மக்களவை தேர்தலை குறிவைக்கும் மனிதநேய மக்கள் கட்சி.. கேட்ட தொகுதியை கொடுக்குமா திமுக?
தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் திமுக, இப்போது வரை ஜவாஹிருல்லா தலைமையிலான மனிதநேய மக்கள் கட்சியை பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை.
அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்குவங்கம், பிகாருக்கு அடுத்தப்படியாக அதிக மக்களவை தொகுதிகளை கொண்ட மாநிலமாக உள்ளது. இதனால், மத்தியில் ஆட்சி அமைப்பதற்கு தமிழ்நாடு எப்போதும் முக்கிய பங்காற்றி வந்துள்ளது.
ஆனால், கடந்த 2014ஆம் ஆண்டுக்கு பிறகு, தமிழ்நாட்டின் செல்வாக்கு வெகுவாக குறைந்துள்ளது. தென்மாநிலங்களில் குறிப்பிடத்தகுந்த வெற்றியை பெறாவிட்டாலும் வடக்கு மற்றும் மத்திய இந்தியாவில் பெரிய வெற்றியை பதிவு செய்ததால் பாஜக எளிதாக ஆட்சி அமைத்தது. ஆனால், இம்முறை ஆட்சிக்கு எதிரான மனநிலை, விலைவாசி உயர்வு ஆகிய காரணங்களால் வடக்கு மற்றும் மத்திய இந்தியாவில் கடந்த முறை பெற்றது போல எளிதான வெற்றியை பாஜகவால் பெற முடியாது என கருதப்படுகிறது.
பரபரக்கும் தேர்தள் களம்:
எனவே, வட மாநிலங்களில் பெறும் தோல்வியை தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் வெற்றிபெறுவது மூலம் ஈடுகட்ட பாஜக முயற்சித்து வருகிறது. ஆனால், அதற்கு திமுக தலைமையிலான கூட்டணி பெரும் சவாலாக உள்ளது. காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி என பலமான கூட்டணியை கொண்டுள்ளது.
மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில், திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. டி.ஆர்.பாலு தலைமையிலான திமுக தொகுதி பங்கீட்டு குழுவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் பொன்முடி, நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா, மாநிலங்களவை உறுப்பினரும் கொள்கை பரப்பு செயலாளருமான திருச்சி சிவா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இவர்கள் தான் கூட்டணி கட்சிக்ளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அந்தவகையில், காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று முடிந்துள்ளது. விரைவில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு தொகுதிகள் இறுதி செய்யப்பட உள்ளன. விடுதலை சிறுத்தைகளுடன் வரும் 12ஆம் தேதி தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
தயாரான மனிதநேய மக்கள் கட்சி:
இந்த சூழலில், தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் திமுக, இப்போது வரை ஜவாஹிருல்லா தலைமையிலான மனிதநேய மக்கள் கட்சியை பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை.
இப்படிப்பட்ட சூழலில், சென்னை காமராஜர் அரங்கில் மனிதநேய மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. அக்கட்சியின் தலைவரும் சட்டப்பேரவை உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நிலைப்பாடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசப்பட்டது.
பல்வேறு முக்கிய முடிவுகள் குறித்து இந்தப் பொதுக்குழுவில் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டுள்ளன. வரும் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஜவாஹிருல்லா, "2024 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிட வேண்டும் என தீர்மானித்துள்ளோம். திமுக கண்டிப்பாக எங்கள் கட்சிக்கு ஒரு தொகுதியை ஒதுக்க வேண்டும் என பொதுக்குழுவில் தீர்மானித்துள்ளோம்" என்றார்.