தாம்பரம்: டாஸ்மாக் கடைகளை அகற்ற மக்கள் போராட்டம்! கொந்தளிப்பில் குடியிருப்புவாசிகள், அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து அதிரடி!
பல்லாவரத்தில் டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரி அனைத்துக் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் மாபெரும் மறியல் போராட்டம் நடைபெற்றது

"தாம்பரம் மாநகராட்சி பகுதியில் செயல்பட்டு வரும் இரண்டு டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டுமென அனைத்து கட்சியினர் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது"
டாஸ்மார்க் கடைக்கு எதிராக போராட்டம்
சென்னை அடுத்த தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்லாவரம் 13-வது வார்டில், குடியிருப்புப் பகுதிகள், கோயில்கள், மசூதி மற்றும் மருத்துவமனைகளுக்கு அருகில் செயல்பட்டு வரும் இரண்டு டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரி, இன்று அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சமூக இயக்கங்கள் சார்பில் மாபெரும் மதுக்கடை மறியல் போராட்டம் நடைபெற்றது.
குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள இந்த இரண்டு கடைகளால் ஏற்படும் அசெளகரியங்கள் மற்றும் சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகள் குறித்து குடியிருப்போர் பொது நல சங்கம் நீண்ட நாட்களாகக் கோரிக்கை வைத்தும், பல கட்டங்களாக மனுக்கள் அளித்தும் கடைகள் தொடர்ந்து செயல்பட்டு வந்தன. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று போராட்டக்களத்தில் இறங்கினர்.
ஒன்றிணைந்த பிரதான கட்சிகள்
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இந்தப் போராட்டத்தை மேலும் வலுப்படுத்தும் விதமாக, அ.தி.மு.க., பா.ம.க., நாம் தமிழர் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள், எஸ்.டி.பி.ஐ. கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், அப்பகுதி மக்களும் இணைந்து மதுக்கடை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் இணைந்து மதுக்கடைக்கு எதிராகத் தீவிரமாகப் போராட்டத்தில் ஈடுபட்டதால், அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்ததால், பல்லாவரம் 13வது வார்டுப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்தக் கடைகள் அகற்றப்படும் வரை போராட்டத்தைத் தொடரப்போவதாகப் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
பொதுமக்கள் ஆவேசம்
இந்தப் போராட்டம் குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், பலமுறை இந்த செயல்பட்டு வரும் மது கடைகளை அகற்ற வேண்டும் என மனுக்களை கொடுத்து இருக்கிறோம். குடியிருப்பு பகுதி அருகில் டாஸ்மார்க் கடைகள் செயல்பட்டு வருவதால், மிகுந்த பாதிப்படுகிறோம். குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் அந்த வழியாக செல்ல முடியாத சூழலும் இருக்கிறது. டாஸ்மார்க் கடை பக்கத்தில் வழிபாட்டுத்தலங்களும் இருக்கிறது ஆனால் அதை மீறியும் டாஸ்மார்க் கடை செயல்பட்டு வருவது கண்டிக்கத்தக்கது என தெரிவித்தனர்.





















