத்தின்படி செல்லாது. அரசின் முடிவு சட்டத்திற்கு புறம்பானது என்பதால் Article 29-ன்படி மரபு சார்ந்த உரிமை என்பதால் மரபு சார்ந்த உணவு வகைகளை நீங்கள் பொது விநியோக திட்டத்தில் கொடுக்க வேண்டும் செறிவூட்டப்பட்ட அரிசி கொடுப்பது இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானது.
மேலும் RTI ல் 24.02.2023 -ம் தேதி மத்திய அரசிடம் கேட்டு பெறப்பட்ட தகவலின்படி முறையான சோதனை செய்யப்பட்டதா என்ற கேள்விக்கு, சோதனை செய்வதற்கு தான் மாநில அரசுக்கு அனுப்பியுள்ளோம் என்று பதில் கொடுத்துள்ளனர். வேதி மருந்து கலந்து திணிக்கப்பட்ட செறிவூட்டப்பட்ட அரிசியை மக்களிடம் மக்கள் அனுமதி இல்லாமல் சோதனை செய்வது ஜனநாயகத்திற்கு எதிரானது மட்டும் அல்ல இதனை செய்யும் எந்த அரசு அதிகாரிகாளானாலும் குற்றச் செயல். இதற்கு அந்தந்த மாவட்ட ஆட்சியரே பொறுப்பேற்று இந்த குற்றத்தை அவர் செய்திருக்கிறார் என்று நாங்கள் கருதவேண்டியிருக்கிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த செறிவூட்டப்பட்ட அரிசி திட்டம் எங்களுக்கு வேண்டாம் என்று ரேசன் கடையில் வழங்குவதை தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு கிராமசபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என இந்திய அரசியல் அமைப்பு சட்டங்கள் குறிப்பிடப்பட்டிருந்தது. மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் இது குறித்த அறிக்கையை மேலிடத்திற்கு அனுப்புவதாக தெரிவித்தார்.
தொடர்ந்து இதுகுறித்து கருத்து தெரிவித்த சுதாகர், செறிவூட்டப்பட்ட அரிசி ஏப்ரல் மாதம் முதல் தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தில் மூலம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் செறிவூட்டப்பட்ட அரிசி குறித்து எந்த ஒரு விளக்கமும் அளிக்காமல், வழங்குவதை மக்களுக்கு தெரிவிக்காமல், கடந்த மூன்று மாத காலங்களாக சோதனைக்காக தமிழக மக்களுக்கு அனைத்து ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு வழங்கி வருவது ஒருபுறம் என்றாலும் அவர்கள் மேற்கொண்டு வரும் சோதனையின் முடிவு என்ன என்பதையும் மக்களுக்கு தெளிவுபடுத்தவில்லை, ரேஷன் கடைகளில் அரிசி வாங்கி உண்ணும் கோடிக்கணக்கான ஏழை மக்களின் உடல் நலத்தில் அரசு இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு மாறாக விளையாடி வருகிறது என குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.